குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் சிந்தனையைத் தூண்டும் கழகத் தலைவர் அவர்களின் அசத்தல் கேள்வி!

6 Min Read

காலாவதியான மருந்துகளுக்காக சண்டைக்குப் போகும்
நீங்கள் காலாவதியான கருத்துகளை ஏற்கலாமா? சிந்தியுங்கள்!

தென்காசி, ஜூன். 28- ‘இந்து – இந்துத்வா – ஆர்.எஸ்.எஸ்.’ எனும் தலைப்பிலான வகுப்பில், நம்பி நம்பிதான் நாடு நாசமாகப் போச்சு என்றும், சமூகத்தில் உள்ள குற்றங் குறைகளை கண்டுபிடிக்கும் ஸ்கேன் கருவிதான் பெரியார்! திராவிடர் கழகம்! காலாவதியான மருந்துகளுக்காக சண்டைக்குப் போகும் நீங்கள் காலாவதியான கருத்துகளை ஏற்கலாமா? சிந்தியுங்கள்! என்றும் எளிமையான அதேசமயம் வலிமையான கேள்வியைக் கேட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மாணவர்களை சிந்திக்க வைத்தார்.

பெருகும் ஆதரவு

தென்காசி மாவட்டம் சார்பாக, 47 ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, ஜூன் மாதம் 25,26,27,28 ஆகிய நான்கு நாட்களில் நடத்தத் திட்டமிடப்பட்டு, குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியில் 25.06.2026 அன்று, தேநீர் மற்றும் மதிய உணவு இடைவேளை உள்பட காலை 10:30 மணி முதல் இரவு 8 மணி வரை தென்காசி மாவட்டம் இராமாலயம் பகுதியில் உள்ள இராமவர்மபுரம் வடக்குத் தெருவில் உள்ள, வீ.கே.யென்.இல்லம் இரண்டாம் கட்டடத்தில், முதல் நாள் கொள்கை வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. இதில் ஒன்பது  முக்கியமான தலைப்புகளில் ஒன்பது ஆளுமைகள் சிறப்பாக பாடம் நடத்தினர். மூன்றாம் நாளில் மாணவர்களின் எண்ணிக்கை 167 ஆக உயர்ந்தது. இதில் மாணவிகள் 65, மாணவர்கள் 102. பட்டதாரிகள் 60, பொறியாளர்கள் 18, பட்டயப்படிப்பு 3, பள்ளி மாணவர்கள் 86. இதிலும், முதல் முறையாக வந்தவர்கள் 134, ஏற்கனவே வந்தவர்கள் 33. இத்துடன் பார்வையாளர்களும் சேர்ந்து மொத்தம் 230 ஆகும். ஆண்டுக்காண்டு பயிற்சிப் பட்டறைக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

திராவிடர் கழகம்

தலைப்புகளில் வகுப்புகள்

27.06.2026 சனிக்கிழமை அன்று காலை, 9:45 மணிக்கு மூன்றாம் நாள் வகுப்புகள் தொடங்கி இரவு எட்டு மணிக்கு நிறைவு பெற்றன. முதல் வகுப்பாக முனைவர் வா.நேரு, “திராவிடர் கழகத்தின் தனித்துவம்!” எனும் தலைப்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “கடவுள் மறுப்பு!” எனும் தலைப்பிலும், பேராசிரியர் நா.எழிலரசன், “தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்” எனும் தலைப்பிலும், கழகத்தின் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், “சுயமரியாதை இயக்கம்; திராவிடர் இயக்கம் தோன்றியது?” எனும் தலைப்பிலும், பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், “வினாடி வினா” எனும் தலைப்பிலும், கழகத்தின் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், “சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” எனும் தலைப்பிலும், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், “தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலடி” எனும் தலைப்பிலும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தன்னுடைய இரண்டாம் வகுப்பில், இந்து – இந்துத்துவா – ஆர்.எஸ்.எஸ்.” எனும் தலைப்பிலும், பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைப்பில், பால்.இராசேந்திரம் நடுவர் பொறுப்பேற்க, “தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமா? பகுத்தறிவா?” எனும் தலைப்பில் பட்டிமன்றம் என மொத்தம் 9 வகுப்புகள் நடைபெற்றன.

திராவிடர் கழகம்

இருவேறு தலைப்புகளில் தமிழர் தலைவர் வகுப்பு நடத்தினார்.

