புதுடில்லி, ஜூன் 14- உணவுப் பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களை பயன்படுத்தக்கூடாது என்று இந்திய உணவு பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
செய்தித்தாளில் உள்ள அச்சுமையில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் உள்ளன. எனவே உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பொட்டலம் கட்டக்கூடாது என்று இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஅய்) சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து எப்எஸ்எஸ்ஏஅய் 12.6.2026 அன்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: உணவுப் பொருட்கள் மற்றும் அலங்காரக் கேக்குகளில் மறைந்திருக்கும் உலோக ஊசிகளை பொதுமக்கள் விழுங்கிவிடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனால் அவர்களின் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
எனவே உணவுப் பொருட்கள், அலங்கரிக்கப்பட்ட கேக்குகள், கேக் பெட்டிகள், இனிப்புப் பெட்டிகள், தின்பண்டப் பொட்டலங்கள், உணவுப் பார்சல்கள், உணவுப் பாக்கெட்டுகளில் உலோக ஊசிகள், ஸ்டேப்ளர் பின், வயர்களைக் கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது.
இந்த அறிவுறுத்தலை மீறுவோர் மீது உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணயச் சட்ட விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு எப்எஸ்எஸ்ஏஅய் உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
