கலைஞர் 103ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா
• அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்! • தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து!
• பெரியாருக்கு அரசு மரியாதை! • பெண்களுக்கு சொத்துரிமை!
இவையெல்லாம் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் செய்த சமூகப் புரட்சிகள்!
பெரியகுளம், ஜூன் 8- தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரைப் பகுதியில் நடைபெற்ற, கலைஞர் 103 ஆம் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கியது; தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்தது; பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது போன்ற மகத்தான சமூகப் புரட்சிகளை செய்தவர், மானமிகு சுயமரியாதைக்காரரான முத்தமிழ் அறிஞர் கலைஞர்! என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் புகழ்ந்துரைத்தார்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு 4 மாநிலங்களில் மொத்தம் 103 கூட்டங்களை நடத்துவதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையில் 6.6.2026 அன்று மாலை 6 மணியளவில், கலைஞரின் 103 ஆம் பிறந்த நாள் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தேனி மாவட்டத் தலைவர் ம.சுருளிராஜன் அனைவரையும் வரவேற்றார். கழகப் பொதுக்குழு உறுப்பினர் ம.பெ.மு.அன்புக்கரசன் தலைமை வகித்து சிறப்பித்தார். சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.சரவணகுமார் முன்னிலை ஏற்று உரையாற்றினார். பெரியகுளம் நகர் மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமார் முன்னிலை வகித்தார். வழக்குரைஞர் இசாந்த் தங்க தமிழ்ச்செல்வன் முன்னிலை வகித்து உரையாற்றினார். தேனி மாவட்டக் காப்பாளர் ச.இரகுநாகநாதன் தனது 56 ஆம் திருமண நாள் முன்னிட்டு கழகத் தலைவரிடம் வாழ்த்து பெற்றார். பகுத்தறிவாளர் கழகத் தோழர் மோகன், 9 தோழர்களுடன் 9 விடுதலை சந்தாக்களை கழகத் தலைவரிடம் வழங்கினார். அதேபோல மாவட்டச் செயலாளர் தேனி பூ.மணிகண்டன் விடுதலை சந்தா வழங்கினார். பெரியார் பெருந்தொண்டார் வளையாபதி விடுதலை வளர்ச்சி நிதி வழங்கினார்.

அதைத் தொடர்ந்து, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு முன்னிலை ஏற்று உரையாற்றினார். தொடர்ந்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் கழகத் தலைவருக்கு மரியாதை செய்தனர். முன்னதாக கழகத் தலைவர், நிகழ்விடத்திற்கு வருகை தந்த போது, பறை இசை முழங்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர்பாண்டியன், மதுரை மாவட்டத் தலைவர் முருகானந்தம், மதுரை மாவட்டச் செயலாளர் சுரேஷ், மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராஜன், தலைமை செயற்குழு உறுப்பினர் மதுரை செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறைவாக கழகத் தலைவர் உரையாற்றினார்.
அவர் தமது உரையில், நிகழ்ச்சி அழைப்பிதழில் பெரியகுளம் பகுதி சுயமரியாதைச் சுடரொளிகள் பற்றிய விவரங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியும், அதையே ஒரு ஒளிப்படங்களுடன் பதாகையாக தயார் செய்து வைத்திருப்பதையும் எடுத்துரைத்து, மாவட்ட பொறுப்பாளர்களைப் பாராட்டினார். அதைத் தொடர்ந்து, “அந்தப் பட்டியலில் இல்லாத பெயர்கள் இன்னும் இருக்கின்றன” என்று குறிப்பிட்டு, சாலை ஆய்வாளர் மருதமுத்து, மீனாட்சி போட்டோ ஸ்டுடியோ முத்தையா, பால்கடை அழகிரி போன்ற சுயமரியாதைச் சுடரொளிகள் சிலரை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். மேலும் அவர், “அந்த சுயமரியாதைச் சுடரொளிகள் போட்டுத் தந்த மேடையில் தான் நாம் பேசிக்கொண்டு இருக்கிறோம்” என்று கூறி, திராவிடர் இயக்கத்தின் வேர்களின் பலத்தைத் நினைவூட்டினார். அடுத்து, மேடையில் அமர்ந்திருந்த பெரியகுளம் நகர மன்றத் தலைவர் சுமிதா சிவக்குமாரை சுட்டிக்காட்டி, “1920 இல் நீதிக்கட்சி ஆட்சியில் தான் பனகல் அரசர் பெண்களுக்கு முதல் முதலில் வாக்குரிமையை கொண்டு வந்தார்” என்ற அரிய தகவலை பகிர்ந்து கொண்டார். அதைத் தொடர்ந்து, இதுவரை பெண்களுக்கான கிடைத்துள்ள உரிமைகள் அனைத்தும் திராவிடர் இயக்கத்தினால் வந்தவை என்பதை அண்மைக்கால திராவிட மாடல் ஆட்சி வரையிலும் சுட்டிக்காட்டினார்.
