புதுல்லி, ஜூலை 18 நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் நாடாளு மன்ற உறுப்பினர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற வளாகத்திற்குள் போராட்டம் நடத்தவும், மறியல் போராட்டத்திற்கும், பதாகைகள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடிகள் அணியவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய கட்டுப்பாடு களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதிய கட்டுப்பாடுகள்!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20 ஆம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது.
இந்நிலையில் தான், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குப் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நாடாளு மன்றத்தின் மக்களவை செயலகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
”நாடாளுமன்ற வளாகத்தில் எலக்ட்ரானிக் டிவைஸ்களான ஸ்மார்ட் வாட்ச், ஸ்மார்ட் கண்ணாடி கள், கேமராவுடன் இருக்கும் பேனாக்கள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. யாருக்கும் தெரியாமல் ஒளிப்படம், காட்சிப் பதிவு எடுப்பதைத் தடுக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்தின் மாண்பை காக்க வேண்டும் என்பதற்காக சில முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாடாளுமன்ற வளாகத்தில் மறியல் போராட்டம், அரசியல் சார்ந்த போராட்டம், பதாகைகள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது. ஆயுதங்கள் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. நாடாளு மன்ற வளாகத்தில் மதங்கள் சார்ந்த நிகழ்ச்சிகள், பூஜைகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை நாடாளுமன்ற அனைத்து உறுப்பினர்களும் முறையாகப் பின்பற்றி, நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு மற்றும் மாண்பை காக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுப்பாடுகளுக்குப் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. நடைபெற உள்ள மழைக்கால கூட்டத்தொடரில் வெளிநாட்டில் இருக்கும் பெறும் நிதிகளை கட்டுப்படுத்தும் வகையில் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026 கொண்டு வரப்பட உள்ளது. இதுதவிர விக்சித் பாரத் ஷிக்ஷா அதிஷ்தான் பில் 2026, வருமான வரி (திருத்தம்) மசோதா 2026), உச்சநீதிமன்றம் (நீதிபதிகளின் எண்ணிக்கை) திருத்த மசோதா (2026), தேசிய கவுரவம் அவமதிப்பை தடுக்கும் (திருத்தம்) மசோதா 2026, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மேம்பாட்டு (திருத்தம்) மசோதா 2026 உள்ளிட்டவை கொண்டு வரப்பட உள்ளது.
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
இதுதவிர கடந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி களால் தோற்கடிக்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி களுக்கான தொகுதி மறுவரையறை மற்றும் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா உள்ளிட்டவற்றையும் ஒன்றிய அரசு கொண்டு வர நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது. இதனால் எதிர்க்கட்சியினர் வழக்கம்போல் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்த வாய்ப்புள்ளது. இதனால் தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த கட்டுப்பாடுகளுக்கு தற்போது நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
