இந்தியாவின் உயர்கல்வியில் மருத்துவம் மற்றும் தொழிற்கல்விக்கான கதவுகளைத் திறக்கும் நுழைவுத் தேர்வுகளை ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்கள் எழுதுகிறார்கள்.
மாணவர்களின் பல ஆண்டுகால உழைப்பும், அவர்களின் பெற்றோர்களின் வியர்வையும் அடங்கிய எதிர்காலம், இன்று ‘தேசிய தேர்வு முகமை’ (என்.டி.ஏ.) என்ற அமைப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த அமைப்பு செயல்படும் விதமும், அதன் பின்னணியில் உள்ள அதிர்ச்சியூட்டும் உண்மைகளும் இந்தியாவின் கல்வி முறையே எந்த அளவிற்குச் சிதைந்துபோயிருக்கின்றன என்பதைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.
ஒப்பந்தக்காரர்களின் கைகளில் ஒட்டுமொத்த நிர்வாகம்
ஒரு கோடிக்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் என்.டி.ஏ. அமைப்பில், தொடக்கம் முதலே வெறும் 39 நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர். எஞ்சியப் பணிகள் 73 ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் 124 வெளியாட்களைக் கொண்டுதான் நடத்தப்பட்டு வந்திருக்கின்றன.
இதில் கொடுமை என்னவென்றால், அந்த 124 வெளியாட்கள் யார்? அவர்களின் தகுதி என்ன? பின்னணி என்ன? என்ற எந்தக் குறைந்தபட்ச விவரமும் அரசுக்குத் தேவையாக இருக்கவில்லை. அரசியல்வாதிகளின் உறவினர்களோ அல்லது அமைச்சர்களுக்கு வேண்டியவர்களோ சிபாரிசு செய்தால், உடனடியாகப் பணி ஆணை வழங்கி அமரவைத்து விடுகிறார்கள்.
தற்போது என்.டி.ஏ.-வின் சாயம் வெளுத்து, முறைகேடுகள் நாடறிய அம்பலமானபோது, நடவடிக்கை எடுப்பது போல பெயரளவில் பெரும்பாலான ஒப்பந்தப் பணியாளர்களைப் பணிநீக்கம் செய்து அரசு நாடகமாடுகிறது. ஆனால், தற்போதைய நிலவரப்படி அந்த அமைப்பில் வெறும் 24 நிரந்தர ஊழியர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.
இடைத்தரகர்களின் சரணாலயமாக மாறிய தேர்வு முகமை
வினாத்தாள் ரகசியத்தன்மை, தரவு பாதுகாப்பு தேர்வு மய்யக் கண்காணிப்பு போன்ற மிக மிக உணர்வுப்பூர்வமான பணிகளை, தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும்போது அங்கு பொறுப்புக்கூறல் என்பது முற்றிலுமாக அற்றுப்போகிறது.
குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள், பண ஆசை காட்டும் இடைத்தரகர் களிடமும், வினாத்தாள் கசியவிடும் குற்றக் கும்பல்களிடமும் எளிதில் பலியாகிவிடுகின்றனர். இதனால்தான் ஆண்டுதோறும் வினாத்தாள் கசிவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே சென்றன.
லாப நோக்கில் இயங்கும் வணிக நிறுவனம்
மாணவர்களிடமிருந்து தேர்வுப் படிவக் கட்டணமாகக் கோடிக்கணக்கில் நிதியைச் சூறையாடும் ஒன்றிய அரசு, என்.டி.ஏ. அமைப்பை ஒரு சேவை நிறுவனமாகப் பார்க்காமல் ‘லாபம் ஈட்டும் வணிக நிறுவனமாக’ மாற்றிவிட்டது.
முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும்போதெல்லாம், மேல்மட்டத்தில் இருக்கும் ஓரிரு அதிகாரிகளைப் பலிகடா ஆக்குவதும், இடைநீக்கம் செய்வதும் ஒரு தற்காலிக நாடகமே தவிர, அது ஊழலின் மூலகாரணத்தை ஒருபோதும் ஒழிக்காது. கடுமையான வெற்றுச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் இயற்றி விட்டதால் மட்டுமே பேப்பர் லீக்கைத் தடுத்துவிட முடியாது.
10 ஆண்டுகள் மறைக்கப்பட்ட தணிக்கை அறிக்கை
என்.டி.ஏ. உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நெருங்கப் போகும் நிலையிலும், இன்றுவரை அதன் செயல்பாடு மற்றும் நிதி மேலாண்மை குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தணிக்கை அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இந்த அமைப்பின் பின்னணியில் நடக்கும் மகா மோசடிகளையும், நிர்வாகச் சீர்கேடுகளையும் அரசு மூடி மறைக்க முற்படுகிறது என்பதற்குக் காலதாமதமாகும் இந்தத் தணிக்கை அறிக்கையே வெளிப்படையான சான்றாகும்.
தீர்வு என்ன? என்.டி.ஏ. கலைக்கப்பட வேண்டும்!
கோடிக்கணக்கான மாணவர்களின் உழைப்பைக் கேலிக்கூத்தாக்கும் இந்த ‘ஒப்பந்த நிர்வாக முறைக்கு’ உடனடியாக முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
- என்.டி.ஏ. உடனடி கலைப்பு:தகுதியும் திறமையுமற்ற, அதிகார மய்யப்படுத்தப்பட்ட
என்.டி.ஏ. என்ற அமைப்பை ஒன்றிய அரசு உடனடியாகக் கலைக்க வேண்டும். - மாநிலங்களின் அதிகாரத்தை மீட்டெடுத்தல்: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஏற்கெனவே பல ஆண்டுகளாகத் தேர்வுகளைச் சிறப்பாக நடத்தி வந்த பல தேர்வு முகமைகள் இயங்கி வருகின்றன. எனவே, முன்பிருந்ததைப் போல மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே தேர்வுகளை நடத்தும் பரவலாக்கப்பட்டமுறையை மீண்டும் கொண்டுவர வேண்டும்.
தேர்வு அமைப்பை அடிமட்டம் வரை முழுமையாகப் புனரமைத்து, மாநிலங்களின் கல்வி உரிமையை மீட்டெடுக்கும் வரை வினாத்தாள் கசிவுக்கும், மாணவர்களின் அநீதிக்கும் நிரந்தரத் தீர்வு கிடைக்காது!
