பெரியாருக்குத் தாய் வீடு சேலம் – அந்தத் தாய் வீடு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும்!
நாங்கள் (தி.க. – தி.மு.க.) பதவிகளால் ஈர்க்கப்பட்டவர்களோ, இணைக்கப்பட்டவர்களோ அல்ல, மாறாக
கொள்கையால் இணைக்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள்!
திராவிடம் ஒருபோதும் தோற்காது; திராவிடத்தை எதிர்க்கிறவர்கள் தான் காணாமல் போவார்கள்!
சேலம், ஜூலை 7 பெரியாருக்குத் தாய் வீடு சேலம்– அந்தத் தாய் வீடு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும்! நாங்கள் (திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகம்) பதவிகளால் ஈர்க்கப்பட்டவர்களோ, இணைக்கப்பட்டவர்களோ அல்ல. மாறாகக் கொள்கையால் இணைக்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள்! திராவிடம் ஒருபோதும் தோற்காது; திராவிடத்தை எதிர்க்கிறவர்கள் தான் காணாமல் போவார்கள்! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
சேலம்: பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் – தமிழர் தலைவர் சிறப்புரை
சேலம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில், திராவிடர் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானம் – மாநகராட்சி அலுவலகம் அருகில், 4.7.2026 அன்று மாலை 5 மணிக்குத் தொடங்கியது. சுயமரியாதைச் சுடரொளிகள் ஆத்தூர் ஏ.வி.தங்கவேலு, மேட்டூர் கிருஷ்ணமூர்த்தி நினைவு அரங்கமாகவும், மண்ணச்சநல்லூர் பி.என்.ஆர்.அரங்கநாயகி, வில்லிவாக்கம் தங்கமணி குணசீலன் ஆகியோர் நினைவாகவும் அமைக்கப்பட்டு இருந்த மேடையில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
திராவிடர் கழகப் பொதுக்குழுவில்
19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன!
நமது கழகத்தின் சிறப்பான பாசறை போல் வளர்ந்திருக்கக்கூடிய மாநகரங்களிலே ஒன்றான சேலம் மாநகரில், திராவிடர் கழகத்தினுடைய பொதுக்குழு, மாறுபட்ட ஓர் அரசியல் சூழ்நிலையிலே இன்றைக்குக் (4.7.2026) காலையிலே தொடங்கி சிறப்பாக நடை பெற்று, அதிலே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, மாநில அரசியலை மட்டுமல்ல, ஏன், ஒன்றிய அரசியலையும் சேர்த்துக் கண்காணிக்கக் கூடிய வகையிலே, இந்திய நாட்டைக் காப்பாற்றக்கூடிய அளவிலே, பல்வேறு சமூக, பொருளாதார அரசியல் தீர்மானங்களை உள்ளடக்கிய 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுச் சிறப்பாக அந்தப் பொதுக்குழு காலையில் 10 மணிக்குத் தொடங்கி – மாலை 3.30 மணிவரையில் நடக்கக்கூடியதாக இருந்தது. அப்படிப்பட்ட அந்தப் பொதுக்குழுவில் சிறப்பாக நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்களை விளக்குகின்ற வகையிலேதான் இந்த மாபெரும் பொதுக்கூட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது.
என்றென்றைக்கும் ‘மானமிகு’வாக இருக்கக்கூடிய அருமைச் சகோதரர் ராஜேந்திரன்
இந்தப் பொதுக்கூட்டத்திற்குச் சிறப்பான உழைப்பைக் கடுமையாக தந்துள்ள, சேலம் மாவட்ட தோழர்கள், ‘மாண்புமிகு’ என்று சொல்லுவதை விட, ‘மானமிகு’ என்பதை வலியுறுத்தக்கூடிய அளவிலே, என்றென்றைக்கும் ‘மானமிகு’வாக இருக்கக்கூடிய நம்முடைய அருமைச் சகோதரர் மாவட்ட தி.மு.க. செயலாளர் திரு.ராஜேந்திரன் அவர்களே,
‘சேலத்து சிங்கம்’ என்று கலைஞரால் அழைக்கப்பட்ட வீரபாண்டியார்!
