விக்டோரியா, ஜூலை 4- கடந்த ஜூன் 28, 2026 அன்று செஷல்ஸ் நாட்டுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார் பிரதமர் மோடி. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான தலைமைத்துவத்தை பாராட்டி, பிரதமர் மோடிக்கு ‘கார்டியன் ஆஃப் தி ப்ளூ ஹாரிசன்’ (Guardian of the Blue Horizon) என்ற செஷல்ஸ் நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கைகள், பசுமை வளர்ச்சி மற்றும் நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதில் அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
போலி விருது சர்ச்சை
இந்த விருது சான்றிதழின் ஒளிப்படம் இணையத்தில் வெளியான போது, அதில் கடுமையான எழுத்துப் பிழைகள் இருந்ததை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர். இதனால், இந்த விருது போலி என்றும், அவசரமாக ஏஅய் (AI) தொழில்நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதங்கள் எழுந்தன.
குறைந்த காலம் மற்றும் விளக்கம்
பிரதமரின் வருகை மற்றும் இந்த விருதை வழங்கும் திட்டம் மிகக் குறுகிய கால அவகாசத்திற்குள் இறுதி செய்யப்பட்டது. இதனால் சான்றிதழை வடிவமைக்க மிக குறைந்த காலமே இருந்தது. கால நெருக்கடி காரணமாக, சான்றிதழின் ஆரம்பகட்ட வரைபடத்தை உருவாக்குவதற்கும் வடிவமைப்பதற்கும் டிஜிட்டல் வடிவமைப்பு கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இதனால்தான் இந்தத் தவறான எழுத்துப்பிழைகள் விழுந்துள்ளன. இணையத்தில் பிழைகளுடன் பரவிய சான்றிதழ் நகலானது, இறுதி செய்யப்பட்ட வடிவம் அல்ல.
பிரதமரிடம் நேரடியாக வழங்கப்பட்ட அசல் சான்றிதழில் எந்த பிழையும் இல்லை என்பதை அந்நாட்டு அரசு திட்டவட்டமாக உறுதிப்படுத்தி யுள்ளது.
