ம.பி. பரபரப்பு: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு பா.ஜ.க. சதி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!

போபால், ஜூன் 10-  மத்தியப் பிரதேச மாநிலங்களவைத் (ராஜ்யசபா) தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மனுத் தாக்கல் செய்திருந்த வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு அதிரடியாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநில அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 230 உறுப்பினர்களைக் கொண்ட (தற்போதைய பலம் 228) மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் இருந்து 3 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

சட்டப்பேரவை பலத்தின்படி பா.ஜ.விடம் 164 சட்டமன்ற உறுப்பினர்களும், காங்கிரஸிடம் 64 சட்டமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். இதன் அடிப்படையில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 58 வாக்குகள் தேவை. இந்த எண்ணிக்கையின்படி பா.ஜ. 2 இடங்களையும் (116 வாக்குகள்), காங்கிரஸ் 1 இடத்தையும் எளிதாக வெல்லும் சூழல் இருந்தது. பா.ஜ. சார்பில் தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் மற்றும் காங்கிரஸ் சார்பில் மீனாட்சி நடராஜன் ஆகியோர் களம் கண்டனர்.

ஆனால், காங்கிரஸின் இடத்தை பறிக்க திட்டமிட்ட பா.ஜ., திடீரென 3ஆவது வேட்பாளராக மகேஷ் கேவத் என்பவரை களமிறக்கியது. 48 உபரி வாக்குகளை மட்டுமே வைத்திருந்த பா.ஜ.வுக்கு, இந்த இடத்தை வெல்ல மேலும் 10 வாக்குகள் பற்றாக்குறையாக இருந்தது.

வேட்புமனு நிராகரிப்பு ஏன்?

நேற்று (9.6.2026) நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, மீனாட்சி நடராஜனின் மனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். “தெலங்கானா நீதிமன்றத் தில் மீனாட்சி நடராஜன் மீது ஒரு குற்றவியல் வழக்கு நிலுவையில் உள்ளது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களின்படி பிரமாணப் பத்திரத்தில் இதை குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். ஆனால், இந்தத் தகவலை அவர் வேண்டுமென்றே மறைத்துள்ளார். இந்த ஆட்சேபனையின் அடிப்படையிலேயே அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்று சங்கேத் குப்தா (பா.ஜ. வேட்பாளரின் வழக்குரைஞர் கூறினார்

காங்கிரஸ் மறுப்பு:

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ள காங்கிரஸின் மபி பொறுப்பாளர் ஹரிஷ் சவுத்ரி, “மீனாட்சி நடராஜன் மீது தெலங்கானாவில் எந்த வழக்கும் இல்லை; அவரை துன்புறுத்தவே பா.ஜ. இவ்வாறு செய்கிறது. நீதிமன்றத்தில் இருந்து ஒரு ‘ஷோகாஸ்’ நோட்டீஸ் மட்டுமே வந்தது. தேர்தல் ஆணைய விதிப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும், நோட்டீஸை அல்ல. தொழில்நுட்ப ரீதியாக இந்த நிராகரிப்பு செல்லாது” என விளக்கமளித்துள்ளார்.

மனு நிராகரிக்கப்பட்டதை அடுத்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் தலைமையிலான குழுவினர் தேர்தல் அதிகாரிகளைச் சந்திக்க முயன்றனர். ஆனால், முன் அனுமதி இல்லை எனக் கூறி ம.பி. தலைமைத் தேர்தல் அதிகாரி கியானேஷ் குமார் இவர்களைச் சந்திக்க மறுத்ததால் காங்கிரஸ் கட்சியினர் தேர்தல் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். “முன்பு தேர்தல்களில் தில்லுமுல்லு செய்த பா.ஜ., இப்போது மாநிலங்களவைத் தேர்தலையே சீர்குலைத்துள்ளது” என மீனாட்சி நடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில், பா.ஜ.வின் குதிரை பேரத்திற்கு பயந்து காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பெங்களூருவுக்கு அழைத்துச் செல்ல தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. போபால் விமான நிலைய ஓடுபாதையில் விமானம் புறப்படத் தயாரான வேளையில், மீனாட்சி நடராஜனின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட செய்தி வந்ததால், அந்த விமானம் அவசரமாக ஓடுபாதையிலிருந்து திருப்பி அழைக்கப்பட்ட சம்பவமும் அரங்கேறியுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *