மதச் சடங்குகள், ஈமக் காரியங்களால் மாசு படுத்தலாமா? தாமிரபரணி ஆறு மாசில்லாத ஆறாகுமா? – கி.இரா.

6 Min Read

இந்தியாவைப் பொறுத்த அளவில் மதவழிபாடு, சடங்குகள் என அனைத்து வகை நீர்நிலைகளையும், அசுத்தங்களை நிரப்பி மாசுபடுத்துவது முடிவில்லாத தொடர்கதை என நீண்டுதான் வருகின்றது.

‘நீரின்றி அமையாது உலகு’ என்று நீருக்குத் தனிப் பெருமை சூட்டிய திருவள்ளுவரின் அருமொழியைச் சற்றும் பொருட்படுத்தாத மக்கள் நீர்நிலைகளைப் பாழ்படுத்தக் கொஞ்சமும் தயங்குவதில்லை. மதச் சடங்குகளால் மட்டுமல்ல; இரசாயனக் கலவைகளைக் கலக்கச் செய்தும், கழிவு நீர் வடிகால்களாக்கியும், ஆக்கிரமிப்புச் செய்து அவற்றை முற்றிலும் காணாமல் போகச் செய்தும் அன்றாட மக்களின் நீரின் தேவைக்கும் கூட திண்டாடச் செய்கின்றனர்.

தமிழ்நாட்டின் சிறந்ததொரு அடையாளக் கோளமான  தாமிரபரணி ஆறு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிறது. பழைய புன்னைக்காயலில், மன்னார் வளைகுடாவில் கடலுடன் கலக்கின்றது. 128 கி.மீ. பயணிக்கின்ற இந்த ஆறு உருவாகுவதும், கடலில் சங்கமிப்பதும் தமிழ்நாட்டில் தான் என்பது இதன் தனித்தன்மையாகும்.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வேளாண் சாகுபடிக்கும், 7 மாவட்டங்களின் மக்களது குடிநீர் தேவைக்கும் இந்த ஆற்று நீர் பயன்படுகின்றது. ஏராளமான துணை நதிகளும் இதற்கு உள்ளன.

தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள ஆதிச்ச நல்லூர், சிவகளை, கொற்கை உள்ளிட்டப் பல ஊர்கள் அகழாய்வுப் பகுதிகளாகும். இந்தியாவிலேயே ஆற்றின் கரைப் பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் தொடங்கியதும் இங்குதான் என்பதும் வரலாற்றுக் குறிப்பாகும். சங்க காலத்தில் இந்த ஆறு ‘பொருநை’, ‘தண்பொருநை’ என அழைக்கப்பட்டுள்ளது.

‘பாண்டி நாடே பழம்பதி, ஆறில்லா ஊருக்கு அழிவில்லை’ என வரலாற்றுப் பெருமை வாய்ந்த இந்த ஆறு குறித்துப் புகழ்ந்து சங்க இலக்கியப் பாடல்கள் பலவும் உள்ளன. புவியியல் வல்லுநரான தாலமி (கி.பி.119-161 எழுதிய நூலில் தாமிரபரணி ஆறு பற்றிய குறிப்புகள் 12 இடங்களில் உள்ளன. இப்படி எண்ணற்ற பெருமைகளைக் கொண்டதுதான் தாமிரபரணிப் பேறாராகும்.

இத்தகைய சிறப்புவாய்ந்த இந்த ஆற்றில் நீராடினால் பாவங்கள் தீரும், விரதம் இருந்து நீராடினால் புண்ணியம் கிடைக்கும் என்றும், அவ்வாறு நீராடிவிட்டு, அணிந்து வந்த வேட்டி, துண்டுகளையும், புடவைத் துணிகளையும், ஆற்றிலேயே வீசிவிட்டுச் செல்வார்கள். இந்தத் துணிகள் மட்காமல், பிளாஸ்டிக் நார்ச் சத்துகளையும், வேதிப் பொருள்களையும் ஆற்றில் அதிக அளவில் கலந்துவிடும்.

மக்களிடம் மூடநம்பிக்கைகளுக்குப்
பஞ்சமா என்ன?

