சூடானில் டிரோன் தாக்குதல் அதிகரிப்பு: 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஜெனீவா, ஜூன் 17- சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவப் படையான விரைவுப் படைக்கும் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதில், டிரோன் தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
டிரோன் தாக்குதல் காரணமாக இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்டோர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
இதுபற்றி ஜெனீவாவில் உள்ள அய்.நா மனித உரிமைகள் கவுன்சிலில் உரையாற்றிய உயர் ஆணையர் வோல்கர் டர்க், “சூடானில் டிரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், கொடூரமான மோதல் மற்றும் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
இந்தாண்டு ஜனவரி முதல் மே வரையான டிரோன் தாக்குதல்களில் மட்டும் இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இதனை, நாங்கள் ஆவணப்படுத்தியுள்ளோம். இதுமட்டுமின்றி, அங்கு பாலியல் வன்கொடுமைகளும், குற்றங்களும் அதிகரித்துள்ளன” என வருத்தம் தெரிவித்தார்.
எத்தியோப்பியா: பள்ளத்தில்
பேருந்து கவிழ்ந்து 31 பேர் உயிரிழப்பு!
அடிஸ் அபாபா, ஜூன் 17- எத்தியோப்பியா நாட்டின் டெஸ்சி பகுதியில் இருந்து தலைநகர் அடிஸ் அபாபா நோக்கி நேற்று (15.6.2026) காலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பஸ் வடக்கேயுள்ள அம்ஹாரா பகுதிக்கு வந்தபோது, திடீரென விபத்தில் சிக்கியது.
அதிக பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து சாலையில் இருந்து விலகி பல அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் சிக்கி பயணிகள் 31 பேர் பலியாகி உள்ளனர். பலத்த காற்று வீசக்கூடிய மலைப்பிரதேசத்தில் சென்றபோது பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது.
ஆம்புலன்ஸ் பற்றாக்குறை
அவசரகால தேவைக்கான ஆம்புலன்ஸ் வசதி உள்ளிட்டவை அந்த பகுதியில் கிடைக்காத சூழல் காணப்பட்டது. இதனால், விபத்தில் சிக்கிய பயணிகள் பொதுபோக்குவரத்து வாகனங்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனாலேயே விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த பயணிகள் பலர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பரில் அந்நாட்டின் தெற்கே சிதமா பகுதியில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் 66 பேர் பலியானார்கள்.
