‘வாய்ப் பறை’ கொட்டினால் ஏமாந்துவிடுவார்களா, மக்கள்?

‘தன்னார்வத் தொண்டு அமைப்பு’ என்ற முகமூடியுடன் தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ்.!
ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும் ‘ஜாதிப் பிரச்சினை’ குறித்து
அதிலிருந்தோரே ஆதாரப்பூர்வமாக எழுதியதற்கு மறுப்பு என்ன?

தன்னார்வத் தொண்டு அமைப்புஎன்ற முகமூடி யுடன்தான் தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ்.!
ஆர்.எஸ்.எஸ்.சில் இருக்கும்ஜாதிப் பிரச்சினைகுறித்து அதிலிருந்தோரே ஆதாரப்பூர்வமாக எழுதியதற்கு மறுப்பு என்ன? வாய்ப் பறை கொட்டினால் ஏமாந்துவிடுவார்களா, மக்கள்? என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார்!

‘‘ஆர்.எஸ்.எஸ். பற்றி சரியான புரிதல் இல்லை; உலகிலேயே மிகப்பெரிய தன்னார்வ அமைப்பாக ஆர்.எஸ்.எஸ். திகழ்கிறது. அதேசமயம் அதிகம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட அமைப்பாகவும் இருக்கிறது.

வெளியிலிருந்து பார்ப்பவர்கள், ஆர்.எஸ்.எஸ்.சைத் தவறான கண்ணோட்டத்திலேயே பார்க்கின்றனர். அதன் நூற்றாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், ஆர்.எஸ்.எஸ்.பற்றி மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ்.சை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், அதற்குள் வந்து, அதன் உள் விவகாரங்களை உற்று நோக்கவேண்டும்’’ என்பதாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் அவர்கள் கேரளம் மாநில திருவனந்தபுரத்தில் மூன்று நாள்களுக்கு முன்பு (12.6.2026) நடைபெற்ற அதன் நூற்றாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசும்போது குறிப்பிட்டுள்ளார்!

‘‘ஆர்.எஸ்.எஸ்.பற்றி சரியான புரிதல் இல்லை’’ என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் கூறுகிறார்!

அதையே தான் நாமும், அவருக்குப் பதிலாகக் கூறுகிறோம்.

ஆம்! ஆர்.எஸ்.எஸ். அவர் கூறுகிறபடி, வாதத்திற்காக உலகிலேயே பெரிய முதன்மை அமைப்பாக இருப்பதாக அவர் கூறுவதை ஏற்றுக்கொண்டாலும்கூட, அப்படி இருப்பதற்குக் காரணம், அதன்  உண்மைகளைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளப்படாததால், இன்னமும் பாம்பைப் பழுதை (கயிறு) என்று நம்பி, கால் வைத்து, கடிபடும் போன்ற நிலைதானா?

தன்னார்வத் தொண்டு அமைப்பு என்ற முகமூடியுடன் தொடங்கப்பட்டதுதான் ஆர்.எஸ்.எஸ்.!

1925 இல் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் புனேவில் டாக்டர் ெஹட்கேவர் போன்றவர்களால் ‘‘தன்னார்வத் தொண்டு’’ அமைப்பு என்ற போர்வை – முகமூடியுடன்தான் தொடங்கப்பட்டது.

அது தொடங்கப்பட்ட காலம் முதற்கொண்டு, 100 ஆண்டு கொண்டாடும் இன்றைய கால கட்டம்வரை ஹிந்து மதத்தைக் காப்பாற்றி, ஹிந்துத்துவக் கொள்கை களை முன்னிறுத்தி, ‘ஹிந்துராஷ்டிரத்தையே’ நிறுவி, பன்மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள ஒரு பரந்த இந்திய நாட்டில், அவற்றை நீக்கி, ஹிந்து நாடு என்று ஆக்கிடத் துடியாய்த் துடித்துக் கொண்டுள்ளது யதார்த்த நிலை. ‘‘தன்னார்வத் (Voluntary Organization) தொண்டு’’ செய்யும் அமைப்பில,் ஜாதி, மதம், முன்னுரிமை, முதலிடம் பெற்றது மட்டுமல்லாமல், ஏகபோகமாக ஒரு ஜாதியின் தன்மையே தொடருவது ஏன்? எப்படி?

