உணவு மேஜையில் – சாப்பிடும் நேரத்தில் நல்ல நண்பன் – ‘துணை உணவாகும்’ இந்த வெள்ளரிக்காய் கூட்டு! எந்த ‘ரூப’த்தில் இருந்தாலும் நல்லது.
உடல் நலக் கண்ணோட்டத்தோடு இந்த துணை உணவு (Snacks) வகையறாக்களில் இது சிறப்பான பக்க வாத்தியம். பல நேரங்களில் பக்கவாத்தியங்களே கச்சேரிகளில் ‘தனி ஆவர்த்தனம்’ செய்து, பாடகருக் கென்று ஓய்வு தருவதில்லையா! அதுபோலத்தான் இது!
இரத்த அழுத்தம், கொழுப்பைக் கட்டுப்படுத்த வெள்ளரியின் விதைகள் நல்ல பலனைத் தருகின்றன. இதனை 2016இல் நடைபெற்ற ஒரு சிகிச்சைச் சோதனையில் (Clinical Trial) 45 பேரை இரு குழுவினராகப் பிரித்து, ஒருகுழு ‘இப்படிச் சாப்பிட்டவர்கள் குழு’, மற்றொரு குழு ‘இப்படிச் சாப்பிடாதவர்களின் குழு’ என்று ஆய்வு செய்தனர். இறுதியில் அமெரிக்காவின் டெக்சாஸ் கிறித்துவப் பல்கலைக் கழக மருத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜினா ஜார்மென் ஹில் என்ற பேராசிரியை இவ்வாறு தெளிவுப்படுத்தினார்.
வெள்ளரிப் பிஞ்சினை ‘Negative calorie Food’ (கலோரி தராத ஒரு வகை உணவு) என்று சிலர் கூறி வந்ததை இவர் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். ‘குறைந்த அளவு கலோரியை உடலுக்குத் தரும் உணவு’ என்று வேண்டுமானால் கூறலாம் என்கிறார்!
உப்பில் ஊற வைத்து, ஊறுகாய் ‘ரூப’த்தில் வெள்ளரிப் பிஞ்சைச் சாப்பிட்டால், அது அதிகமான நல்ல பாக்டீரியாக்களை (Good Bacteria) உற்பத்தியாகச் செய்கிறது! அதனால் உடலில் செரிமானம் மற்றும் வளர்ச்சிகளுக்கான ஊட்டச்சத்துடன், நல்ல தேர்வு செய்யப்பட்ட நலம் பெருக்கும் உணவு வகையாக இருக்கும்; நமக்கு மருத்துவரிடம் போகாமல் நோய் தடுத்து நல்ல ஆரோக்கியத்திற்கு என்று துணையாக இருக்க வாய்ப்புகள் அதிகம். They may help to support metabolic health – நமது உடலின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் ஒரு முக்கிய கவனிப்புக்குரிய அம்சம். Metabolic health என்பது Medical Health என்று மருத்துவம், மருந்து, அறுவைச் சிகிச்சை என்பதைப் போலவே, பெரிதும் அவற்றைத் தவிர்த்து, நல்ல ஆரோக்கியஉணவுப் பழக்க வழக்கங்கள் மூலம் உடல் நலத்தைப் பேணிக் காத்தல் மிகவும் சிறப்பானதாகும்.
இந்தத் ‘துணை உணவில்’ சத்துணவாக வளர்ச்சிக்கு உதவும் நார்ச்சத்தும் (Fiber Content) உள்ளது. கொலஸ்ட்ரால் – Cholestrol மற்றும் Triglycerides இதயப் பாதுகாப்புக்கான சத்து, ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் வாய்ப்பு முதலிய பலவும் இதன் மூலம் கிடைக்கிறது என்று பல பேராசிரியர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், ஆய்வாளர்கள் தகவல்கள் தருகின்றனர்.
ஏழை, எளிய மக்கள் இயல்பாகவே இந்த வெள்ளரிக்காய், வெள்ளரிப் பிஞ்சு வாங்கி வாயில் கடித்துக் கொண்டே வெய்யிலையும் பொருட்படுத்தாது நடந்துபோகிறார்கள்.
பல சுங்கச் சாவடிகளில் நமது கிராமத்து விவசாயிகள், வீட்டுத் தோட்டத்தில் பயிரிட்டு அதை ‘சிறுவாட்டுக் காசாக்கி’ப் பொருளாதாரச் சுதந்திரம் அடைகின்றனர். கிராமத்து எளிய மகளிருக்கு இது ஒரு நல்ல விற்பனைப் பொருளாகும்.
எனவே உங்கள் உடல் நலம் கருதியும், அவர்களது பொருளாதார வரவுக்கு நாம் உதவிடும் வகையிலும், அவர்கள் விற்கும் வெள்ளிரிக்காய் பிஞ்சுக் கட்டுகளை வாங்கி உதவுவதும் – இரு வழி நன்மை அல்லவா?
நம்ம பாட்டியம்மாக்கள் இந்த ஆராய்ச்சி பற்றி அறியா விட்டாலும், அனுபவப் பட்டறிவு மூலமே இதன் நன்மைகளைக் கண்டறிந்ததால், வெள்ளரி விவசாயத்தை தனது வீட்டுத் தோட்டத்திலும் செய்து, தனது தன்னிறைவுக்கான ஒருசிறு வருமானத் துறையாக்கி, இடுப்பில் அவர்கள் வைத்திருக்கும் பையில் ‘நாலு காசு சேருதே!’ எனப் பாட்டும் பாடினார்.
‘‘ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட் டானாம் வெள்ளரிக்கா! காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காகிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்!’’
என்ற கிராமியப் பாட்டில், வெள்ளைக்காரர்களின் ஆட்சிபற்றியும்கூட பாட்டுப் பாடியுள்ளனர். முழுப் பாட்டை கேட்டிருக்கிறீர்களா?
(இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் சிங்கப்பூரிலுள்ள பிரபல ஆங்கில நாளேட்டின் (29.7.2026) வாழ்வுப் பகுதியில் வெளிவந்த ஒரு கட்டுரையைத் தழுவி எழுதியது)
