சென்னை, ஜூன் 16 தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’ விரிவாக்கம் செய்யப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் தேதி முதல் இத்திட்டம் முதற்கட்டமாகத் தொடங்கப்பட உள்ளது.
தலைமைச் செயலகத்தில் நேற்று (15.6.2026) முதலமைச்சர் விஜய் தலைமையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திலேயே இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முக்கியத் துறைகளின் செயல்பாடுகள் ஆய்வு
இந்த ஆய்வுக் கூட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பின்வரும் பிரிவு களின் செயல்பாடுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது: சமூக நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, குழந்தைகள், பெண்கள், திருநங்கைகள், மூத்த குடிமக்களுக்கான இல்லங்கள் மற்றும் நலத்திட்டங்கள், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மய்யங்களின் செயல்பாடுகள். பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மய்யங்கள் மற்றும் அவசர உதவி எண்கள் போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது
மேலும், ‘வெற்றித் தமிழ்நாடு’ தொலைநோக்கு அறிக்கையில் குறிப்பி டப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
துறையின் திட்டங்களை பயனாளர்க ளான குழந்தைகள், பெண்கள், திரு நங்கைகள் மற்றும் முதியவர்களிடம் எவ்வித தடையுமின்றி விரைவாகக் கொண்டு சேர்க்க வேண்டும்.
குழந்தைகள் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகாதபடி தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். போதைப் பழக்கத்திற்கு உள்ளான குழந்தைகளை மீட்டு, அவர்களுக்கு உரிய மறுவாழ்வு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவியர்களுக்கான காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை, செப்டம்பர் 17 ஆம் தேதி தொடங்குவதற்கு ஏதுவாக தேவையான பூர்வாங்க நட வடிக்கைகளை துறை அதிகாரிகள் உட னடியாக மேற்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல மைச்சர் மு.க.ஸ்டாலினால் ‘முதல மைச்சரின் காலை உணவுத் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. தற்போது இத்திட்டத்தின் கீழ் 1,545 அரசு பள்ளிகள் மற்றும் 3,995 அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 18.50 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இத்திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, தலைமைச் செயலாளர் சாய்குமார், நிதித்துறை செயலாளர் எம்.ஏ.சித்திக், சமூக நலத்துறை செயலா ளர் பல்லவி பல்தேவ் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
