புதுடில்லி, ஜூலை 31 தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கருநாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விட கருநாடக அரசு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் காவிரி நீரை திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், கருநாடகத்தில் குறைந்த அளவே தண்ணீர் இருப்பதாகக் கூறி, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரைத் திறந்து விட இயலாது என கர்நாடக அரசு கூறியது.
இருப்பினும், கருநாடக அரசின் கூற்றை ஏற்க மறுத்து, ஜூலை 29 முதல் 15 நாள்களுக்கு தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கருநாடகம் திறந்துவிட வேண்டும் என காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டது. ஆனால், காவிரி நீரை கர்நாடக அரசு திறந்து விடவில்லை.
இந்த நிலையில், தமிழ்நாடு – கருநாடகம் இடையேயான காவிரி நீர்ப் பிரச்சினை குறித்து டில்லியில் நேற்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவின்படி, தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாள்களுக்கு காவிரி நீரைத் திறந்து விட கருநாடகத்துக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