பூஜைப் பொருள்கள், காய்ந்த பூக்கள், எலுமிச்சைப் பழங்கள், கடவுளர் படங்கள், ஹோமபஸ்மம், பிளாஸ்டிக் பைகளில் கட்டப்பட்ட மனிதக் கழிவுகள் இன்னும் பலவற்றைப் ‘புனிதமான இந்த நதியில் கொட்ட வேண்டும்’ என்ற மூடநம்பிக்கையால் இந்த ஆற்றில் வீசுகின்றனர். கரையோரங்களில் நீத்தார் நினைவு நாள் நடத்தும்போது, கொட்டப்படுகின்ற பூஜைப் பொருள்கள் ஏராளமானவையாகும். இறுதி நிகழ்வுகளின்போது சேகரிக்கப்படுகின்ற சாம்பலைப் பல குடும்பத்தினரும் இந்த ஆற்றில் கொட்டுவதால் இந்த ஆறு எந்த அளவுக்கு மாசடைந்து துர்நாற்றம் எடுக்கும் என்பதை நீங்களே யூகித்துப் பாருங்கள். இவையோடு ஆயிரக்கணக்கான டன் அளவில் சுத்திகரிக்கப்படாத தொழிற்சாலைகளின் கழிவுகள், சாக்கடை சேருமிடமாகவும் இந்த ஆறு இருக்கின்றது.

அம்பாசமுத்திரம் தாலுகாவில் ஆற்றங்கரையில் உள்ள 400 ஆண்டுகள் பழைமையான கல் மண்டபத்தில் இருந்து தன்னை வெளியேற்றக் கூடாது என்று அதிகாரிகளுக்கு எதிராகத் தனி நபர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி அகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

முதற்கட்ட விசாரணையின்போது (11.7.2026) “மதத்தின் பெயரால், மதச் சடங்குகள், ஈமச் சடங்குகள் பெயரால் நீர்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமையில்லை. சடங்குகளின் பெயரால் தாமிரபரணி ஆற்றை மாசு படுத்துவதை அனுமதிக்க முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறினர்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் (30.7.2026) நீதிபதிகள் இறுதித் தீர்ப்பைத் தந்துள்ளனர். அதில், “தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல. அதற்கு சட்டபூர்வ நபர் என்ற தகுதிநிலை வழங்கப்படுகின்றது” என்றனர். இதன்படி தனக்கெனத் தனி உரிமைகளைக் கொண்ட ஓர் உயிராக தாமிரபரணி ஆறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

நீதிபதிகள் சடங்குகள் என்ற போர்வையில் ஆடைகள் மற்றும் பொருள்களை ஆற்றில் வீசுவதற்கும், கொட்டுவதற்கும் முற்றிலுமாகத் தடை விதித்தனர். இந்த உத்தரவினை மீறி மாசுபடுத்துபவர்களுக்கு உள்ளாட்சி அதிகாரிகள் அபராதம் விதிக்க வேண்டுமென்றும், ஆற்றை அசுத்தப்படுத்துவது நீதிமன்ற அவமதிப்புச் செயலாகக் கருதப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்றும் நீதிபதிகள் எச்சரித் துள்ளனர்.

தாமிரபரணி மாசுபாட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நெல்லை, தூத்துக்குடி மாவட்ட நிர்வாகங்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்றும், உள்ளூர் காவல்துறை இதற்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டுமென்றும் நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.

இதன்படி இறந்தவர்கள் பயன்படுத்திய, பயன்படுத்தாத  ஆடைகள், துண்டுகள், செருப்புகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய பிற பொருள்களை சடங்கு ரீதியாக தாமிரபரணி ஆற்றில் மனம் போனப் போக்கில் வீசிவிட்டுச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

தாமிரபரணி ஆற்றைத் தொடர்ந்து தூய்மையானதாக வைத்திருக்க எச்சரிக்கைப் பலகைகளை வைத்தும், ஆற்றுப் பாலம், கரைப்பகுதிகளில் மக்கள் கழிவுகளை வீசுவதைத் தடுப்பதற்கு இரும்பு வலைகளை அமைத்தும், பொது மக்களிடையே பகுத்தறிவு, விழிப்புணர்வை ஏற்படுத்தத் தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்களை உள்ளடக்கிய தூய்மைப் பணிக் குழுக்களை ஒருங்கிணைத்தும், தடையை மீறி மாசுபடுத்துபவர்களுக்கு அபராதம் விதித்துத் தண்டிப்பதில் முனைப்புக் காட்டியும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தீவிர முன்னெடுப்புகளை எடுத்து வருவது மிகவும் பாராட்டத்தக்கதே!

