சண்டிகர், ஜூலை 16 அரசின் செயல்பாடுகளை விமர்சித்து முழக்கங்களை எழுப்புவது ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமை என்றும், அது தேசத்துரோக குற்றமாகாது என்றும் பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.
தேசத் துரோக வழக்கு
கடந்த 2017ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் கைத்தல் பகுதியில் நடந்த வன்முறை மற்றும் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக 4 பேர் மீது காவல்துறையினர் தேசத் துரோக வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த கீழ் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அரசுக்கு எதிராக முழக்கமிட்டது மட்டுமே தேசத்துரோக குற்றமாகாது எனக் கூறி அவர்களை விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் பட்ட வழக்கு, நேற்று (15.7.2026) பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
குடிமகனின் அடிப்படை கருத்துரிமை
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து பின்வருமாறு விளக்கமளித்தனர்: அரசின் செயல்பாடுகளை விமர்சித்து முழக்கங்களை எழுப்புவது மற்றும் அதன் கொள்கைகளை எதிர்த்துப் போராடுவது ஒரு குடிமகனின் அடிப்படை கருத்துரிமை ஆகும்.
கலவரம் வேறு, தேசத்துரோகம் வேறு
வன்முறைப் போராட்டம் என்பது கலவரமாக அமையலாமே தவிர, அத்தகைய செயல்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்பையோ அல்லது அவமதிப்பையோ தூண்டும் தேசத்துரோக செயல் களாகக் கருதப்படாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஜனநாயக அமைப்பில், அரசாங்கத்திற்கு அல்லது நிர்வாகத்தின் எந்தவொரு பிரிவுக்கும் எதிராக வெறும் முழக் கங்களை எழுப்புவது மட்டுமே ஒரு குடிமகன் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்வதற்கான போதுமான காரணமாக அமையாது.இந்த அதிரடி தீர்ப்பின் மூலம், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரின் விடுதலையை உயர் நீதிமன்றம் உறுதி செய்து உத்தர விட்டுள்ளது. குடிமக்களின் கருத்துரிமையை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ள இந்த தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
