மீரட், ஜூன் 11- உத்தரப் பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் பதிவை அடிப்படையாகக் கொண்டு மெட்டா நிறுவனம் கொடுத்த துரித எச்சரிக்கையால், தற்கொலைக்கு முயன்ற 25 வயது இளைஞரின் உயிரை காவல் துறையினர் சமயோசிதமாகக் காப்பாற்றி யுள்ளனர்.
உத்தரப் பிரதேச காவல் துறைக்கும், மெட்டா (Meta) நிறுவனத்திற்கும் இடையே தற்கொலை தொடர்பான பதிவுகளைக் கண்டறிந்து எச்சரிக்கும் ஒருங்கிணைப்புக் கட்டமைப்பு ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒரு பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மீரட் நகரின் சர்தானா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர், கடந்த ஜூன் 7ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்சிப் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் ஒரு வெள்ளை நிற திரவத்தைக் குடிப்பதும், அதற்கு கீழே ‘இனி நீ உன் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு’ என்ற வாசகம் இடம் பெற்றிருந்ததும் தெரியவந்தது.
மின்னல் வேகத்தில் செயல்பட்ட காவல் துறை
மாலை 6.53 மணிக்கு இந்த தற்கொலை முயற்சிப் பதிவைக் கண்டறிந்த மெட்டா நிறுவனம், உடனடியாக உ.பி. காவல் துறை தலைமையகத்தில் உள்ள சமூக ஊடக மய்யத்திற்கு எச்சரிக்கை அனுப்பியது.
காவல்துறை தலைமை இயக்குநரின் உத்தரவின் பேரில், அந்த இளைஞரின் கைப்பேசி எண் மற்றும் இருப்பிட விவரங்களை வைத்து மீரட் காவல் துறையினருக்குத் தகவல் கடத்தப்பட்டது.
சர்தானா காவல் துறையினர் அந்த இளைஞரின் வீட்டிற்கு விரைந்து சென்றபோது, அவர் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அருகில் சந்தேகத்திற்கிடமான திரவ பாட்டில் ஒன்றும் இருந்தது. உடனடியாகக் குடும்பத்தினரின் உதவியுடன் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தார்.
காதலில் ஏற்பட்ட முறிவினால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி இந்த தீவிர முடிவை எடுத்ததாக அந்த இளைஞர் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவருக்கும், அவரது குடும்பத் தினருக்கும் காவல் துறையினர் உரிய ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
3,000-க்கும் மேற்பட்ட
உயிர்கள் காப்பு!
உத்தரப் பிரதேச காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஜனவரி 1, 2023 முதல் மே 31, 2026 வரை, இது போன்ற மெட்டா நிறுவனத்தின் சமூக ஊடக எச்சரிக்கைகள் மூலம் மாநிலம் முழுவதும் 3,011 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