அந்த வரிசையில் பெண்களுக்கான சொத்துரிமை பற்றி குறிப்பிட்ட போது, “ஒன்றிய சட்ட அமைச்சராக இருந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், ‘இந்து சீர்திருத்த மசோதா’ கொண்டு வந்த போது, குடியரசுத் தலைவர் இராஜேந்திர பிரசாத் முதல் காங்கிரசில் இருந்த ஸநாதனிகள் வரை அனைவரும் எதிர்த்து அதை வரவிடாமல் செய்ததையும், 1929 செங்கல்பட்டு மாநாட்டுத் தீர்மானங்களில் ஒன்றான, ‘பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும்’ என்பதை, 1989 இல், இன்றைய 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் நாயகரான கலைஞர், தான் முதலமைச்சராக இருந்த போது கொண்டு வந்தார்” என்றும், அதே சட்டத்தை 2004 இல், அன்றைக்குச் சரியாக இருந்த காங்கிரசு உதவியுடன் இந்தியா முழுவதும் கொண்டு வந்தவரும் கலைஞர் தான்” என்பதையும் சுட்டிக்காட்டிவுடன், அந்த மகத்தான சாதனைக்கு மரியாதை செய்யும் விதமாக மக்கள் கைகளைத் தட்டி தங்களின் அங்கீகாரத்தை வெளிப்படுத்தினர். அதேபோல், “விருதுநகரில் 1933 இல், ‘பெண்கள் காவல்துறையிலும், இராணுவத்திலும் சேர்க்கப்பட வேண்டும்’ என்று பெரியார் தீர்மானம் போட்டதை நிறைவேற்றியவரும் கலைஞர் தான்” என்று குறிப்பிட்டதும் மக்கள் உணர்ச்சி வசப்பட்டு கைகளைத் தட்டினர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்ற ஜாதி ஒழிப்புப் போரான, ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்’ நியமனத்திற்கு அடித்தளமிட்டவர் கலைஞர் தான்; தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத்தந்தது கலைஞர் தான்; தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை செய்தவரும் கலைஞர் தான்; ‘பத்திரிகையாளர் ஒருவர், உங்களைப் பற்றி ஒரு வரியில் சொல்லச் சொன்னால் என்ன சொல்வீர்கள்’ என்று கேட்ட போது, ‘மானமிகு சுயமரியாதைக்காரன்’ என்று, தன்னை வருணித்துக் கொண்டவரும் கலைஞர் தான்” என்று கூறியதும் பலத்த கைதட்டல்கள் எழுந்து அடங்கின. மேலும், திராவிடர் இயக்கத் தலைவர்களின் பண்பாட்டை சுட்டிக்காட்டிப் பேசும்போது, ‘சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சர், ‘You are running a third right government’ என்று கீழிறக்கமாகப் பேசியபோது, ‘இது மூன்றாம் தர அரசு அல்ல; நாலாம் தர அரசு; சூத்திரர்களுக்கான அரசு’ என்று பேசி, இருதரப்பினரும் மோதிக் கொள்வதைத் தடுத்தவர் கலைஞர் தான்” என்று குறிப்பிட்டுவிட்டு, “இன்றைய அரசியல்வாதிகள் இதைப்பின்பற்ற வேண்டும். குறுகிய நேரத்தில் கலைஞர் பற்றி இவ்வளவு தான் சொல்ல முடியும். ஆகவே, புத்தகங்களை வாங்கிப் படியுங்கள்” என்று குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார். கழகத் தலைவர் சுமார் ஒருமணி நேரம் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில், பெரிய குளம் முன்னாள் நகர் மன்றத் தலைவர் பி.எ.எ.முகமது இலியாஸ், பெரிய குளம் தி.மு.க.நகரக் கழக செயலாளர் கே.முகமது இலியாஸ், எண்டப்புளி ஊராட்சி மன்றத் தலைவர் எல்.எம்.சின்னப்பாண்டியன், வெற்றித் தமிழர் பேரவை ஜி.கே.மணிகார்த்திக், தேனி மாவட்டத் துணைத் தலைவர் சா.நாகராஜன், போடி நகரத் தலைவர் ரகு பெரியார் லெனின், தேனி மாவட்ட இளைஞரணித் தலைவர் பிரவீன் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் லோ.முத்துசாமி, ப.க.தோழர்கள் பெ.கோபால், ஜெயராஜ், ஆண்டிப்பட்டி ஆண்டிச்சாமி, மாவட்ட அமைப்பாளர் செ.கண்ணன், தங்கம், செல்வராஜ், முருகன், கம்பம் மாவட்ட துணைத் தலைவர் சுருளிப்பட்டி சிவா, மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் இசுலாமிய மக்கள் கணிசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