  1. ெஹட்கேவர்
  2. எம்.எஸ்.கோல்வால்கர்

3.பாலாசாகேப் தேவரஸ்

  1. ராஜேந்திர சிங் (ராஜூ பையா) பார்ப்பனரல்லாதவர் (சில காலம் மட்டும்)
  2. மோகன் பாகவத்

இப்படி உயர்ஜாதி பார்ப்பனத் தலைமையே தொடர்ந்து (நியமனம் மூலம்) இருப்பது எப்படி அமைகிறது? அதுவும், நியமன முறைத் தலைமையுள்ள ஓர் அமைப்பில், யாரையும்கூட நியமிக்க வாய்ப்பு எளிதில் உள்ள நிலையில், எப்படி அமைகிறது?

மகாராட்டிராவில், புனே போன்ற பகுதிகளில் அதிகம் வசிக்கும் ‘சித்பவன்’ பிரிவைச் சேர்ந்த பார்ப்பனர்களால் தொடங்கப்பட்டபோதே, ‘‘தன்னார்வம்’’ என்று பொருள்படும் ‘ஸ்வயம்சேவக்’ என்பதைத் தலைப்புப் பெயராக அமைக்கவேண்டிய அவசியம் அதற்கு ஏன் ஏற்பட்டது தெரியுமா?

ஜோதிபாபூலே – சாவித்திரிபாய் பூலே!

அதற்குமுன் அங்கே, ஜோதிபாபூலே, ‘சத்யசோதக் சமாஜ்’ என்ற அமைப்பினை, சமூகநீதிக்கும், சமத்து வத்திற்கும் ஆதரவாகவும், ஜாதி வர்ண தர்மத்திற்கு எதிராகவும், பெண்ணடிமைக்கு எதிராகவும் உரு வாக்கினார். அவரது துணைவியார் சாவித்திரிபாய் பூலே ஆசிரியராகி, பெண்களுக்குக் கல்வி தந்தார். அந்த அமைப்பு, சமத்துவப் பண்பாட்டுப் புரட்சியை விதைத்து – மனுதர்மத்தின்  வர்ணாஸ்ரமத்தின் முதுகெலும்பை முறிக்கும் வண்ணம், திருமணம் போன்ற நிகழ்வுகளில்கூட பார்ப்பனர்களை அழைக்காமல் செய்ததின்மூலம் ‘‘சூத்திர, ஆதிசூத்திர’’ ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு வசதியாக ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்பினர். ஹிந்து மகாசபை செல்வாக்கிழந்தது. திலகர் போன்ற ஜாதி ஒழிப்புக்கு எதிராகவும், பெண்கள் கல்வி உரிமைக்கு எதிராகவும் பேசி வந்த தேசியப் போர்வையாளர்களின் செல்வாக்குச் சரிந்து வந்ததாலும், சுயமரியாதை இயக்கத்திற்கு ஈடான சத்யசோதக் சமாஜ் (உண்மை நாடுவோர் இயக்கம்) மராத்திய மன்னர் சத்திரபதி சாகுமகராஜ் போன்றவர்களின் எழுச்சிமிகு பேராதரவுடன் வளர்ந்து, ஆரியப் பார்ப்பனிய ஆதிக்கம் சரிந்து வந்ததைச் சரிகட்டவே ‘ஹிந்து மகாசபை’ என்று ஒரு பக்கம் வைத்துக்கொண்டே, ராஷ்ட்ரீய சுயசேவக் சங்கம் என்ற ஒரு முகமூடியுடன் ‘இந்துத்துவா’ என்ற ஓர் அரசியல் திட்டத்தை வி.டி.சவார்க்கார் போன்றவர்கள் உருவாக்கினர். அவரும் சித்பவன் பார்ப்பனரே! காந்தியாரைக் கொலை செய்த, நாதுராம் விநாயக் கோட்சேயும் அதே சித்பவன் பிரிவைச் சார்ந்தவர்தான்!

அந்தத் தத்துவத்தினைத் தங்களது மூலக் கொள்கை லட்சியமாக்க எப்படி ஒரு ‘‘தொண்டு நிறுவனம்’’ இயங்குவது சரியானது?

தாழ்த்தப்பட்டவர்கள் எப்படி நடத்தப்பட்டார்கள்?

தொண்டில், ஜாதி இல்லை என்று கூறும் இவர்கள், ‘‘தாழ்த்தப்பட்டவர்களை’’ எப்படி, உள்ளும், புறமும் நடத்தினார்கள் என்பதை, அதில் 30 ஆண்டுகளுக்குமேல் பணியாற்றிய, குஜராத், கேரளம், கருநாடகம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த பலரும் வெளியே வந்து, புத்தகங்களை எழுதி, அம்பலப்படுத்தி இருக்கிறார்களே! அதற்கு ஆதாரப்பூர்வமாக ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் மறுப்புகள் எழுதியுள்ளனரா?

மூன்று முறை ஒன்றிய அரசால்
தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு!

உண்மையான ஒரு தொண்டு நிறுவனமானால், அது ஏன் மூன்று முறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது? தடை செய்யப்பட்டே ஆக வேண்டிய அவசியம் என்ன?

‘தடை நீங்கி தானே ஆட்சியை அமைத்துள்ளோம்’ என்று இன்று கூறுகின்றனர். மூன்று முறை அவர்களது தலைவர்கள் நிபந்தனைகளை ஏற்றுத்தானே, தடையை நீக்கிக் கொண்டார்கள். அதிலும் தமிழ்நாட்டு காஞ்சி சங்கராச்சாரியாரின் முயற்சியால்,  பார்ப்பனர் ஒருவரின் இடைவிடாத ஈடுபாட்டால் முதல் தடை நீக்கம் பெற்றது என்பதை மறுக்க முடியுமா?

தொண்டு நிறுவனம் என்றால்,  அது அரசியல் பிரிவை ஏற்படுத்தி, ஆட்சியை தன்வயப்படுத்த அதன்மூலம் அது பன்முகத்தினை மாற்றிட முடியுமா?

எனவே, இவர்களை ‘‘ஆரிய வர்க்கத்தினர்’’ ஏற்றி ருந்தாலும்கூட, தென்னாட்டுத் திராவிடத்தில், அதன் சுய உருவத்தை, அடிக்கடி மாற்றிக் கொள்ளும் உருமாற்றத்தைச் (Metamorphosis) சரியாகப் புரிந்ததால்தான் ‘அந்த முகமூடி அகற்றப்பட்டு’, மக்கள் அதுபற்றிய புரிதலுக்கு ஆளாகி, அதனைக் காலூன்றவிடாமல், கவனமாகத் தங்களது நிலைப்பாட்டை உறுதிப்பாட்டுடன் வைத்துள்ளனர்!

இந்த நூற்றாண்டு வரலாற்றில், அது எடுத்த ‘‘அவதாரங்களை’’ மக்களிடம் கொண்டு செல்ல – அரசியல் வேட்கை, வாக்கு வங்கி அரசியலைத் தாண்டிய, இலட்சிய நோக்குள்ள இயக்கங்கள் பல ஏற்பட்டு, அதன் பாசிச பச்சையான உண்மைகளைப் பாருக்கும் கொண்டு போய்ச் சேர்க்கவேண்டும்.

தன்னார்வத் தொண்டு நிறுவனம் என்றால், ஏன் ‘ரகசியம்?’

‘வாய்ப் பறை’ கொட்டினால்
ஏமாந்துவிடுவார்களா, மக்கள்?

உள்ளே வந்து பார்க்க வாய்ப்பு, அங்குள்ள பெண்களுக்கே கிடையாதபோது, மற்றவர்களுக்கு எப்படி கிடைக்கும்? ‘வாய்ப் பறை’ கொட்டினால் ஏமாந்து விடுவார்களா, மக்கள்?

அதுமட்டுமா? பதிவு செய்யப்படாத அமைப்பாக நீடிக்கலாமா, ஒரு தொண்டு நிறுவனம்?

புரிந்துகொள்ளுங்கள்!

 கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை         

15.6.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *