வாரணாசி, ஜூன் 11 அமெரிக்காவில் கடவுள் ராமன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை, மீண்டும் விசாரிக்குமாறு கீழமை நீதிமன்றத்திற்கு வாரணாசி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தனி நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார்.
ராமர்குறித்து சர்ச்சை பேச்சு
அப்போது அவர், கடவுள் ராமன் சம்பந்தப்பட்ட கதைகள் அனைத்தும் “புராணக் கதைகள்” என்று குறிப்பிட்டதாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சு, இந்து மதத்தை நம்புபவர்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி, வழக்குரைஞர் அரிசங்கர் பாண்டே என்பவர் வாரணாசி கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் (கீழமை) நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய இந்த மனுவை கீழமை நீதிமன்றம் முன்பு தள்ளுபடி செய்தது.
கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து வழக்குரைஞர் அரிசங்கர் பாண்டே, வாரணாசி எம்பி, எம்எல்ஏ நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி யஜூர்வேத் விக்ரம் சிங் நேற்று (10.6.2026) பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
வெறும் தொழில்நுட்பக் காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புகாரை நிராகரிக்க முடியாது. இந்த விவகாரத்தை கீழமை நீதிமன்றம் மறுபரிசீலனை செய்து, சட்டத்திற்குட்பட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
வழக்குரைஞர் அரிசங்கர் பாண்டேவின் விளக்கம்
“ராகுல் காந்தி வெளிநாட்டில் பேசியதால், அவர் மீது வழக்குத் தொடர ஒன்றிய அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றம் முன்பு புகாரைத் தள்ளுபடி செய்தது. ஆனால், ராகுல் காந்தி மக்களவை உறுப்பினரா இருந்தாலும், சிறப்பு வழக்குத் தொடர கட்டாயம் அனுமதி பெற வேண்டும் என்ற பிரிவின் கீழ் அவர் வரமாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தனி நீதிமன்ற நீதிபதி தெளிவுபடுத்தியுள்ளார்.” நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தனி நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, கடவுள் ராமன் குறித்து சர்ச்சையாகப் பேசிய விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
