தென்காசி, ஜூன் 10- தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு கூட்டம் இரண்டு நாட்கள் நிகழ்வாக நேற்று (9.6.2026) தொடங்கியது. மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி, அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
இக்கூட்டத்திற்கு இடையே அகில இந்திய பொதுச்செயலாளர் பேபி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாஜகவின் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போராடுவதே ‘இண்டியா’ கூட்டணியின் அடிப்படை நோக்கமாகும். கூட்டணியை வலுப்படுத்த இதில் உள்ள ஒவ்வொரு கட்சியும் சுய பரிசோதனை செய்ய வேண்டும். காங்கிரஸ் தலைமை சில நேரங்களில் முதிர்ச்சியற்ற முறையில் நடந்து கொள்கிறது. கேரளாவில் எல்.டி.எஃப் மற்றும் பாஜக இடையே ரகசிய உடன்பாடு இருப்பதாக மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் குற்றம் சாட்டுவது முறையல்ல.
தமிழ்நாடு மக்கள் பாஜகவை தொடர்ந்து நிராகரித்து வருகின்றனர். சமீபத்தியத் தேர்தலில் அவர்களின் பலம் 5-லிருந்து 1 ஆகக் குறைந்துள்ளதால், அவர்களால் எந்த தாக்கமும் ஏற்படாது. இடைத்தேர்தல் குறித்தும், இந்தியா கூட்டணியில் திமுகவின் தொடர்ச்சி குறித்தும் மாநிலக்குழு கூட்டத்தில் விவாதித்து உரிய நேரத்தில் எங்களது முடிவு அறிவிக்கப்படும். இக்கூட்டம் இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