கழகத் தலைவர் இரண்டாம் வகுப்பில், கடவுள் மறுப்பு எனும் தலைப்பில் பாடம் நடத்தினார். தொடக்கத்தில், மாணவர்களின் வருகைப் புள்ளி விவரங்களை எடுத்துரைத்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, “கடவுள் மறுப்பு என்பது, மக்களை புண்படுத்துவதற்காக அன்று. மாறாக பண்படுத்துவதற்கு” என்பதைச் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, தந்தை பெரியாரின் கடவுள் மறுப்புத் தத்துவத்தைக் கற்பித்தார். அதன் ஆழமான பொருளை விளக்கினார். தொடர்ந்து, கடவுள் தன்மைக்கு சொல்லப்பட்ட மூன்று அம்சங்களைக் கூறி, அது எந்தளவுக்கு தர்க்க வாதத்திற்கு பொருந்தாமல் பலவீனமாக இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டினார். சுலபமாக புரியும் வண்ணம், எடுத்துக் காட்டுகளுடன், நகைச்சுவை கலந்து அவரது பாடம் அமைந்தது.

திராவிடர் கழகம்

இறுதியாக, “வெற்றி பெறப்போவது அறிவே தவிர, மூடநம்பிக்கை அல்ல” என்று கூறி தனது பாடத்தை நிறைவு செய்தார். எட்டாம் வகுப்பில், “இந்து – இந்துத்துவா – ஆர்.எஸ்.எஸ்.” எனும் தலைப்பில், கழகத்தின் தலைவர் பாடம் நடத்தினார். அதில், சுயமரியாதை இயக்கம், ஆர்.எஸ்.எஸ். இரண்டின் தோற்றத்தையும், நோக்கத்தையும் விவரித்தார். அதற்கும் முன்பாகவே ஜோதி ராவ் புலே அவர்கள் தொடங்கிய, சத்திய சோதக் சமாஜ் எனும் ‘உண்மை நாடுவோர் சங்கம்’ பற்றியும், அப்படியே தந்தை பெரியார் நடத்திய, ‘உண்மை நாடுவோர் அச்சகம்’ பற்றியும் குறிப்பிட்டு ஒத்த கொள்கை உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பே இல்லாவிட்டாலும் ஒத்த கருத்துடன் தான் சிந்திப்பார்கள் என்று பேசினார்.

திராவிடர் கழகம்

தொடர்ந்து, ‘மனுதர்மம்’ அதன் சுருக்க வடிவமான, ‘மனுநீதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி’, ‘வேரும் விஷமும்’, ‘டிரோஜன் குதிரை’ ஆகிய புத்தகங்களை வாங்கிப் படிக்கப் பரிந்துரைத்தார். மேலும், ஹெக்டேவர், கோல்வால்கர், வி.டி.சவர்க்கார் உள்ளிட்டோரின் நச்சுக் கருத்துகளை எடுத்துரைத்தார். இந்து என்றால் என்ன? என்பதற்கான விசித்திரமான விளக்கத்தைக் கற்றுத் தந்தார். தொடர்ந்து, “ஜாதியைக் காப்பாற்றுவதற்காக உருவாக்கப்பட்டதுதான் இந்துத்துவா” என்பதை அம்பலப்படுத்தினார். தொடர்ந்து, இந்திய அரசியல் சட்டத்தை பாராட்டிக் கொண்டே அதை கரையான் போல, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. இரண்டும் சேர்ந்து கரைத்து வருவதை புலப்பட வைத்தார். “இதையெல்லாம் தாண்டித்தான் பெரியார் வெற்றி பெற்று வருகிறார்” என்றும், “சமூகத்தில் உள்ள குற்றம் குறைகளை ஸ்கேன் செய்து காட்டும் கருவிதான் பெரியார்! திராவிடர் கழகம்!” என்றும், “நம்பி நம்பிதான் நாடு நாசமாகப் போனது. அதிலிருந்து மீள, ஆர்.எஸ்.எஸ். கருத்தியலை ஒழித்துக்கட்டியே ஆக வேண்டும்” என்றும், “இறுதியாக வெற்றி பெறப்போவது அறிவே தவிர, மூடநம்பிக்கைகள் அல்ல” என்றும் கூறி, வகுப்பை நிறைவு செய்தார்.