இங்கு வரும்போது, வேனில் பயணம் செய்யும்போது, கழகத் தோழர்களிடம் நான் சொன்னேன், ‘‘இந்த சேலம் நகரம் இவ்வளவு எழில் கொஞ்சக்கூடிய நகரமாக உருவாகி இருக்கிறது. சேலத்தில் ஒரு பாசறை போல திராவிட இயக்கம் கட்டிக் காக்கப்பட்டிருக்கிறது என்றால், அதற்கு எத்தனையோ தோழர்கள், திராவிட இயக்கத்தோழர்கள் பாடுபட்டிருந்தாலும், மேனாள் அமைச்சர் என்பதை விட, எந்நாளும் திராவிட இயக்கத்தின் அசைக்க முடியாத சேலம் தூண் என்று சொல்லக்கூடிய அளவிலே, ‘சேலத்து சிங்கம்’ என்று கலைஞரால் அழைக்கப்பட்ட வீரபாண்டியார் அவர்களு டைய அற்புதமான ஓர் உழைப்பு என்பதை நினைக்கிற போது, மிகப்பெரிய அளவிலே நினைவலைகள் வந்தன. அதற்குப் பிறகு இங்கே ஆற்றல் வாய்ந்த ஒரு வராக, என்றைக்கும் திகழுகின்ற அருமைச் சகோதரர் ராஜேந்திரன் அவர்கள் இந்தப் பணியைச் சிறப்பாக செய்கிறார்.
தேர்தல் தோல்வி என்பது வேறு;
கொள்கைத் தோல்வி என்பது வேறு!
வெற்றியா, தோல்வியா? அதெல்லாம் சாதாரணம். தேர்தல் தோல்வி என்பது வேறு; கொள்கைத் தோல்வி என்பது வேறு. தேர்தல் தோல்வி மாறும்; கொள்கைத் தோல்விதான் ஆபத்தானது; கொள்கையில் என்றைக்கும் திராவிட இயக்கம் தோல்வி அடையாது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட ஓர் அருமையானச் சூழலிலே இக்கூட்டத்திற்குத் தலைமை ஏற்றிருக்கக்கூடிய சேலம் மாவட்டத் தலைவர், இன்றைய பொதுக்குழுவை சிறப்பாக நடத்துவதற்குக் காரணமாக இருக்கக்கூடிய மேனாள் அரசு அதிகாரி, இந்நாள் சேலம் மாநகர திரா விடர் கழகத் தலைவர் தோழர் வீரமணி ராஜூ அவர்களே, வரவேற்பு ரையாற்றிய மாவட்டச் செயலாளர் சரவணன் அவர்களே, அதுபோலவே திராவிட முன்னேற்றக்கழக மாவட்டத் தலைவர் சீரிய கொள்கையாளர் சுபாஷ் அவர்களே, மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் தோழர் சதாம் உசேன் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தகவல் தொழில்நுட்பப் பிரிவின் மாநில துணைச் செயலாளர் டாக்டர் ஏ.கே.தருண் அவர்களே, திராவிடர் கழகப் பொருளாளர் தோழர் வீ.குமரேசன் அவர்களே, திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்களே, செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி அவர்களே, இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன், தோழர் ஊ.ஜெயராமன் அவர்களே, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர்கள் பிரின்ஸ் என்னாரெசு பெரியார் அவர்களே, வழக்குரைஞர் மதிவதனி அவர்களே, மாநில மகளிரணி செயலாளர் தமிழ்ச்செல்வி அவர்களே, மாநில மகளிரணி பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை அவர்களே மற்றும் அன்பழகன் அவர்களே, மேட்டூர் மாநகர தலைவர் கா.நா.பாலு அவர்களே, ஆத்தூர் மாவட்டச் செயலாளர் சுரேஷ் அவர்களே, மேட்டூர் கழகக் காப்பாளர் கவிஞர் சுப்பிரமணியம் அவர்களே, மாநில இளைஞணி செயலாளர் நாத்திக பொன்முடி அவர்களே, சேலம் மாவட்டக் காப்பாளர் பழனி. புள்ளையண்ணன் அவர்களே, நன்றி உரை கூறவிருக்கிற மாவட்ட துணைத் தலைவர் அவர்களே, சிறப்பாக இங்கே குழுமி இருக்கிற திராவிட முன்னேற்றக் கழக, திராவிடர் கழக, அனைத்து இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெரியாருக்குத் தாய் வீடு சேலம்!
இந்த இடம் நமக்குப் புதிதல்ல. அதேபோல, அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் அடிக்கடி சொல்லுவார்கள், ‘‘சேலம் என்னுடைய தாய் வீடு’’ என்று. இந்த உரிமை, இந்தப் பெருமை வேறு யாருக்குமே, எந்த இடத்துக்குமே கிடையாது. பெரியாருக்குத் தாய் வீடு இந்த சேலம். அந்தத் தாய் வீடு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும். அதில் ஒன்றும் சந்தேகமே இல்லை. எனவே, தாய் வீட்டில், தாய்க் கழகம் நடத்துகிற கூட்டத்தில், ‘சேய்’கள் எல்லாம் சேர்ந்திருக்கிறார்கள்; எந்த முடிவும் எங்களை மாற்றாது, பிரிக்காது என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேதான் இன்றைக்கு இவ்வளவு பெரிய ஏற்பாடு. ஏதோ ஆளுங்கட்சியாக இருந்தார்கள், அவர்கள் இன்றைக்கு எதிர்கட்சியாக மாறினார்கள் என்று நினைக்காதீர்கள்.
பவளவிழா மாநாடு நடந்தபோது, இதே இடத்தில், இதே ராஜேந்திரன் அவர்கள் தான் ஏற்பாடு செய்தார்கள். நம்முடைய ஒப்பற்ற ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய வரலாற்று நாயகர் ஸ்டாலின் அவர்கள்தான், அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தாலும், பங்கேற்றார்கள். பிறகுதான் ஆளுங்கட்சித் தலைவராக வந்தார்கள். எனவே, ஆட்சிகள் வரும், போகும். அது சாதாரண ஒரு நிகழ்ச்சி. ஆனால், தத்துவங்கள் மிக முக்கியம். கொள்கைகள், லட்சியம் மிக முக்கியம்.
கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா,
103 இடங்களில் கூட்டங்களை நடத்திய தாய்க்கழகம்!
திராவிட முன்னேற்றக் கழகம் கூட சற்று ஓய்ந்து, இந்தத் தேர்தலில் ஓர் அதிர்ச்சி வந்தது என்று நினைக்கும் நேரத்திலே கூட, தாய்க்கழகம் நடத்திய முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை, 103 இடங்களில் கூட்டங்களை நடத்தியதைப் பற்றிச் சொன்னார்கள் இங்கே. காரணம் என்ன? கொள்கையால் நாங்கள் எப்படி ஒன்றுபட்டோம்? எப்படி உருவானது? என்று சொல்கிற போது, ஏன், கலைஞருடைய தாய் வீடும், கலைஞருடைய பாசறையும், அவரை தயாரித்ததும் முழுக்க முழுக்க ஈரோட்டுக் குருகுலம். அந்த அடிப்படையிலேதான் முதல்முறையாக இங்கே சிறப்பான வகையிலே ‘குடிஅரசு’ ஏட்டின் தொகுப்பினை நாங்கள் வெளியிடுகிற நேரத்தில், சென்னையில் வீரபாண்டியார் இருந்தபோது, அவரையும் காணொலி மூலம் சேர்த்து வைத்துத்தான் அந்த நிகழ்ச்சியை நடத்திேனாம். நான் இங்கே நடைபெற்ற கூட்டத்திற்கு வந்தேன். இப்படி எத்தனையோ வரலாறுகள் உண்டு.
கொள்கையால் இணைக்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள் நாங்கள்!
நாங்கள் பதவிகளால் ஈர்க்கப்பட்டவர்களோ, இணைக்கப்பட்டவர்களோ அல்ல. மாறாக கொள்கையால் இணைக்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள். அதை நன்றாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
‘குடிஅரசு’ பத்திரிகை நடத்துவதிலேதான் கலைஞர் ஈரோட்டுக் குருகுலத்தில் இருந்தார்கள். பிறகு சேலத்திற்கு அவர்கள் வந்து தங்கி இருந்தார்கள். பிறகு கோவையில் இருந்தார்கள், இப்படி எல்லாம் வரலாறு உண்டு. இங்கே இருக்கிற போது, இரண்டு செய்திகளைக் கலைஞர் அவர்கள் சொன்னதை குறிப்பாகச் சொல்லுகிறேன். எதையும் ஆதாரத்தோடு பேசி பழக்கப்பட்ட ஓர் இயக்கம் திராவிடர் கழகம். அந்த வகையிலே அன்பர்களே, கலைஞர் சொல்லுகிறார்.
அரசியல் சூழ்நிலைகள் எவ்வளவோ மாறிவிட்டது. யார் யாரோ, இருந்தவர்கள் பலரும் காணாமல் போய்விட்டார்கள். இங்கே இருக்கிறவர்கள் அங்கே போய்விட்டோம் என்கிறார்கள். ஆனால், இவர்கள் எங்கேயும் போகாமல் இருக்கிறார்களே, என்று சொன்னால், இது ஏதோ அரசியல் லாப – நஷ்டங்களைக் கருதி அல்ல. கொள்கைக்காக, லட்சியங்களுக்காக, அந்த லட்சியப் பயணத்துக்காக என்று இருக்கக்கூடிய சூழ்நிலையிலே, இந்தக் காரணத்தை சொல்கிறார் கலைஞர்.
தாய் – பிள்ளை உறவு பிரிக்கப்பட முடியாத உறவு!
எப்படி இவர்கள் ஒன்றுபட்டிருக்கிறார்கள், ஏன் ஒன்றுபட்டிருக்கிறார்கள் என்பது, ஏதோ ஒரு லாபத்துக்கு அல்ல; ஆதாரம் இருந்தது, அரசு இருந்தது, அதிகாரம் இருந்தது, ஆகவே ஒன்றுபட்டார்கள். அதிகாரம் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, தாய் – பிள்ளை உறவு என்பது இருக்கிறதே அது என்றைக்கும் பிரிக்கப்பட முடியாது. வேண்டுமானால், மனைவி உறவு கூட ‘டைவர்ஸ்’ ஆகலாம்; ஆனால், தாயை ‘டைவர்ஸ்’ செய்ய முடியுமா? தாயை விட்டுட்டு ஓட முடியுமா? ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு வரலாறு, அப்படிப்பட்ட ஒரு கொள்கை. அது கொள்கையினால் எப்படி வந்தது என்பதற்கு, இரண்டு செய்திகளைச் சொல்லுகிறேன்.
கலைஞர் எழுதுகிறார்!
15.9.2006, ‘முரசொலி’ ஏட்டில் கலைஞர் அவர்கள் எழுதுகிறார்.
103 ஆவது ஆண்டாக இருக்கக்கூடிய கலைஞ ருடைய பிறந்த நாளைக் கொண்டாடுகின்ற இந்தக் காலகட்டத்திலே, கலைஞர் பேசுகிறார், கலைஞர் எழுதுகிறார். இதோ இந்தச் சம்பவத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன்.
திராவிடர் கழகத்துக்கு நிகராக அடுத்தபடியாக, திராவிட முன்னேற்ற கழகம் தான்!
‘‘அரசியலுக்கு வந்த காரணத்தால், சமுதாயத்தில் புரட்சியையும் நாம் மறந்துவிடவில்லை. ஆனால், இப்போது ஏற்படுகிற கட்சிகளைப் பாருங்கள். திராவிட என்ற சொல்லை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு வைத்திருந்தாலும், சமுதாயத்தைப் பற்றி பேச பயப்படுவார்கள். கடவுளின் பெயரால் நடக்கின்ற அக்கிரமங்களைக் கண்டிக்க அஞ்சுவார்கள். ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற சதிச் செயல்களை எல்லாம் வீழ்த்த வேண்டும் என்று சொல்லுகிற தைரியமும், அந்த அஞ்சாமையும், அந்தத் துணிவும் எந்தத் திராவிட இயக்கத்திற்கு ஏற்படும் என்றால், திராவிடர் கழகத்துக்கு நிகராக அடுத்தபடியாக, அந்த உணர்வு ஏற்படக்கூடிய ஒரே இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பதை மறந்துவிட முடியாது.’’
இது ஒரு சிலாசாசனம், செப்பேடு, கல்வெட்டு. யாருக்கு? நம் எல்லோருக்கும். எதிரிகளுக்குக் கூட அல்ல. இளைஞர்கள் இதனைத் தெரிந்து கொள்ள வேண்டும். காலையிலே ஒரு கட்சி, மாலையிலே ஒரு கட்சி, இரவிலே ஒரு கட்சி, பொழுது விடிந்தால் இன்னொரு கட்சி; இனிப் போவதற்குக் கட்சி இல்லை என்றால், தானே உருவாக்கக்கூடிய கட்சி, நடத்த முடியவில்லை என்றால், அதற்கு இணைப்பு விழா நடத்தக்கூடிய இன்னொரு கட்சி என்றெல்லாம், தாவல்கள் நடத்தக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கக்கூடிய இந்தக் காலகட்டத்திலே, எப்படிப்பட்ட அறிவுரை – இதுதான் திராவிட இயக்கம்!
திராவிடம் ஒருபோதும் தோற்காது; திராவிடத்தை எதிர்க்கிறவர்கள் தான் காணாமல் போவார்கள்!
‘‘திராவிடம் தோற்றுவிட்டது, இனிமேல் திராவிடம் கிடையாது’’ என்று சொல்லுகிற பைத்தியக்காரர்களே, உங்கள் பைத்தியத்தைத் தெளிய வைப்போம்.
திராவிடம் ஒருபோதும் தோற்காது; திராவிடத்தை எதிர்க்கிறவர்கள் தான் காணாமல் போவார்கள். எடுத்துக்காட்டு பிஜேபி. சென்ற முறையில
ஆர்.எஸ்.எஸ்., ‘தோள் தட்டி, தொடை தட்டி வந்தோம்’’ என்று சொன்னார்கள், இந்தியா முழுவதும் ஆட்சி வைத்திருக்கிறோம் என்று சொன்னார்கள். ஆனால், என்ன செய்தாலும், இந்தத் தமிழ் மண்ணை அவர்களால் நெருங்க முடியவில்லை என்றால், அதற்குக் காரணம், தமிழ்நாடு காவி மண்ணாக ஆக முடியாது என்று சொல்வதற்குக் காரணம், இது பெரியார் மண் – பெரியார் மண் என்றால், திராவிட இயக்க மண்!
(தொடரும்)
