அரசு மற்றும் அலுவலகப் பணிகளில் பணிநிறைவு பெற்ற அறிவார்ந்த மூத்தோர்கள் அங்கம் வகித்திடும் தமிழ்நாடு மூதறிஞர் குழு பொறுப்பாளர்களின் நிர்வாகக் கலந்துரையாடல் கூட்டம் சென்னை – பெரியார் திடலில் 10.06.2026 அன்று காலை 11.00 மணி அளவில் தொடங்கி நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் புரவலர் ஆசிரியர் கி. வீரமணி தலைமை வகித்தார்.
கடந்த ஓராண்டில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி பற்றிய குறிப்புகள் மற்றும் ஒளிப்படங்களை மூதறிஞர் குழுவின் தலைவர் முனைவர் சுவாமிநாதன் தேவதாஸ் அறிக்கையாக வாசித்து புரவலரிடம் வழங்கினார்.
மூதறிஞர் குழுவின் நிர்வாகக் குழுவினர், மூதறிஞர் குழுவின் உறுப்பினர்களை அதிகரித்திட அண்மை யில் பணிநிறைவு பெற்றோரை சந்திப் பதன் அவசியம் பற்றியும் மூத்த அறிஞர் பெருமக்களை குழுவில் உறுப்பினர் களாகச் சேர்த்திடுவது பற்றியும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.
மூதறிஞர் குழுவினர் புரவலர் தமிழர் தலைவர் அவர்கள் வருங்காலத்தில் நடத்தப்படவேண்டிய நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை உள்ளடக்கிய வழி காட்டுதல் நெறியுரையினை ஆற்றினார்.
‘‘மூதறிஞர் குழு நடத்திடும் நிகழ்ச்சிகள், மக்களை நடைமுறையில் பாதிக்கும் கொள்கை சார்ந்த உயர்நிலை முடிவுகளைப் பற்றிய ஆய்வுரையாக நடத்தப்பட வேண்டும். சமுதாயத்திற்கு விளையும் நன்மை தீமைகளை முன்னோக்கி விளக்கிடும் வகையில் நடத்தப்படல் வேண்டும். உரிய தலைப்புகளில் உரையாற்றிட அந்தந்த தலைப்பில் ஆழ்ந்து அறிவு, அனுபவம் பெற்ற அறிஞர் பெருமக்களை அழைத்து உரையாற்றிடச் செய்தல் வேண்டும்’’ என புரவலர் தனது நெறியுரையில் குறிப்பிட்டுப் பேசினார்.
அறிவியல் மனப்பான்மையினை மக்களிடம் பெருக்குகின்ற வகையில் நிகழ்ச்சிகள் நடத்துவது பற்றியும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்ட நிறைவில் தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் வருங்கால செயற்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
