சென்னை, ஜூலை 23– ‘இந்துத் தீவிரவாதம்’ என பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு கழக வழக்குரைஞரான எஸ்.குமாரதேவன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் கடந்த 2016ஆம் ஆண்டு டிச.19 அன்று இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் புளியந்தோப்பு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய திராவிடர் கழக சொற்பொழிவாளரான வழக்குரைஞர் சு.குமாரதேவன், ‘இந்து மதத் தீவிரவாதிகள்தான் பொது சிவில் சட்டம் வேண்டு மென இல்லாத ஒன்றுக்கு வழிகாட்டுகின்றனர். அந்த இந்துத் தீவிரவாதத்தை எதிர்க்க நாம் எல்லோரும் ஒன்றுபட வேண்டும், யாராக இருந்தாலும் மக்களை பிளவுபடுத்துகிற செயலை அடியோடு அகற்ற வேண்டும்’ எனப் பேசியதாக குற்றம் சாட்டி அவர் உள்பட பலர் மீது புளியந்தோப்பு காவல் துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி வழக்குரைஞர் சு.குமாரதேவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர்கள் எஸ்.சங்கர், எம்.பிரித்வி கண்ணன் ஆகியோரும், அரசு தரப்பில் குற்றவியல் வழக்குரைஞர் ஆர்.ராஜசேகரனும் ஆஜராகி வாதிட்டனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மனுதாரர் மக்களை பிளவுபடுத்தக் கூடாது என்ற எண்ணத்தில்தான் பேசியுள்ளார்.
‘இந்துத் தீவிரவாதம்’ எனப் பேசியதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்திருப்பது ஏற்புடையதல்ல. நிகழ்வு நடந்து 10 ஆண்டுகளாகி விட்டது.
எனவே, இனியும் இந்த வழக்கைத் தொடருவதால் எந்தப் பயனும் இல்லை’ எனக் கூறி வழக்குரைஞர் சு.குமாரதேவன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
