சென்னை, ஜூன் 21 சென்னை மாநகர மக்களின் பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு மற்றும் அதன் அணுகல்தன்மை குறித்து ‘போக்குவரத்து மற்றும் மேம்பாட்டுக் கொள்கைக்கான நிறுவனம்’ (Institute for Transportation and Development Policy – ITDP) மக்களுக்கு அருகில் போக்குவரத்து இந்தியா (People Near Transit – PNT) என்ற புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வின்படி, சென்னையில் வசிக்கும் மக்களில் 61 சதவீதத்தினருக்கு மட்டுமே தங்களின் இருப்பிடத்திலிருந்து எளிதாக நடந்து செல்லும் தூரத்தில் ஏதேனும் ஒரு பொதுப் போக்குவரத்து வசதி இருப்பது தெரியவந்துள்ளது.
முதலாவது மற்றும் இறுதி மைல் இணைப்புத் திட்டம் (FLMC)
சென்னை மாநகரப் போக்குவரத்து கழகத்தின் (MTC) மேலாண் இயக்குநர் டி. பிரபாகரன் இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டார். இந்த ஆய்வின் முடிவுகள் மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) தரவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், மாநகரப் போக்குவரத்துக் கழகம் தனது புதிய ‘முதலாவது மற்றும் இறுதி மைல் இணைப்பு’ (First and Last-Mile Connectivity – FLMC) திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், சென்னையில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் 400 மீட்டர் அல்லது வெறும் 5 நிமிட நடைப்பயணத் தூரத்திற்குள் ஏதேனும் ஒரு பொதுப் பேருந்து வசதியை உருவாக்குவதாகும். இதற்காகப் போக்குவரத்து வசதி இல்லாத புதிய குடியிருப்புப் பகுதிகளில் சிறிய ரக மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) அறிமுகப்படுத்தவும், அவற்றை மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாயப் பணிகளிலும்
களம் இறங்கிய வடமாநிலத்தினர்
வேலை இழக்கும் உள்ளூர் தொழிலாளர்கள்

கிணத்துக்கடவு, ஜூன் 21 கிணத்துக்கடவு மற்றும் நெகமம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தென்னை நார் தொழிற்சாலை, பனியன் கம்பெனி, நூல் மில்கள் மற்றும் கட்டட வேலை உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் 90 சதவீத வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.அதுமட்டுமின்றி, கல்குவாரிகள், பேக்கரிகள், ஜவுளிக்கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வடமாநிலத் தொழிலாளர்களே அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். கிணத்துக்கடவு, நெகமம் பகுதிகளில் அதிகளவில் வட மாநிலத்தவர்கள் வசித்து வருவதால், அவர்களுக்கு இது தமிழ்நாடு என்ற நினைப்பே வருவதில்லை என்று கூறப்படுகிறது. இவர்களின் வருகையால் வேலையிழந்து தவிக்கும் உள்ளூர் தொழிலாளர்கள் விவசாய கூலி வேலைக்கு மட்டும் சென்று குடும்பம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது விவசாயக் கூலி வேலைகளுக்கும் செல்லத் துவங்கி விட்டனர். இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வடமாநிலத் தொழிலாளர்கள் 10 மற்றும் 20 பேர் ஒரு குழுவாக சேர்ந்து, தங்களுக்குள் ஒரு மேஸ்திரியை நியமித்துக்கொண்டு, ஏக்கர் கணக்கில் மொத்தமாக ஒப்பந்தம் பேசி, நாற்று நடுதல், களை எடுத்தல், மக்காச்சோளம், சோளம் வெட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு, குறித்த நேரத்திற்குள் செய்து முடித்து விடுகின்றனர்.
இதனால், உள்ளூர் தினக்கூலி தொழிலாளர்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும் நிலை உருகியுள்ளது.
2026 டெட் தேர்வு
தேர்வு அனுமதிச்சீட்டு வெளியீடு
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு!
சென்னை, ஜூன் 21 தமிழ்நாட்டுப் பள்ளிகளில் தற்போது பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்வு அனுமதிச் சீட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.தேர்வு தேதிகள்: ஜூலை 4 மற்றும் ஜூலை 5 (2026) ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.
தேர்வுத் தாள்கள்: பணிபுரியும் ஆசிரியர்களுக்கான முதல் சிறப்பு டெட் தேர்வு, தாள்-1 (Paper 1) மற்றும் தாள்-2 (Paper 2) ஆகிய இரண்டு தாள்களுக்கும் நடத்தப்படுகிறது.
பதிவிறக்கம் செய்யும் முறை: தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியுடைய ஆசிரியர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்குச் சென்று தங்களது தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இணையதளத்தில் தேர்வு அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் தொழில்நுட்பச் சிக்கல்கள் அல்லது சிரமங்களை எதிர்கொள்ளும் ஆசிரியர்களுக்காகச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 22 முதல் ஜூன் 30 ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் சிறப்பு முகாம்களில் நேரடியாகக் கலந்துகொண்டு, அங்கிருக்கும் முகாம் அலுவலர்களைத் தொடர்புகொண்டு தங்களது தேர்வு அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