இதன்படி, “தாமிரபரணி ஆற்றில் துணிகளையோ, குப்பைகளையோ, ஈமச் சடங்குகளின் பயன்பாட்டுப் பொருள்களையோ ஆற்றில் போடுபவர்களுக்கு இனி 500 ரூபாய்க்குப் பதிலாக ரூ.2 ஆயிரம் என உயர்த்தப்பட்டு வசூலிக்கப்படும். முதல் தகவல் அறிக்கையின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் உறுதிபட அறிவித்துள்ளதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ஆனால், அதே நிலையில், அவரவர் வீடுகளில் உள்ள துணிகள், ஈமச் சடங்குப் பொருள்கள் முதலானவற்றை ஒழித்து அவற்றை அப்புறப்படுத்த வேண்டியது அவரவர் கடமையாகும். அப்படி இல்லாது, ஆடிப்பெருக்கு, தைப்பூசம் போன்ற திருவிழா நாள்கள் என்றும், ஈமச் சடங்குகளின் போதும் பக்தர்கள் கொண்டு வருகின்றப் பொருள்களை ஆங்காங்கு சேகரிப்பு மய்யங்கள், பெட்டிகள் அமைத்து அதில் போடுமாறு பக்தர்களைக் கேட்டுக் கொள்வது எந்த வகையில் சரியென்று நமக்குப் புலப்படவில்லை!

அத்தகையப் பொருள்களை ஆற்றின் கரையோரங்களில் அமைக்கப்படுகின்ற மய்யங்களில் ஒன்றாகச் சேர்ப்பது மீண்டும் ஒரு சுகாதாரச் சீர்கேட்டினையே ஏற்படுத்தும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?

நீதிபதிகளே கூட, ஆற்றை ஒரு நபராகக் கருதி, சட்டபூர்வ நபர் என்றொரு தகுதி நிலையை வழங்கிவிட்டு, தாமிரபரணி ஆறு மாசடையாமல் காப்பாற்றப்படுவதற்கு தண்டனைகளில் கடுமை காட்டவேண்டுமெனவும் அறிவுறுத்திவிட்டு, இறந்தவர் களை எரியூட்டல் செய்து மிஞ்சுகின்ற சாம்பலை சுடப்படாத களிமண் கலசங்களில் மட்டுமே வைத்து ஆற்றில் கரைக்க வேண்டும், கரைக்கலாம் என்று அனுமதி அளித்துள்ளது சரிதானா?

இது போதாதா நம்மாள்களுக்கு? ஆற்றில் அவர்கள் கொண்டு வந்து குவிக்கின்ற களிமண் கலசங்கள் ஒன்றாகி ஆற்றின் போக்கிற்கு பெரும் தடையை ஏற்படுத்துமே! இறந்தவர்களின் சாம்பல் மட்டும் என்ன சுத்தமானதா? சுகாதாரமானதா? அதுவும் ஒருவகை அசுத்தமான கழிவுதானே! இறந்தவர்களின் உடலைக் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்திருந்தாலும் கூட எவ்வளவு சீக்கிரத்தில் அப்புறப்படுத்த முடியுமோ –  அவ்வளவு சீக்கிரத்தில் அப்புறப்படுத்துவதுதான் சிறந்தது என்று அறிவியலாளர்கள், மருத்துவர்கள் வற்புறுத்திக் கூறுகின்ற காலகட்டத்தில் அதன் சாம்பலுக்கு விதிவிலக்குத் தர முடியுமா?

இதுபோன்றதொரு நீத்தார் நினைவு நாளின்போது, கரூர் மாவட்டம் நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவர், ஓய்வு பெற்ற இந்தியன் வங்கி மேலாளர் சீனிவாசன் என மொத்தமாக ஏழு பேர் அந்தச் சகோதரர்களது தாய்க்குத் “திதி” கொடுக்க என்று கரூர் அருகே காவிரி ஆற்றுக்குச் சென்றுள்ளனர். (4.8.2026). அப்போது காவிரியில் தண்ணீர் இல்லாததால் ஆழமானப் பகுதியில் “திதி” கொடுக்கச் சென்றபோது நீரில் மூழ்கி அந்தச் சகோதரர்களும், உடன்சென்ற சீனிவாசனும் இறந்து விட்டனர் என்னும் கொடுந்துயரம் ஏற்பட்டதும் சிந்தனைக்குரியதாகும்.

கடந்த 5 ஆண்டுகளில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ ஆட்சி நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, அவற்றைத் தூய்மைப்படுத்துவதில் தனிக் கவனம் எடுத்துச் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போதுள்ள இந்த த.வெ.க. அரசும் கூட தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்புக்கென்று தூத்துக்குடி முதல் பாபநாசம் வரையிலான கரையோர மேம்பாட்டுப் பணிகளுக்கென்று ஒதுக்கியுள்ள ரூ.200 கோடித் திட்டம் கூட முழுமை பெற வேண்டுமானால் – செம்மையடைய வேண்டுமானால் மண் பாண்டக் கலயங்களில் இறந்தவர் சாம்பலை வைத்துக் கரைக்கலாமென்பதையும், பரிகாரத் துணி – பொருள்கள்  சேகரிப்பு மய்யங்களை ஏற்படுத்துவதையும் தவிர்ப்பார்களா? என்கின்ற எதிர்பார்ப்பு மேலோங்குகின்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *