பெண்களின் சுயமரியாதையைக் கட்சிகள் காக்க வேண்டும்-பா. ேஹமாவதி

4 Min Read

குடும்பப் பொறுப்புகளையும் பொருளாதாரச்  சுதந்திரத் துக்கான பணிகளையும் செய்து கொண்டே அரசியல், சமூகப் பணிகளை ஆற்றும் பெண்களின் எண்ணிக்கை தற்போது பெருகிவருகிறது. அவர்களைப் பார்த்துச் சிலர், ‘இவர்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ.. எப்படித்தான் இதுபோன்ற சவாலான வேலைகளைச் செய்கிறார்களோஎன்று ஆச்சரியப்படுவார்கள். ஆனால், அரசியலுக்கு வரும் பெண்களின் வலிகள் இன்னமும் பெரிய அளவில் விவாதிக்கப்படவில்லை என்பதே யதார்த்தம்.

மூன்று தளங்களில் போராட்டம்

அரசியலுக்கு வருகிற ஆணுக்குக் கிடைக்கிற சுதந்திரம் பெண்ணுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் ஒரே நேரத்தில் மூன்று தளங்களில் போராட வேண்டியுள்ளது. சமையல், குழந்தைகள் பராமரிப்பு உள்ளிட்ட வீட்டு வேலைகளைச் செய்தாலும் குடும்பத்தார் சொல்லும் குறைகளையும், விமர்சனங் களையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பது முதல் தளம்.

அலுவலக வேலைகளில் திறமையை நிரூபித்துப் பொருளாதாரரீதியாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்ளப் போராட வேண்டியிருப்பது இரண்டாம் தளம். உடன் பணிபுரிவோர், அதிகாரிகளின் சகிக்க முடியாத நெருக்கடிகளை எதிர்த்துப் போராட வேண்டியிருப்பது மூன்றாம் தளம். இவற்றையெல்லாம் கடந்து, தங்களுக்கான சிறு ஓய்வு நேரத்தையும் தூக்கத்தையும் ஒதுக்கிவைத்துவிட்டுத்தான் அரசியல் போராட்டத்துக்குப் பெண்கள் வருகிறார்கள். இப்படி வரும் பெண்களின் உணர்வுகளை மதித்து, கட்சியின் அமைப்பின் பொறுப்பாளர்கள் பெண்களை ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களது உழைப்பைக் குறைத்து மதிப்பிடக் கூடாது.

அதிகார போதையும் ஒடுக்குமுறையும்

அரசியலில் ‘அதிகாரத்தில் இருக்கிற’ ஆண்களால் பெண்கள் அவமானப்படுத்தப்படுவதும் பெண்களின் பணிகள் அவமதிக்கப்படுவதும் தொடர்கின்றன. பெண்ணுரிமைகளும் சமத்துவமும் பேசுகிற அரசியல் வளாகங்களில்கூட ஆணாதிக்க மனநிலை மாறவில்லை. மேடைகளில் சமத்துவத்தையும் சமூக நீதியையும் பேசுகிற  இயக்கங்கள், அரசியல் கட்சிகளில்கூட, நடைமுறையில் பெண்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே சில ‘பொறுப்பாளர்கள்’ விரும்புகிறார்கள்.

ஒரு பெண் துணிச்சலாகக் கேள்விகள் கேட்கும்போதோ தன் தனித்துவத்தால் தனித்துத் தெரியும்போதோ அதை ஆணாதிக்க மனங்களால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் பெண்களை முடக்க நினைக்கிறார்கள். ‘உனக்கு எதுவும் தெரியாது’, ‘நீ எதற்கும் லாயக்கில்லை’ என மற்றவர் முன்னிலையில் அவமானப்படுத்துகிறார்கள். ‘நீ எவ்வளவு படித்திருந்தாலும், வேலைக்குப் போனாலும் இங்கே எனக்குக் கீழேதான்’ என்கிற அதிகாரத் தொனி, பெண்களின் ஒட்டுமொத்த உழைப்பையும் ‘ஒன்றுமே இல்லை’ என்பதான பிம்பத்தைக் கட்டமைக்கிறது.

சுயமரியாதையே பெரிது

தன்னை மதிக்காத, தன் உழைப்பைச் சுரண்டி மற்றவர் முன் அவமானப்படுத்தும் இடத்தில் சுயமரியாதையை விட்டுக்கொடுத்துப் பெண்கள் ஏன் செயல்பட வேண்டும் என்பது பெரிய மனப்போராட்டம். அரசியல் இயக்கங்கள் பேசும் லட்சியங்களை நம்பித்தான் பெண்கள் பொதுவெளிக்கு வருகிறார்கள். அதற்காக வியர்வை சிந்துகிறார்கள். தியாகங்கள் செய்கிறார்கள். தங்களின் பொன்னான நேரத்தைத் தருகிறார்கள். ஆனால், என்ன பயன் என்கிற கேள்விதான் கடைசியில் எழுகிறது.

