சிங்கப்பூரில் உள்ள பிரபலமான ‘கினோ குனியா’ என்ற ஜப்பானியர்கள் நடத்தும் புத்தகக் கடையில் அண்மையில் அதிகமான வாசக நேயர்களை ஈர்த்த முக்கிய – ஜப்பானியரின் வாழ்வியல் முறைபற்றி விளக்கும் ஒரு சிறப்பான புத்தகம் வாங்கிப் படித்தேன். தெவிட்டாத தேனாகவும், பகுத்தறிவுள்ள அனைவரும் தங்களது வாழ்க்கையில் வெற்றியடைந்த சாதனையைச் செய்ய, வாசகர்களை ஊக்கப்படுத்துவதாகவும் இருந்தது அந்நூல்.
Ganbatte (‘கேன் –பாட்–டே’) என்ற தலைப்பில் ஆல்பர்ட் லைபர்மான் (Arbert Liebermann) அவர்கள் ஸ்பானிஷ் மொழியில் எழுதிய நூல் ரசல் கேல்வர்ட் என்பவர் அருமையான ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிட்டுள்ள நவில்தரும் நூல் ஆகும் இது!
ஒவ்வோர் அத்தியாயமும் அதிக நீளமில்லாமல் ‘குட்டிக் குட்டியான’தாக உள்ளது. ஆங்கில நடை மிகவும் சிறப்பாகவும், எளிமையாகவும் உள்ளது.
ஜப்பானிய வாழ்வியல் தத்துவங்களில், முன்பு ‘இக்கிகய்’ – ‘Ikigai’ நூலும், அதுபோலவே இந்த நூலாசிரியர்களின் உலகம் முழுவதும் பிரபலமான மற்றொரு ஆங்கிலப் புத்தகமான ‘இச்சிகோ – இச்சியே’ என்ற நூலும் உலக மக்களின் வரவேற்பைப் பெரிதும் பெற்ற சிறந்த நூல்களாகும். இந்த இரண்டு புத்தகங்கள் பற்றி நமது‘வாழ்வியல் சிந்தனைகள்’’ பகுதியில் சில கட்டுரைகளை எழுதியுள்ளோம். அதை வெகுவாக ஈர்த்துக் கொண்டு அந்த நூல்களை பல வாசக நேயர்கள் தேடிக் கண்டுபிடித்து, வாசித்து மகிழ்ந்ததோடு தங்களது அன்றாட வாழ்க்கையில் அவற்றின் தாக்கத்தால் பல நடைமுறைகளை மாற்றி நல்லதோர் புத்தாக்கம் பெற்றனர் என்று அக்கட்டுரையாளன் என்ற முறையில் யாம் பெற்ற பெரு மகிழ்ச்சியாகும்!

‘இக்கிகய்’ – ‘Ikigai’ என்ற நூல் தமிழில் சிறந்த மொழி பெயர்ப்பாளர் மும்பை எழுத்தாளரான நண்பர் PSV குமாரசாமி அவர்கள் மொழி பெயர்த்து போபாலில் (மத்தியப் பிரதேசம்) உள்ள பிரபல மஞ்சுள் பப்ளிசிங் அவுஸ் வெளியீடாக வந்துள்ளது.
‘இக்கிகய்’ என்ற வார்த்தையை ‘எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது தருகின்ற மகிழ்ச்சி’ என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அதுபோலவே இச்சிகோ – இச்சியே என்ற நூல் தலைப்புக்கும் ‘வாழ்வில் இது ஓர் அருமையான (மறக்க முடியாத) தருணம்’ என்று மொழியாக்கம் செய்யலாம்!
ஜென் புத்த மார்க்கம் ஏற்படுத்திய தாக்கத்தால், பெரிதும் பகுத்தறிவைப் பயன்படுத்தி வாழ்வில் நீண்ட ஆயுள் நிறைவும், எல்லையற்ற மன நிறைவுடன் கூடிய மகிழ்ச்சியான வாழ்வையும் ஜப்பானியர்கள் வாழ்கிறார்கள். உறுதியும், எளிமையும், எதையும் எதிர் கொள்ளும் மனத் திண்மையையும், எவ்வளவு பெரியதோர் இழப்பு – மலை குலைந்தாலும், மனங்குலையா மகத்தான உறுதியையும் அம்மக்கள் தங்களது அன்றாட தனி வாழ்க்கையில் அமைத்து வெற்றி பெற்று, அதை அனுபவிப்பதில்கூட ஓர் அடக்கம் பொங்கும் அரிய முறையில் அதனை சுவைத்து மகிழ்கிறார்கள்!
என்னே விந்தை! எவ்வளவு வியப்பு!
அதே நூலாசிரியர்கள் எழுதி, அதே மொழி பெயர்ப்பாளர்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து, ஆங்கிலம் தெரிந்த அகிலமும் பயன்படும் வகையில் கொண்டு வந்து, அதனை சீரிய தொண்டாகச் செய்து, மகிழ்ச்சியை உண்மையாக பகிர்ந்து கொள்கின்றனர்.
அப்படி இப்போது வெளிவந்த மற்றொரு சிறப்பு நூல்தான் ‘கேன் –பாட்–டே’
எனது மற்ற எழுத்துப் பணிகள், சில முக்கியச் சந்திப்புகள், அன்றாட இயல்பு நடவடிக்கைகள் ஆகியவற்றோடு ஒரு மூன்று நான்கு நாள்களில் படித்து அசைபோட்டு – குறிப்புகளை மனதில் பதிய வைத்துக் கொண்டேன். ஜப்பானிய மக்கள் நீண்ட நாள் வாழும் முறைக்கு உரிமையாளர்கள் என்பதைத் தாண்டி, மகிழ்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் தங்கள் வாழ்க்கையை திட சித்தத்துடன் வாழ்வதுடன் அதே நேரத்தில் சலிப்பையும், விரக்தியையும் விரட்டி விடும் ஊக்கச் செயலியாக இந்த அரிய அறிய வேண்டியவற்றை அறிந்து, புரிய வேண்டியவற்றை புரிந்து, மகிழ்ச்சி மங்கா வாழ்வியலை நம்பிக்கையுடன் கடைப்பிடித்து வாழ்கின்றனர் என்பது புரிகிறது!
அந்த மனித குலத்தின் எல்லாப் பகுதிகளும் ‘கசடறக் கற்று அதற்குத் தக நின்று’, வென்று காட்டலாமே!
(தொடரும்)
