புதுடில்லி, ஜூன் 27 நாடெங்கும் பெரும் அச் சுறுத்தலாக உருவெடுத்துள்ள ‘டிஜிட்டல் கைது’ மோசடிகளைக் கட்டுப்படுத்த, சிபிஅய் அதிகாரிகள் நேற்றுமுன்தினம் (25.6.2026) அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.
சைபர் மோசடி
‘ஆபரேஷன் சக்ரா’ என்ற இந்த சிறப்புப் பணியின் கீழ், தமிழ்நாடு உட்பட 16 மாநிலங்களில் உள்ள 80 இடங்களில் சிபிஅய்-யின் 60 சிறப்புத் தனிப்படைகள் ஒரே நேரத்தில் சோதனைகளை மேற்கொண்டன. சைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடத்தப்படும் இந்த டிஜிட்டல் கைது மோசடியில் ஈடுபடும் கும்பல், தங்களை காவல்துறை, சிபிஅய் அல்லது நீதித்துறை அதிகாரிகள் போல அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். பொதுமக்கள் ஏதோ குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டது போலவும், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க பணம் தர வேண்டும் என்றும் மிரட்டிப் பணம் பறித்து வருகின்றனர்.
இந்த மோசடியின் உச்சகட்டமாக, இந்திய உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் போன்றே தோற்றமளிக்கும் போலி இணைய முகவரியை உருவாக்கி, நூற்றுக்கணக்கான மக்களை இந்த கும்பல் ஏமாற்றியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ம் சைபர் மோசடி தொடர்பான சுமார் 200-க்கும் மேற்பட்ட வழக்குகளோடு தொடர்புடைய இந்த கும்பலை முறியடிக்க நடத்தப்பட்ட சோதனையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். (பி.நரேஷ் – சென்னை சஞ்சீப் சா – கொல்கத்தா)
கண்டறியப்பட்ட உண்மைகள்: கைது செய்யப்பட்ட இருவரிடமும் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர்கள் போலி நிறுவனங்களைத் தொடங்கி, அதன் பெயரில் வங்கி கணக்குகளை ஆரம்பித்து, சட்டவிரோத பணப்பரிவர்த்தனைகளை மறைப்பதற்கான நிதி கட்டமைப்பை உருவாக்கியது தெரியவந்துள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.2 கோடி வரை சந்தேகத்திற்குரிய பணப்பரிமாற்றம் நடந்துள்ளதை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.இவர்களிடம் சிபிஅய் அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய உளவுப் பிரிவு தலைவராக மகேஷ் தீக்ஷித் நியமனம்
புதுடில்லி, ஜூன் 27- மத்திய உளவுப் பிரிவு (அய்பி) புதிய தலைவராக அய்பிஎஸ் அதிகாரி மகேஷ் தீக்ஷித் நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய உளவுப் பிரிவு தலைவர் தபன் தேகாவின் பதவி நீட்டிப்பு இம்மாதத்துடன் முடிவடைகிறது. இதையடுத்து உளவுப் பிரிவின் புதிய தலைவராக மகேஷ் தீக்ஷித்தை பிரதமர் மோடி தலைமையிலான நியமனக் குழு நியமித்துள்ளது. இவர் 2 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
1993ம் ஆண்டு அய்பிஎஸ் அதிகாரியான மகேஷ் தீக்ஷித் தனது பணிக் காலத்தில் பெரும்பாலும் உளவுத்துறையில் சிறப்பு இயக்குநராக இருந்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் 370-ஆவது சிறப்பு சட்டப் பிரிவை நீக்கிய பிறகு, அங்கு இவர் உளவுப் பிரிவு தலைவராக முக்கிய பங்காற்றினார்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இவர் உளவுப் பிரிவு தலைவராக பணியாற்றி, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
எபோலா அச்சுறுத்தல்
பன்னாட்டு பயணிகளுக்கு ‘ஏர் சுவிதா 2.0’ கட்டாயமாக்கியது ஒன்றிய அரசு!
புதுடில்லி, ஜூன் 27 ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் எபோலா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொது சுகாதார பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் ‘ஏர் சுவிதா 2.0’ (Air Suvidha 2.0) என்ற மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை ஒன்றிய அரசு மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்துள்ளது.
ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சகமும், டில்லி பன்னாட்டு விமான நிலைய லிமிடெட் (DIAL) நிறுவனமும் இணைந்து இந்த இணையதளத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளன.
இந்தியாவுக்கு வரும் அனைத்து பன்னாட்டு பயணிகளும் இந்த இணையதளம் வழியாக தங்களது சுய விவரங்களை அறிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.பயண விவரங்கள்: பயணிகள் தங்களின் கடந்த 21 நாட்களுக்கான பயண வரலாறு குறித்த விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சுகாதார விவரம்: எபோலா வைரஸ் தொற்று பாதிப்பு அல்லது அதற்கான அறிகுறிகள் தங்களுக்கு இருக்கிறதா என்பது குறித்த தகவல்களைப் பயணிகள் இதில் தெரிவிக்க வேண்டும். இந்தியா வந்தடைவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாகவே பயணிகள் இந்த ஏர் சுவிதா சுய அறிவிப்புப் படிவத்தை (Self-Declaration Form) இணையதளத்தில் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பன்னாட்டுப் பயணிகள் தடையற்ற மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, விமான நிலையத்திற்கு வரும் முன்பே இந்த படிவத்தை பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