பெண்களின் சுயமரியாதைக்கு அரசியல் கட்சிகளில் இடமில்லை என்றால் அவை பேசுகிற கொள்கைகள்வெறும் சப்தம் மட்டுமே. சுயமரியாதையை இழந்து எந்தவொரு கொள்கையையும் காப்பாற்ற வேண்டிய அவசியம் பெண்களுக்குக் கிடையாது. உலகெங்கும் நடந்த, நடக்கிற போராட்டங்களின் இறுதி இலக்கே மனிதர்களின் சுயமரியாதையை மீட்பதும் தக்கவைப்பதும்தான். பெண்களின் சுயமரியாதையும் அதில் அடங்கும்.

‘அரசியல் பொறுப்புகள்’ என்பவை அதிகாரம் செய்வதற்கல்ல; வழிகாட்டிகளாக, முன்னோடிகளாக அவர்கள் நடந்துகாட்டுவதற்கே என்கிற புரிதல் இன்னும் சில ஆண்மையவாதிகளுக்கு வரவேயில்லை. இந்தியாவின் அரசியல் கட்சிகளில் வேலை செய்யும் பெண்கள், அரசியல் தலைவர்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாகப் புகார்கள் தெரிவித்த சம்பவங்கள் ஏராளம். ‘நான் போராடுவது சமத்துவத்துக்காக. ஆனால், அந்தச் சமத்துவத்தைப் பேசும் களத்திலேயே எனக்குச் சமஉரிமை இல்லை என்றால், நான் சுமக்கும் கொள்கைக்கு என்ன பொருள்? என் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டு நான் யாருக்காகப் போராடப் போகிறேன்? என்று அந்தப் பெண்கள் கேட்கும் கேள்விக்குச் சமூகம் பதில் சொல்ல வேண்டும்.

வீட்டிலும், அலுவலகத்திலும் போராடிக்கொண்டே ஏன் ஒரு பெண் அரசியல் களம் வருகிறாள்? இந்தச் சமூகம் அவளுக்குத் தராத மரியாதையையும் சமத்துவத்தையும், தான் நம்புகிற கொள்கைகளும் அவற்றைப் பேசுகிற அரசியல் கட்சிகளும் தரும் என்கிற நம்பிக்கையில்தானே? ஆனால், அந்தக் கொள்கையைவிடத் தன் பதவியின் அதிகாரமும் ஆணவமும்தான் பெரிது என்று நினைக்கும் சில ஆணாதிக்கவாதிகள், பெண்களின் அரசியல் பயணத்துக்கு முட்டுக்கட்டையாகி நிற்பது வேதனையானது. சுயமரியாதைதான் பெண்ணுரிமைகளின் அடித்தளம். அதிகார மிரட்டல்களால் பெண்களின் போர்க் குணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என்பதை ஆண்மையச் சிந்தனையாளர்கள் உணர வேண்டும்.

அரசியல் கட்சிகள் ‘பணியிடம்’ கிடையாதா?

‘பணியிடங்களில் பாலியல் வன்கொடுமைகளுக்கான தடுப்புச் சட்டம் -2013’ இன் அடிப்படையில் அரசியல் கட்சிகளையும் ‘பணியிடம்’ எனக் கருத வேண்டும் என்று விவாதங்கள் நடந்தன. முதலாளி – தொழிலாளி உறவு முறை இல்லாததால் அரசியல் கட்சிகளைப் ‘பணியிடமாகக் கருத முடியாது என்று 2022இல் கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது (Yogamaya vs State of Kerala). இதைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்து மனுவைத் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரை மேலும் ஆழமாக விவாதிக்கப்பட வேண்டும் என்பது சமூகச் செயல்பாட்டாளர்களின் கருத்தாக உள்ளது.

நடிகை காயத்ரி ரகுராம், ‘பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, மரியாதை இல்லை’ என்று கூறி 2023இல் பாஜகவிலிருந்து வெளியேறினார். நடிகை கவுதமியும் பாஜகவிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியின் பெண்கள் அமைப்பான, மகிளா காங்கிரஸ் நிர்வாகியாக இருந்த ரச்சனா சச்தேவா சில தலைவர்கள் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாக 2017இல் புகார் அளித்தார். இத்தகைய புகார்கள் ஏறத்தாழ எல்லா அரசியல் கட்சிகளிலும் உள்ளன. இடதுசாரிக் கட்சிகள் தற்போது ‘புகார்க் குழு’க்களை அமைக்கத் தொடங்கியிருக்கின்றன.

பாலியல் புகார்கள் மட்டுமல்ல; பாரபட்சங்கள், அவமரியாதை, ஒதுக்கிவைத்தல், செய்த பணிகளை அங்கீகரிக்காமல் அவமதித்தல் உள்ளிட்டவையும் குற்றச் செயல்களாக வரையறை செய்யப்பட வேண்டும். பாலினச் சமத்துவம் உள்ள சமூகம் உருவாவதற்கு அத்தகைய நடைமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் கட்டாயம்.

நன்றி: ‘இந்து தமிழ் திசை’ 28.6.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *