புதுடில்லி, ஜூன் 26- மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், கடந்த திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியின்போது ‘எஸ்.அய்.ஆர்’ (SIR) பணிகளுக்கு எதிராக ஏப்ரல் 1-ஆம் தேதி அன்று கடுமையான வன்முறை வெடித்தது.
அந்த சமயத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 நீதிபதிகளை போராட்டக்காரர்கள் அதிரடியாக சிறைபிடித்தனர். இச்சம்பவம் நாடு முழு வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உச்சநீதிமன்றம் தலையீடு
இந்த வன்முறை மற்றும் நீதிபதிகள் சிறைபிடிப்பு நிகழ்வூ தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (Suo Motu) வழக்கு பதிவு செய்தது. மேலும், வழக்கின் தீவிரத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இதனை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வரும் என்.அய்.ஏ அதிகாரிகள், மால்டா மாவட்டம் மோத்பாரி பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவரான சயேம் சவுத்ரி (என்ற பாபு சவுத்ரி) என்பவரிடம் நேற்று (25.6.2026) அதிரடி விசாரணை நடத்தினர். வன்முறையில் அவருக்கு இருக்கும் தொடர்பு குறித்து நடத்தப்பட்ட இந்த விசாரணையைத் தொடர்ந்து, அவர் அதிகாரிகளால் அதிகாரப்பூர்வமாக கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள சயேம் சவுத்ரி, கடந்த தேர்தலில் மால்டா மாவட்டத்தின் மோத்பாரி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கைதைத் தொடர்ந்து வழக்கில் அடுத்தகட்ட விசாரணையை என்.அய்.ஏ தீவிரப்படுத்தியுள்ளது.
