புத்துணர்ச்சி உச்சம் தொட்ட சேலம் பொதுக்குழு!
உற்சாகப் பெருவெள்ளத்தில் நீந்த வைத்த அறப்போராட்டக் கள வீரர்களின் பட்டியல்!
புத்துணர்ச்சி உச்சம் தொட்ட சேலம் பொதுக்குழு! உற்சாகப் பெருவெள்ளத்தில் நீந்த வைத்த அறப்போராட்டக் கள வீரர்களின் பட்டியல்! தோழர்களுக்கு நமது பாராட்டும், நன்றியும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
கடந்த 4.7.2026 அன்று சேலத்தில் நடைபெற்ற நமது சமூகப் புரட்சி இயக்கமான திராவிடர் கழகத்தின் பொதுக்குழுவும், அதனையொட்டி அன்று மாலை நடை பெற்ற பொதுக்கூட்டமும் கழக வரலாற்றில் முத்திரை பதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக ஆகிவிட்டன.
நாளைய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக் கூடிய தீர்மானங்கள்!
புதிய ஆட்சி, மாறிய அரசியல் சூழலில் நமது நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் தீர்மானம் முதற்கொண்டு, நாட்டின், குறிப்பாகத் தமிழ்நாட்டு உரிமைகளை மீட்டெடுப்புப்பற்றியும், அதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறையான பிரச்சாரங்கள் – பரப்புரைகள் – அறப்போராட்டங்கள் என்பதை வலியுறுத்தி, வழிகாட்டும் வகையில் – நாளைய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படக் கூடிய 19 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்ன.
பொதுக்குழுவின் உச்சம் தொட்ட புத்துணர்ச்சியும், வெள்ளமெனப் பாய்ந்தோடிய புத்தாக்கச் செயல்முறை களும் அனைவருக்கும் ஊக்கம் தந்தன. அறப் போராட்டங்களுக்குத் தேவைப்படும்போது, களப் போராளிகளாக 1000 இளந்தோழர்களின் பட்டியலைத் தாருங்கள்’’ என்று சில வாரங்களுக்கு முன்புதான். அன்பு வேண்டுகோள் விடுத்தோம் நமது கழகப் பொறுப்பாளர்களுக்கு!
சேலம் மாநகரில் கழகக் கொடித் தோரணங்கள் காற்றுடன் கலந்து வீசியதைச் சுவைத்தோம் அனைவரும்!
உற்சாகப் பெருவெள்ளத்தில் நீந்த வைத்து மகிழ்ந்தனர்; மகிழ்ந்தோம்!
உழைப்புத் தேனீக்களாகிய நமது இயக்க முக்கிய பொறுப்பாளர்கள் தலைமையின் வேண்டுகோளை – ஆணையாகவே கருதி, கழக மாவட்டங்கள் அனைத்தி லும் சுழன்றடிக்கும் அலைக்காற்றாக வீசி (Wave Wind), 4 ஆம் தேதி சேலத்தில் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் தள்ளி, உற்சாகப் பெருவெள்ளத்தில் நீந்த வைத்து மகிழ்ந்தனர்; மகிழ்ந்தோம்!
கேட்டது ஆயிரம் பேர் (மாவட்ட வாரியாகப் பட்டியல்). தாமே முன்வந்தது 1706 (இருபாலர்கள்).
அத்துணை பேரும் 16 வயது முதல் 35 வயதினர் (ஏதோ ஒன்றிரண்டு அதைத் தாண்டிய வயதினர் உண்டு).
காலையில், சரியாக 10 மணிக்குத் தொடங்கிய பொதுக்குழு, நமது விளக்க உரையோடு பிற்பகல் 3.30 மணியளவில்தான் நிறைவடைந்தது!
கலந்துகொண்ட சுமார் 1,300 பேருக்குச் சிறப்பான விருந்தோம்பல்.
இம்முறை மகளிர் அதிகம் பங்கேற்றமை மிகவும் குறிப்பிடத்தக்கது!
இரண்டு மணிநேர இடைவெளிக்குப் பின், சேலம் கோட்டை மைதானத்தில் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. (இதே இடத்தில்தான் திராவிடர் கழகத்தின் பவள விழா – நிறைவு விழா – அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ‘சமூகநீதிக்கான சரித்திர நாயகர்’ மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு நிறைவு விழாப் பேருரையாற்றினார் என்பது வரலாற்றுக் குறிப்பு. தாய்க்கழகத்தின் மீது அளவற்ற பற்றாளரும், அதுபோல தாய்க்கழகத்தின் நிரந்தரப் பேரன்புக்குரியவருமான செயல்வீரச் செம்மல், மாவட்ட தி.மு.க. செயலாளரும், அப்போதைய சட்டப்பேரவை உறுப்பினரும், மானமிகு இராஜேந்திரன் அவர்களின் ஒத்துழைப்புடன் பவள விழா – வெற்றி விழாவாக அமைந்தது மறக்க முடியாததாகும்)
நம் கண்களை விட்டு
இன்னமும் அகலவில்லை!
கடலில்லா சேலத்தில், மக்கள் கடலாகக் கூட்டம்! மழைத் தூறல் வீழ்ந்தும், இறுதிவரை (9.45 மணி) ஒருவர்கூட கலையாமல், செவிமடுத்து, உற்சாகத்துடன் உள்வாங்கிக் கேட்டது, இது ஒரு உன்னத அறிவுப் பரப்புரை விழா என்றே கட்சிக்கப்பாற்பட்ட பெருமக்கள் கூடி அன்பு வெள்ளமாகப் பாய்ந்த காட்சி, நம் கண்களை விட்டு இன்னமும் அகலவில்லை.
நமது பாராட்டும், நன்றியும்!
சுமார் இரண்டு மாதங்களுக்குமுன் நாம் திட்டமிட்ட பொதுக் குழுவைச் சேலத்தில் நடத்த ஆர்வத்துடன் முன்வந்து, சிரித்த முகத்துடனும், செயல் வடிவமாக்க, வற்றாத உழைப்பினை பஞ்சமில்லாமல் தந்த நமது கழக ஒருங்கிணைப்பாளர் மானமிகு ஊ.ஜெயராமன், மாநகரத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட கழகக் காப்பாளர்கள் சேலம் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கி.ஜவகர், மேட்டூர் பழனி புள்ளையண்ணன், சிந்தாமணியூர் சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் மூனாங்கரடு பெ.சரவணன், சேலம் மாவட்ட துணைத் தலைவர் சு.இமயவர்மன், ஆத்தூர் மாவட்ட தலைவர் அ.சுரேஷ், ஆத்தூர் மாவட்ட செயலாளர் நி.சேகர், சேலம் மாவட்ட இளைஞரணி தலைவர் சா.கார்த்திக், இளைஞரணி செயலாளர் துரை சக்திவேல், மாணவர் கழகத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன், நாமக்கல் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் வெண்ணந்தூர் செல்வகுமார், துண்டறிக்கைப் பிரச்சாரம், கடை வீதி பிரச்சாரம், கடைவீதி வசூல் மூலம் ஒரு குறும் விளம்பரத்தினை தொய்வில்லாது, சலிப்பில்லாத உழைத்த மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, சேலம் பொதுக்குழு உறுப்பினர் க.கமலம்மாள், ஆத்தூர் செல்வம், வீரபாண்டி ஒன்றியத் தலைவர் ஜே.காளியப்பன், அயோத்தியபட்டினம் ஒன்றியத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன், தருமபுரி இளைஞரணி பொறுப்பாளர் அ. பிரபாகரன், கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி, ஆத்தூர் இளைஞரணி பொறுப்பாளர் செந்தமிழ்ச் சேரன் மற்றும் மாநகர பொறுப்பாளர்கள் சேலம், மேட்டூர், ஆத்தூர், திருச்செங்கோடு, நாமக்கல், தருமபுரி, ,அரூர் கழக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆகியோருக்கு நமது பாராட்டும், நன்றியும்!
சேலத்தின் எழுச்சி மறக்க முடியாத ஒரு நெகிழ்ச்சி!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.7.2026