பட்டிமன்றம்

இறுதியாக நடைபெற்ற பட்டிமன் றத்தில், இனநலமே எனும் தலைப்பில் ஹரிஸ், ஆதவன், கோ.மகேஸ்வரி, மாணிக்கவள்ளி, அபிநயா ஆகியோரும், பகுத்தறிவு எனும் தலைப்பில் வெங்கடேசன், ஜெயலட்சுமி, சாதனப் பிரியா, ரொசாண்டோ, இலக்கியா ஆகியோரும் அவரவர் தலைப்பின் அடிப்படையில் வாதங்களை எடுத்து வைத்தனர். இருதரப்பு வாதங்களையும் செவிமடுத்த நடுவர் பால்.இராசேந்திரம், ‘தந்தை பெரியாரின் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமே’ என்று தீர்ப்பு வழங்கினார்.

பங்கேற்றோர்

நிகழ்ச்சியில், மாநில ஒருங்கிணைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், தென்காசி மாவட்டக் காப்பாளர் டேவிட் செல்லத்துரை, தென்காசி மாவட்ட கழகத் தலைவர் த.வீரன், மாவட்ட செயலாளர் வை.சண்முகம், விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் மு.இளமாறன், குடந்தை மாவட்டக் காப்பாளர் தாராசுரம் இளங்கோவன், தென்காசி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முருகன், தென்காசி மாவட்ட இளைஞரணித் தலைவர் கோபால், பெருவளப்பூர் சித்தார்த்தன், தமிழ்ச் சுடர், தகவல் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் கே.டி.சி.குருசாமி, ஆகியோர் பயிற்சிப் பட்டறை பணிகளைச் செய்தும், தங்கமணி, தனலட்சுமி உள்ளிட்டோருடன் ஏராளமான பார்வையாளர்களும் பங்கேற்றுப் பயன்பெற்றனர். பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், வகுப்புகளை நெறிப்படுத்தியும், வகுப்பாசிரியர்களின் சிறப்பையும் எடுத்துரைத்து, எப்படிப்பட்ட ஆளுமைகள் வகுப்பாசிரியர்களாக வாய்த்துள்ளனர் என்பதை தவறாமல் சுட்டிக்காட்டினார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் அதில் கண்டிப்பு காட்டும்படி உத்தரவிட்டுள் ளதால், இப்பணிகளை செம்மையாக நிறைவேற்றி வருகிறார். மாணவர்களின் ஒத்துழைப்பும் நம்பிக்கையை ஊட்டும் வண்ணம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இடையிடையே தஞ்சை இரா.ஜெயக்குமார், ச.பிரின்சு, மு.இளமாறன் ஆகியோர், “கடவுள் இல்லை” கடவுள் இல்லை கடவுள் என்பது இல்லையே” எனும் பாடலை மூவரும் இணைந்து பாடி மாணவர்களின் கவனம் ஈர்த்தனர்.

திராவிடர் கழகம்

குற்றாலத்தில் நடைபெற்ற 47 ஆம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் வழக்கமாக வகுப்புகள் முடிந்த பிறகு, மாணவர்களின் கேள்விகளுக்கு வகுப்பாசிரியர்கள் பதில் சொல்வர். இந்த ஆண்டு, பொதுச் செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் ஆலோசனையின் பேரில், தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாணவர்கள் மேடைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு, உரிய பதில்களை வழங்கும் முறை கடைப்பிடிக்கப்பட்டது. தந்தை பெரியாரின் மீதான அவதூறுகளுக்கு பதிலடி என்ற வகுப்பிலும் இந்த முறைதான் என்றாலும் அதில் வகுப்பாசிரியரான பிரின்சு என்னாரெசு பெரியார் மாணவர்களிடம் கேட்டு, அதற்கு பதில் சொன்னார். மாறாக, இந்த வகுப்பில், “சமூகத்தில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” எனும் தலைப்பில், ஒவ்வொரு மாணவரும் அவரவர் அனுபவத்தில் எதிர்கொண்ட பிரச்சினைகளிலிருந்து கேள்வி கேட்டனர். அதற்குரிய பதில்களை பயிற்சிப் பட்டறையின் ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம் இருவரும் இணைந்து மாணவர்களிடம் நேரடியாக அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளுக்கு பதில்களையும், உரிய விளக்கங்களையும் அளித்தனர். சிறப்பாக கேள்வி கேட்ட சாருக்கான், யோகசிறீ, அபிநயா ஆகியோருக்கு இயக்கப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *