சமூக ஊடகத்திலிருந்து… “திராவிடம் என்றும் தொடரும்; வெல்லும்!“ கை. அறிவழகன்

16 Min Read

“50 ஆண்டுகால திராவிட ஆட்சிக் காலத்தில் எல்லாம் சீரழிந்து விட்டது, நாசமாய்ப் போய்விட்டது, மாற்றம் வேண்டும்“ என்று வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் ஊடக சங்கிகளையும், போலி தமிழ் தேசிய சங்கிகளையும் சந்திப்பது இப்போதெல்லாம் வழக்கமான ஒன்று.

இந்த திருட்டு நரி ஊளையை ஆரம்பித்து வைத்தது யாரென்று கூர்ந்து கவனித்தால் கடைசியில் ஒரு பார்ப்பன சங்கிகளிடம் போய் நிற்கும். 50 ஆண்டு கால திராவிட அரசியல் எப்படித் தோற்றது அல்லது அதற்கான ஏதாவது புள்ளி விவரங்கள் உண்டா?

இந்தக்  கேள்வியைத்  கேட்டால், பெரியார் தமிழ் விரோதி, கருணாநிதி குடும்பம், ஈழத்தமிழர் படுகொலை “அய்யோ அம்மா” என்று கூக்குரல் போட்டு விட்டு ஓடி விடும் பலரைத் தொடர்ந்து நாம் பார்க்கிறோம்.

குறிப்பாகப் போலித் தமிழ் தேசியம் பேசுகிற சீமான் உட்பட பலர் திராவிட அரசியல் மீதான வன்மத்தைப் பரப்புவது தங்கள் அரசியல் இருப்புக்காகவே தவிர, அரசியல் கருத்தாக்கம் அல்ல.

எந்தப் புள்ளி விவரங்களும் இல்லாமல் கடந்த 50 ஆண்டு கால அரசியல் வரலாற்றில் தமிழ்நாடு அடைந்திருக்கிற முன்னேற்றங்களைப் பற்றிய எந்த சுய சிந்தனையும் இல்லாமல் இளம் தலைமுறை மீது ஒரு கற்பிதம் தொடர்ந்து திணிக்கப்படுகிறது.

பாலாறும், தேனாறும் ஓடிக்கொண்டிருந்த தமிழ்நாட்டை கடந்த 50-60 ஆண்டுகளில் திராவிட அரசியல் பிச்சை எடுக்க வைத்துவிட்டது போன்றதொரு தோற்றத்தை உருவாக்குவதில் தொடர்ந்து இந்துத்துவ பார்ப்பனிய சங்கிகள் தீவிரமாக இயங்கிக் கொண்டே இருப்பார்கள்.

இப்போது ஈழ அரசியலை முன்வைத்து திராவிட அரசியல் வரலாற்றின் மீது வன்மம் கக்கும் போலி தமிழ் தேசியர்கள், பார்ப்பனர்களின் அந்த வேலையை எளிதாக்க அவர்களோடு கைகோர்த்து இருப்பதையும் நம்மால் அறிய முடியும்.

தமிழ்நாட்டு அரசியல், ஈழ விடுதலை இயக்க அரசியலோடு பின்னிப் பிணைந்திருக்கிறது, ஈழ மக்கள் மீதான நேசம் தமிழகத்தைப் பொறுத்தவரை கட்சி வேறுபாடுகளைக் கடந்து இன்றும் நிலைத்திருக்கிறது. ‘அந்த உறவுக்கு நாங்களே முழு உரிமை பெற்றவர்கள்’ என்பது போலப் பேசும் போலி தமிழ் தேசியர்களின் கூட்டத்தை பெரும்பான்மையான ஈழ மக்களே காலப்போக்கில் உணர்ந்து விட்டார்கள் என்பது ஆறுதல் தருகிற விஷயம்.

எனவே தமிழ் ஈழ விடுதலைப் போர் என்கிற அரசியல் தளத்தை முன்வைத்துப் பேசப்படுகிற திராவிட இயக்க எதிர்ப்பு இயக்கங்களை நாம் விலக்கி வைப்போம், தமிழ் ஈழ விடுதலைப் போர் பல்வேறு முகாந்திரங்களைக் கொண்டது, அதன் உள்ளடக்கம் வெறும் தமிழ்நாட்டு அரசியலை மையமாக வைத்து நிகழ்ந்த ஒன்றல்ல.

பல்வேறு தளங்களில் நிகழ்ந்த மாற்றங்கள், உலக அரசியலில் முதலாளித்துவ நாடுகளோடு இலங்கை கொண்டிருந்த நெருக்கமான உறவு, இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையில் நிலவிய பார்ப்பனீய வலதுசாரி அரசியல், இலங்கை மற்றும் ஈழத்தின் நிலவியல் முக்கியத்துவம் என்று பல காரணிகள் உள்ளடங்கி இருக்கிற ஈழ விடுதலை இயக்கத்துக்குள் திராவிட உள்ளீடுகள் மறுக்க இயலாதவை மட்டுமல்ல, தவிர்க்கவும் இயலாதவை என்பது உண்மை.

அதுகுறித்து நாம் பலமுறை பேசியிருக்கிறோம், கடந்த 50-60 ஆண்டுகால தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றை ஈழ விடுதலையை முதன்மையாக வைத்து விவாதிப்பது எந்த வகையிலும் நேர்மையான ஒன்றல்ல. ஆகவே அந்த விவாதத்தை நாம் வேறோரு தளத்தில் வைத்துக் கொள்ளலாம்.

60 ஆண்டு கால வளர்ச்சி

இப்போது நாம் திராவிட அரசியல் இயக்கங்களின் கடந்த 60 ஆண்டுகால வரலாற்றில் நிகழ்ந்திருக்கும் மாற்றங்களைப் பார்ப்போம். இந்திய ஒன்றியத்தில் மாநிலங்களின் வளர்ச்சி குறித்த பல்வேறு புள்ளி விவரங்கள் இருக்கின்றன.

பொருளாதார அறிஞர்கள், சமூக ஆய்வாளர்கள் என்று பல தரப்பினரால் தகுந்த தரவுகளோடு மெய்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்தப் புள்ளி விவரங்கள் போலி தமிழ் தேசியர்களுக்கு எப்போதும் வயிற்றில் புளியைக் கரைக்கக் கூடியது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைக் கீழ்க்காணும் அலகுகள் தான் முடிவு செய்கின்றன.

1) தொழில்துறை

2) உள்கட்டுமான அமைப்பு

3) சாலைப் போக்குவரத்து

4) அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு

5) அடிப்படைக் கல்விக் கட்டமைப்பு

6) பொது விநியோகக் கட்டமைப்பு

7) குழந்தைப் பேறு மருத்துவம்

8) தனி மனித வருமானம்

கடந்த 50-60 ஆண்டுகளில் தமிழ்நாடு மேற்கண்ட 8 புள்ளிகளிலும் எப்படி வளர்ந்திருக்கிறது, ஏனைய மாநிலங்களை விட எப்படியெல்லாம் சாதனைகள் படைத்திருக்கிறது என்பதை திராவிட எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கிற பார்ப்பனியச் சங்கிகளுக்கும், அவர்களுக்கு அன்னக்காவடி எடுக்கிற பார்ப்பனரல்லாத சங்கிகளுக்கும், முட்டுக் கொடுக்கிற தமிழ்த் தேசிய சங்கிகளுக்கும் நாம் சொல்ல வேண்டியிருக்கிறது.

பார்ப்பன புரட்டுகள்

முதல் பிரிவான பார்ப்பனியச் சங்கிகளுக்கு இது நன்றாகத் தெரிந்த விஷயம், ஆனாலும் தனது தனித்த ஆதர்ஷ வேடமான ‘புனிதன்’ மற்றும் ‘மேலானவன்’ என்கிற வேடம் தமிழகத்தில் திராவிட இயக்க அரசியலால் கலைக்கப்பட்டதால் பிட்டத்தில் அடிபட்ட நரிபோல அவர்கள் தொடர்ந்து ஊளையிடுவார்கள்.

இரண்டாமவர் “கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி”. பார்ப்பனியச் சங்கிகள் செய்வதைப் போலவே செய்து, தன்னை ஒரு ‘தலையில் இருந்து பிறந்தவனாக’ப் பாவனை செய்யும் பெருமுயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் இவருக்கு உண்மைகள் தெரியாது,

பார்ப்பனியச் சங்கியால் அவிழ்த்து விடப்பட்ட பொய் மூட்டைகளை சுமந்தபடி இருக்கும் இந்த இரண்டாம் வகை திராவிட எதிராப்பாளர்களை தரவுகளோடு உண்மையைச் சொல்லி நம்மால் மாற்ற இயலும்.

மூன்றாம் வகையான புதிய போலி தமிழ் தேசிய சங்கிகள் உண்மையில் பரிதாபத்துக்கு உரியவர்கள், அரசியல் அரிச்சுவடியே அறியாத இந்த இளம் தலைமுறைக்குத் தெரிந்தது எல்லாமே சமூக இணையதள அரசியலும், ‘கருணாநிதி குடும்ப’ வெறுப்பு அரசியலும், ஈழ விடுதலைப் போரின் கடைசிக் காட்சிகளால் வேயப்பட்ட ஒரு மாய அரசியலும் மட்டும்தான். இவர்களைப் பீடித்திருப்பது ஒரு வகையான நோய் என்பதால் கவனத்தோடு கையாள்வதும், மீட்பதும் தலையாய கடமை.

1) தொழில்துறை :

இந்தியப் பொருளாதாரத்தில் ஏறத்தாழ 5 இல் 1 பங்கு தமிழ்நாட்டினுடையது, பெருந்தொழில்கள் 10-15, பெருந்தொழில் சாராத நடுத்தரத் தொழில்கள் ஏறத்தாழ 1000 அளவிலும், சிறு குறு தொழில்கள் சேர்ந்து ஏறத்தாழ 15000-20000 வரையில் கடந்த 50 ஆண்டுகளில் வேரூன்றி இருக்கிறது.

தொழில்துறையில் மிகப்பெரிய மாநிலமாகக் கருதப்படும் மகாராஸ்ட்டிராவில் மும்பையில் இருந்து புனே வரைக்குமான Industrial Corridor தான் தொழில்களின் மய்யம், மகாராட்டிராவில் மும்பையையும், புனேவையும் தவிர்த்து பெருநகரங்கள் இல்லை.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவைத் தவிர எந்தவொரு நகரத்தின் பெயரையாவது நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? மும்பை மற்றும் புனேவை ஒட்டிய தொழில் மண்டலங்களை நீக்கி விட்டால் மகாராஷ்டிரா ஒரு பழங்குடி மாநிலமாக மாறிவிடும் வாய்ப்பு உண்டு.

தமிழ்நாடு அப்படி இல்லை, தமிழ்நாட்டில் நான்கு மூலைக்கும் ஒரு பெருநகரமுண்டு; பெருநகரங்களை இணைக்கும் வழியெங்கும் தொழில் மண்டலங்கள் உண்டு; பெருந்தொழில் மண்டலங்களை ஒட்டி இருக்கும் உள்வழித்தடங்களில் உதிரிப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்சார்ந்த நிறுவனங்கள், உற்பத்தி நிலையங்கள், அதனைச் சார்ந்து இயங்குகிற கிராமங்கள், மனிதர்கள் என்று இந்தக் கட்டமைப்பு பரவலானது மட்டுமில்லை வலிமையானதும் கூட.

நீதிக்கட்சி தொடங்கியது

1919 ஆம் ஆண்டு ஆங்கில அரசு துவக்கி வைத்த இரட்டை ஆட்சி முறையை இந்தியாவெங்கும் காங்கிரஸ் மறுதலித்த நேரத்தில், நீதிக்கட்சி அதில் பங்குபெற்ற காலகட்டத்தில் இருந்து உருவான வளர்ச்சி  இது. முதன்முதலாக பள்ளிகளில் உணவு கொடுத்துக் கல்வியை வளர்த்த நீதிக்கட்சியின் காலத்தில் இருந்து தொடங்குகிற திராவிட இயக்கங்களின் வளர்ச்சி இது.

இந்தத் தொழில் வளர்ச்சியின் பின்புலத்தில் இருப்பது ஒன்றும் ராஜராஜ சோழனும் அவரது தந்தையாரும் அல்ல. ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்துக் கட்டப்பட்ட திராவிட அரசியலின் உழைப்பு, திட்டங்கள், தொழிற்பேட்டைகள், தொழில் முனைவோருக்கான கடன்திட்டங்கள். கூட்டுறவு நிறுவனங்கள், சிறப்புக் குழுக்கள், புதிதாக உருவாக்கப்பட்ட துறைகள், துறை சார்ந்த அலுவலகங்கள் என்று மிகப்பெரிய திட்டமிடலும், செயல்திட்டங்களும் இவற்றுள் அடக்கம். இவற்றை நிகழ்த்திக் காட்டியது திராவிட இயக்கம். இவற்றின் மூலமாக ஒரு புதிய மக்கள் திரளைச் சமூகப் பொருளாதார விடுதலை பெற்றவர்களாக மாற்றிக் காட்டியது திராவிட இயக்கம்.

2) உள்கட்டுமான அமைப்பு:

தமிழ்நாட்டின் சாலைகளில் எந்தத் திசையில் நீங்கள் பயணித்தாலும் ஒவ்வொரு 30 கிலோமீட்டர் தொலைவுக்கும் ஒரு சிறு நகரத்தை அடைந்து விடுவீர்கள், அந்த 30 கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மக்களின் அரசு அலுவலகத் தேவைகளை, வேலைவாய்ப்புத் தேவைகளை, தொழில் சார்ந்த தேவைகளை நிறைவு செய்யும் உள்கட்டுமான வசதிகள் அந்தச் சிறு நகரத்தில் இருக்கும்.

புதிய தொழில் வாய்ப்புகளை அளிக்கும் தொழில் நுட்பங்களைச் செயல்படுத்திப் பார்க்கும் தொழில் முனைவோர், சார்பு நிலை கிராமப் பணியாளர்களின் பொருளாதார மண்டலமாக இந்தச் சிறு நகரங்கள் இருக்கும்.

வங்கிகள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளி கல்லூரிகள் கொண்ட பெருநகரச் சாயல் கொண்ட சுயசார்புப் பொருளாதார மண்டலமாக இந்தச் சிறு நகரங்கள் தொடர்ந்து இயங்குகின்றன. இவை கடந்த 50-60 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நகரங்கள், திராவிட ஆட்சியாளர்களால் திட்டமிடப்பட்டுச் செதுக்கப்பட்ட நகரங்கள்.

இத்தகைய ஒரு நெருக்கமான நகரமைப்பு இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லை. குஜராத், மாகாராஷ்டிரா போன்ற வளர்ச்சி அடைந்ததாகச் சொல்லப்படுகிற மாநிலங்களில் கூட இத்தகைய நகரக் கட்டுமான அமைப்பு இல்லை.

இன்றைக்கும் மின்சார வசதி இல்லாத இந்தியக் கிராமங்கள் பல இருக்கும் சூழலில், 1970 களில் மின்சாரத் தன்னிறைவை எட்டிய மாநிலம் தமிழகம். மின்சாரத்தையும் அதன் உற்பத்திக் கட்டுமானத்தையும் உருவாக்கியது முப்பாட்டன் முருகன் அல்ல, திராவிட இயக்கத் திட்டமிடல், அதன் தலைவர்கள்.

3) சாலைப்போக்குவரத்து:

தமிழ்நாட்டின் எல்லா கிராமங்களும் அதன் அருகில் இருக்கிற சிறு நகரங்களுடன் சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன; சிறுநகரங்கள் மாநில நெடுஞ்சாலையுடனும், தேசிய நெடுஞ்சாலையுடனும் இணைக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டின் எந்த ஒரு சிறு நகரத்தில் இருந்தும் ஓர் இரவில் மாநிலத் தலைநகரையோ, இன்னொரு பெருநகரத்தையோ அடைந்து விட முடியும்.

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இத்தகைய சாலைப்போக்குவரத்து வசதிகள் இன்னும் இல்லை. குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் இருந்து கூட, நீங்கள் இரவு 10 மணிக்கு மேல், குஜராத்தின் ஒரு உள்ளார்ந்த சிறு நகரத்துக்குப் பயணித்து விட முடியாது.

38 மாவட்டங்களை இணைக்கும் 150 சாலைப் போக்குவரத்து மண்டலங்கள், 450 துணை மண்டலங்கள் என்று தேசிய சராசரியை விடப் பன்மடங்கு அதிகமான உள்கட்டமைப்பு. இந்தக் கட்டமைப்பை உருவாக்கியது பாண்டியன் நெடுஞ்செழியனும், சீதாராமனும் அல்ல.

வாய் கூசாமல் எந்த திராவிடத்தின் மீது வன்மம் கக்குகிறோமோ அந்த இயக்கத்தின் தலைவர்களும், ஆட்சியும் தீட்டிய திட்டங்களும் தான்.

4) அடிப்படை மருத்துவக் கட்டமைப்பு:

தமிழ்நாட்டின் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழும் எல்லாக் கிராமங்களிலும் ஒரு சுகாதார மையம் உண்டு, எந்நேரமும் பணியில் இருக்கும் மருத்துவப் பணியாளர்களும், தினமும் வருகைதரும் மருத்துவரும் இங்கு உண்டு. 5 ஆண்டுகள் கட்டாய மருத்துவப் பணிகளை இங்கு மேற்கொள்பவர்களுக்கு மட்டுமே உயர் மருத்துவக் கல்வியில் இடம் உண்டு.

ஊரகப் பகுதியின் அரசு மருத்துவமனைகள் அடுத்த படிநிலை, மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பின்பு மாநிலத் தலைநகரத்திலும் பெருநகரங்களிலும் இயங்கும் “Super Speciality Hospitals” என்று மலைக்க வைக்கும் கட்டமைப்பு வசதி கொண்டது தமிழ்நாடு அரசு மருத்துவக் கட்டமைப்பு!

1980 வரைக்குமான மருத்துவக் கட்டுமான அமைப்புக்கும், 1980க்குப் பிறகு இன்றுவரை மருத்துவத் துறையில் நிகழ்ந்திருக்கிற மிகப்பெரிய மாற்றம் திராவிடக் கட்சிகளின் மக்கள் நலத்திட்டங்களால் விளைந்த பெருங்கொடை.

இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகப்பெரிய செலவு வைக்கும் நோய்களுக்கான மருந்துகள் இலவசமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படுவதும், நவீன மருத்துவக் கருவிகள் மூலம் செய்யப்படும் சிகிச்சைகளும் தமிழகத்தில் உலக அளவில் புகழ்பெற்றவை.

இந்திய சராசரியைவிடப் பன்மடங்கு அதிகமான மருத்துவக் கட்டமைப்பு திராவிட இயக்கங்களால் உயிர் பெற்றது. வாய்ப்பேச்சு வீரர்கள் சிலர் இந்த மருத்துவக் கட்டமைப்பைக் குறித்து மேடைகளில் முழக்கமிடுவது பார்ப்பனச் சங்கிகளுக்கும், அவர்களுக்குக் கொஞ்சமும் குறைவில்லாத இந்தத் தமிழ்த்தேசியம் சங்கிகளுக்கும் வேப்பங்காயாய் கசக்கும்.

தவிர பாரம்பரிய மருத்துவம் அல்லது இயற்கை மருத்துவத்தின் பெயரில் இந்தக் கட்டமைப்பைச் சிதைக்கும், உயிராபத்து விளைவிக்கும் வேலையையும் கூடுதலாகத் தமிழ் சங்கிகள் முன்னெடுப்பது அவர்களின் அறியாமையும், திராவிட இயக்க அரசியல் பணிகளைப் பின்னுக்கு இழுக்கும் மடமையும் என்பது கூடுதல் செய்தி.

5) அடிப்படைக் கல்விக் கட்டமைப்பு:

10 வயது வரையிலான குழந்தைகள் பள்ளியில் நுழையும் விழுக்காடு ஏறத்தாழ தமிழகத்தில் 100%. இதில் 80% விழுக்காடு மாணவர்கள் பிறகு உயர்நிலைக் கல்வியையும், 52% வரையில் கல்லூரிக் கல்விக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள் நுழைகிறார்கள்.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு

இட ஒதுக்கீடு என்பது இந்த வளர்ச்சிக்கான மிக முக்கியமான காரணி, இந்திய வரலாற்றில் திராவிட இயக்க அரசியல்தான் இட ஒதுக்கீட்டை முதன்முதலாக உள்ளீடு செய்த பேரியக்கம்.

தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் 69% விழுக்காடு இட ஒதுக்கீடுதான் கல்வியில் நாம் செய்திருக்கிற சாதனைக்களுக்கான முழு முதற்காரணி. தேர்தல் அரசியலிலும், அதிகாரத்திலும் இல்லாமல் அதை செயல்படுத்திக் காட்டிய இயக்கமாக திராவிடர் கழகமும், அதன தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களும் சாதித்தனர்.

100 இந்திய உயர் கல்வி நிலையங்களின் சிறந்த தரத்தைப் பட்டியலிட்டால் அதில் ஏறத்தாழ 30 கல்வி நிலையங்கள் தமிழகத்தினுடையது. மீதி 27 மாநிலங்கள் சேர்ந்து தான் 70 கல்வி நிலையங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

5 கிலோமீட்டர் தொலைவுக்குள் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியை நமது குழந்தைகள் அடைந்து விடுவார்கள். 10 கிலோமீட்டர் தொலைவில் ஓர் அரசுக் கல்லூரியை நமது மாணவர்கள் அடைந்து விடுவார்கள். காமராசரில் இருந்து துவங்கி கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் என்று இந்தக் கட்டமைப்பை உருவாக்கிய திராவிட இயக்கத் தலைவர்களை வாய்க்கு வந்தபடி வன்மம் கக்கும் எவரின் குழந்தைகளும் இந்தத் தலைவர் உருவாக்கிய கல்வி நிலையங்களில் தான் உருவாக்கப்படுகிறார்கள்.

காமராசர் உருவாக்கிய பகல் உணவுத் திட்டத்தை அரசின் அதிகாரப்பூர்வமான துறையாக ஒரே நாளில் மாற்றிக் காட்டியவர் எம்.ஜி.ஆர். மிகப்பெரிய உள்கட்டுமான வசதியைக் கோரும் இந்தத் திட்டத்தை ஒரு நாளில் சட்டமன்றத்தில் அறிவித்து உலகைத் தன்பக்கம் திரும்ப வைத்தவர் எம்.ஜி.ஆர் என்றால் அதற்கான கட்டமைப்பை உருவாக்க முடியும் என்று உறுதிப்படுத்தியவர் இட ஒதுக்கீட்டில் பயின்று வந்த ஒரு பிற்படுத்தப்பட்ட அய்.ஏ.எஸ்.

திரு.திரவியம் அய்.ஏ.எஸ். தான் எம்.ஜி.ஆரின் இந்த அறிவிப்பைச் செயலில் நிகழ்த்திக் காட்டியவர். பின்பு கலைஞரும், ஜெயலலிதாவும் சத்துணவுத் திட்டத்தை தங்களால் இயன்ற அளவில் செழுமைப்படுத்தினார்கள். பின்னர் அந்த திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துச் செயல்படுத்திய காலை உணவுத் திட்டம் உலகுக்கே வழிகாட்டக் கூடியது.

இந்தியாவிலேயே அதிக மருத்துவக் கல்லூரிகளும், பொறியியல் கல்லூரிகளும் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு. ஏறத்தாழ ஸ்காண்டிநேவியன் நாடுகளில் அளிக்கப்படும் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த பட்டப் படிப்புகளும் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் உண்டு.

கடந்த அய்ந்தாண்டுகளில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட கல்வித் திட்டங்களைப் பட்டியலிட்டால் அதுவே தனிக் கட்டுரையாக நீளும்.

முறையான திட்டமிடுதல்களும், ஒதுக்கீடுகளும், சமூக அக்கறையும் இல்லாத எந்த இயக்கமும் இந்தச் சாதனைகளை நிகழ்த்திக் காட்டி இருக்க முடியாது. திராவிட இயக்கத்தை எதிர்ப்போர் இந்தச் சாதனைகளைப் பேசுவதில்லை, ஏனெனில் இதுகுறித்த உண்மைகளைப் பேசினால் அரசியல் இருப்பற்ற ஒரு வெற்றிடத்தை நோக்கி நாம் தள்ளப்படுவோம் என்கிற உண்மையை அவர்கள் அறிவார்கள்.

6) பொது விநியோகக் கட்டமைப்பு:

இந்திய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தின் பொது விநியோகக் கட்டமைப்பு தனிச்சிறப்பு வாய்ந்தது, ஏறத்தாழ 2.5 கோடிப் பயனாளர்களைக் கொண்டது, கேரளாவின் பொதுவிநியோகக் கட்டமைப்புக்கும் தமிழ்நாட்டின் பொது விநியோகத்துக்கும் இடையில் கூட மிகப்பெரிய வேறுபாடு உண்டு. Optional Acceptance என்கிற விநியோக முறை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

கேரளாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் மக்களுக்கு மட்டுமே பொது விநியோகத் திட்டத்தின் பலன்கள் சென்றடையும் நிலையில், தமிழ்நாட்டின்ல் எல்லாத்தரப்பு மக்களும் உள்ளடங்கிய அமைப்பில் தேர்வு செய்து கொள்கிற வாய்ப்பு உண்டு. பேரிடர் காலங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அனைவருக்குமான பயன்கள் சென்றடைகிற சூழலை நம்மால் உணர முடியும்.

இலவசங்கள் என்கிற பார்வையைத் தாண்டி பண்பாட்டு விழாக்களின் போது உருவாக்கப்படுகிற ஒருங்கிணைவையும் உள்ளடக்கியதாக தமிழ்நாட்டின் பொது விநியோக முறை செயல்படுகிறது.

இந்தக் கட்டமைப்பு கிராமப்புற இடைவெளிகளைத் தாண்டி ஜாதி மத வேறுபாடுகளைக் கடந்து ஒரு நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறது. இந்தக் கட்டமைப்பின் பணியாளர்கள் சமூகநீதியின் அடிப்படையில் இயங்குவதால் சமூகப் பரவலாக்கம் இயல்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

திராவிட இயக்கத்தின் சமூக அரசியல் திட்டங்கள் இந்தக் கட்டமைப்பை நேர்த்தியான ஒரு அரசியல் செயல்திட்டமாக உருவாக்கி இருக்கின்றன. கட்சித் தலைவர்களில் இருந்து கடைசித் தொண்டன் வரை இந்த உறுதியான அமைப்பை உருவாக்குவதில் பங்காற்றி இருக்கிறார்கள்.

சமூகக் கட்டமைப்பின் முகமாக இயங்கும் பொது விநியோகக் கட்டமைப்பு தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை முறையை மாற்றி இருக்கிறது. எம்.ஜி.ஆரின் இலவச வேட்டி சேலையில் இருந்து துவங்கி, கலைஞரின் வண்ணத் தொலைக்காட்சி, ஜெயலலிதாவின் மிக்ஸி கிரைண்டர், ஆடுமாடுகள் என்று வாழ்க்கைத் தரத்தைப் புரட்டிப் போட்ட திட்டங்கள், பொது விநியோக முறை தமிழ்ச் சமூகத்தின் நவீன வாழ்க்கை முறையை நோக்கி எளிய உழைக்கும் மக்களை விரைந்து செலுத்தியது.

கடந்த 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் ஆட்சி அதிகாரம் நிகழ்த்திக் காட்டிய மாபெரும் சாதனை இல்லையா இது? என்று கேள்வி எழுப்பினால் திராவிட இயக்க எதிர்ப்பாளர்கள் கிளிப்பிள்ளைகளைப் போல சர்க்காரியா, ஸ்பெக்ட்ரம் என்று பார்ப்பனீயப் புரட்டுகளைத் தொங்கியபடி புழுக்களைப் போல நெளிவார்கள்.

7) குழந்தைப் பேறு மருத்துவம்:

திருமண நாளில் இருந்து தொடங்கி குழந்தைப் பேறு காலத்துக்குப் பின்னான ஓராண்டு காலம் வரை ஒவ்வொரு பெண்ணையும் கண்காணித்து ஊட்டச்சத்து, தடுப்பூசி, பேறுகால உதவித் தொகை, பெண் குழந்தைகள் காப்பீடு என்று அரசு பின்தொடரும் ஒரு கட்டமைப்பு உலகில் நானறிந்த எந்த நாட்டின் வரலாற்றிலும் தமிழகத்தைப் போல இல்லை.

கிராம நலப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இணைந்த ஒரு நேர்த்தியான குழு தொடர்ந்து கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணிகளில் தொய்வின்றி இயங்கி வருவதைக் கண்கூடாக நம்மால் பார்க்க முடியும், உடல்நலக் குறிப்புகள் துவங்கி மாதவிடாய்க் காலக் குறிப்புகள் வரை கோப்புகள் இருக்கிற சமூகம் அநேகமாக தமிழ் சமூகமாகத் தான் இருக்க முடியும்.

கிராமப் புறப் பெண்களே கூட கவனக் குறைவாக இருந்தாலும், வீடுகளுக்கே சென்று அவர்களுக்கான மருத்துவ மற்றும் ஊட்டச்சத்து தேவைகளை நிறைவேற்றுகிற அரசு நலத் திட்டங்கள் திராவிட அரசியல் இயக்கத்தின் கொடை என்பதை உலக சுகாதார அமைப்பே அங்கீகரித்துப் பாராட்டுகிறது. வீடு தேடி மருத்துவம் சென்றது வேறு யார் ஆட்சியில்?

ஆனால் திராவிட இயக்க எதிர்ப்பாளர்களோ இவற்றைக் குறித்த உண்மைகளை ஒருபோதும் பேச மறுப்பார்கள். புள்ளி விவரங்களைத் தூக்கி எறிந்தாலும் ஒப்புக் கொள்ள மறுப்பார்கள். ஏனெனில் திராவிட இயக்க அரசியல் குறித்த அவதூறுகளும், கடைந்தெடுத்த பார்ப்பனீயப் புரட்டுகளும் மட்டுமே அவர்களின் எதிர்கால அரசியலுக்கான மூலதனம்!

8) ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறியீடு:

தமிழ்நாட்டு மக்கள் தொகையில் 60 % விழுக்காடு நகர்மயமாக்கப் பட்டிருக்கிறது, கிராமப்புறங்களில் வாழும் எஞ்சிய 40% விழுக்காடு வேளாண் குடிமக்கள் விவசாயத்தையும் விட்டுவிடாமல், ஏனைய வகைகளில் பொருளீட்டும் Parellel Working Styleயையும் விட்டுவிடாமல் இயங்குவதற்கான சூழலை உருவாக்கியது திராவிட இயக்க அரசியல் அல்லாமல் வேறென்ன?

தனி நபர் வருமானம் (GDP growth) மிகுந்த மாநிலம் தமிழ்நாடு மாநிலத்தின் மொத்த முதலீட்டில் ஏறத்தாழ 52 % விழுக்காடு இன்னமும் அரசின் கைகளில் தானிருக்கிறது. உலகமே தனியார் மயமாகி வரும் சூழலில் இந்தச் சாதனையை நிகழ்த்தி இருப்பது சேர, சோழ பாண்டிய மன்னர்களும் அவர்களின் கோவில்களில் மணியாட்டும் பார்ப்பனர்களும் அல்ல!

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் தமிழ்நாடு, தொழில்துறைப் பங்காற்றலில் Largest Power House என்று போற்றப்படுகிற தமிழகத்தை இந்த நிலைக்கு உயர்த்தியது எது என்ற கேள்வியை முன்வைத்தால் ஊடகங்களில் உலா வரும் பார்ப்பனீய சங்கிகளும், அவர்களின் அல்லக்கைகளாக இயங்கும் பார்ப்பனதாசர்களும் ‘நவதுவாரங்களையும்’ மூடிக் கொண்டு கள்ள மௌனம் காப்பார்கள்.

திராவிட இயக்க அரசியலின் இந்த மகத்தான வெற்றிக்குப் பின்னே இருக்கும் சூத்திரம் என்ன? திராவிட அரசியல் நிகழ்த்திக் காட்டிய இந்தச் சாதனைகளின் சூத்திரதாரி யார் என்று ஒரு கேள்வியை முன்னிறுத்தி சமூகவியல் ஆய்வை மேற்கொண்டால் நீங்கள் அடைகிற ஒற்றைப்புள்ளி “சுயமரியாதை” என்கிற மானுடத்தின் உளவியல், சுயமரியாதை என்கிற இந்த ஒற்றைப் புள்ளியை விதைத்தது யார்?

சுயமரியாதை என்கிற வேர் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவியது எப்படி என்கிற கேள்வி முடிவுறும் இடம்தான், இந்துத்துவ வலதுசாரித் தத்துவங்களின் மூலமான பார்ப்பனீயத்தின் நச்சுத்தன்மையை அடித்தொடித்து நிர்மூலமாக்கித் தலை தூக்க விடாமல் செய்த மகத்தான மனிதர் “தந்தை பெரியார்”.

ஆகவேதான், ‘பெரியார்’ என்கிற பெயரைக் கேட்டவுடன் நேர் சங்கிகளிலிருந்து அவர்களின் அடிப்பொடிகளான சில தமிழ்த் தேசியக் கட்சிகள் வரை இருந்து இன்னமும் குலை நடுங்குகிறது.  திராவிட இயக்க அரசியல் கட்சிகளில் எல்லா அரசியல் இயக்கங்களின் வரலாற்றையும் போல் குறைகள் இருக்கலாம். களையப்பட வேண்டிய களைகள் இருக்கலாம். குறைகளே இல்லாத தூய்மையானவை திராவிட இயக்க அரசியல் கட்சிகள் என்று மெய்ப்பிக்க முனைவது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல.

காலத்தால் அழிக்க முடியாத “சுயமரியாதை” என்கிற சுடரைப் பரப்பிய அறிவியக்கம் திராவிட இயக்கம். தந்தை பெரியார் அந்த இயக்கத்தின் மூலம் என்றால், அந்த இயக்கத்துக்கு ஆட்சி அதிகாரத்தின் வழியாக உயிர் கொடுத்து ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் இருந்து சுயமரியாதையைப் பிரிக்க முடியாதபடி ஆணியடித்து, சங்கிகளுக்கு நிரந்தரமாக ஆப்புமடித்துப் போனவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர். அந்த வழியைப் பின்பற்றி “Stalin is more dangerous than Kalaignar Karunanidhi என்கிற பட்டத்தை பார்ப்பனர்களிடம் பெற்றதன் மூலமாக மு.க.ஸ்டாலின் திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கோட்பாடுகளைப் பின்பற்றி நடக்கிறார் என்பது தெள்ளத்தெளிவு.

திராவிடம் வீழ்ந்து போன அரசியல் இயக்கம் அல்ல! வீழ்த்த முடியாத இயக்கம்! திராவிடம் ஒன்றுதான் உயிரோடு இருக்கிற அரசியல் இயக்கங்களில் தமிழனை வீழ்ந்து விடாமல் காத்து நின்ற, நிற்கிற, நிற்கப் போகிற அரண்.

சில தோல்விகளும், சமரசங்களும், தனிமனிதர்கள் செய்கிற தவறுகளும் ஒரு வெற்றி பெற்ற அரசியல் சித்தாந்தத்தைக் குலைத்து விடாது. மாறாக மறுபடி மறுபடி அது தழைப்பதற்கான வாய்ப்புகள் எப்போதும் உண்டு என்பதுதான் உலக வரலாறு!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *