கடந்த ஒரு மாத காலமாகத் தமிழ்நாட்டில் பரவலாக மின்வெட்டு பிரச்சினை பெரிய அளவில் எழுந்துள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலேயே இரவு நேரங் களில் மின்வெட்டு காரணமாக முதியவர்கள், குழந்தைகள் உள்பட அனைத்துத் தரப்பினரும் அவதிப்படுவதும், மக்கள் நடு இரவில் சாலைகளில் வந்து போராட்டத்தில் ஈடுபடுவதுமாகத் தொடர்ந்து செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. பிரச்சினை தொடர்ந்து எழுந்து வந்து ஊடகங்களிலும் கவனம் பெற்றாலும், இன்னும் அதற்குத் தீர்வு கிடைத்தபாடில்லை.
தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு ஏற்பட இப்போதைக்கு வழியில்லை. கடந்த ஆட்சிகளில் செய்யப்பட்ட முயற்சிகள் காரணமாக தன்னிறைவுச் சூழல் இருக்கிறது. அமைச்சர்களும் கூட இதை ஒப்புக் கொள்கின்றனர். தென் மாநிலங்களில் உள்ள ‘சூரிய ஆற்றல்’ மின் நிலையங்களில், கடந்த மார்ச்சில் உற்பத்தியான மின்சாரம் குறித்த விவரத்தை ஒன்றிய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில், தமிழ்நாடு, 218 கோடி யூனிட்களுடன் முதலிடத்தில் உள்ளது. பல வீடுகள் தன்னிறைவான மின் உற்பத்தியை சூரிய ஆற்றல் மூலம் 300 நாட்களுக்குக் குறையாமல் பெறுகின்றனர். காற்றாலை மின்விசிறிகள் மூலமும் மின் உற்பத்தி தமிழ்நாட்டில் சிறப் பாகவே உள்ளது. இப்போது இருப்பது நிர்வாகக் கோளாறே!
“மின்வெட்டுக்கு யாரோ சிலர் வேண்டுமென்றே பியூஸ் கேரியரைத் திருடிச் செல்வது காரணம்” என்கிறார் அமைச்சர். கண்ணுக்குத் தெரியாதவர்கள் மீது பழிபோட்டுக் கொண்டே காலத்தை ஓட்டலாம் என்று கருதக் கூடாது. ‘யாருடைய தூண்டுதலாலோ மக்கள் சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள்’ என்று அமைச்சர்கள் பேசுவதும், மக்களை மேலும் இழிவு செய்வதாகும். சென்னை போன்ற பல தரப்பட்ட மக்கள் வசிக்கும் நகரத்தில், காலை முதல் இரவு வரை கடும் உழைப்பைச் செலுத்திவிட்டு, கொளுத்தும் அனலில் பயணித்து வீடு வந்து உறங்க வருபவர்கள், அரசியல் காரணங்களுக்காக யாருடைய தூண்டுதலாலோ போராடக் கூடியவர்களா? பெரிய மாற்றமாக எதையோ எதிர்பார்த்து தங்களுக்குப் பெரு வெற்றியைத் தந்திருப்பவர்கள் சென்னை மக்கள் என்ற உணர்வு ஆளும் தரப்பில் இருப்போருக்கு வேண்டாமா? பொறுப்பான பதிலையும், உடனடியான நடவடிக்கைகளையுமே மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ‘பகலில் பியூஸ் கேரியரைப் பிடுங்கிச் சென்றதால் இரவில் மின் வெட்டு’ என்று இன்னும் பொய்ச் செய்திகளை ஊடகங்களில் பரப்பி, அதன் மூலம் மக்களைச் சமாதானப்படுத்தலாம் என்று நினைக்கக் கூடாது!
மின்வெட்டுப் பிரச்சினை இரவில் மட்டுமல்ல, எல்லா நேரங்களிலும் ஏற்படுகிறது. “மின்தடை என்பது வெறும் சொகுசு பாதிப்பு இல்லை, எங்களைப் போன்ற சிறு நிறுவனங்கள், அதனை நம்பி இருக்கும் ஊழியர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு” என்று கூறியுள்ள செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் துறையில் சிறிய நிறுவனத்தைத் தொடங்கி இன்று வெற்றிகரமாக நடத்திவரும் கென்னித்ராஜ் அன்புவின் பதிவு ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்! மின்வெட்டு என்பது குடும்பங்களை மட்டுமல்ல, தொழிலைப் பாதிக்கும் பிரச்சினை. வேலை நடக்காத நேரங்களில் ஊழியர்களுக்குச் ஊதியம் வழங்க அந்நிறுவனங்கள் என்ன பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை அமைச்சர்கள், ஆளும் தரப்பினர் எண்ணிப் பார்க்க வேண்டும். அது தொடர் பிரச்சினைகளை வெவ்வேறு வடிவில் கொண்டுவந்துவிடும்
மின்வெட்டுப் பிரச்சினையில் உரிய கவனம் செலுத்துவதும், அனுபவம் கொண்டவர்களின் ஆலோசனைகளைப் பெற்றுச் செயல்படுவதும் அவசியம். வேண்டிய இடங்களில் பணியாளர்கள், உதவியாளர்களை நிரப்பி இப் பிரச்சினையைச் சரி செய்வது கடினமான ஒன்றல்ல. மின்சாரத் துறையில் கடந்த ஆட்சி மீது குற்றம் சாட்டுவதிலேயே காலம் கழிந்துகொண்டிருக்கிறது. அது குறித்துதான் அதிகம் செய்திகள் அரசுத் தரப்பிலிருந்து வெளியிடப்படுகின்றன. எந்தத் தவறு எப்போது நடந்திருந்தாலும், அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சரியானதே! ஆனால், அதுவே எல்லாவற்றுக்குமான சாக்குப் போக்காக ஆகிவிடக் கூடாது! முந்தைய ஒப்பந்தங்களையெல்லாம் ரத்து செய்து, புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள முனைவது என்ன நோக்கத்திற்காக என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள்.
இந்நிலையில், 20 ஆயிரம் கோடி ரூபாயில் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்படவிருந்த ஸ்மார்ட் மீட்டர் திட்டம் ரத்து செய்யப்படவிருப்பதாக ஒரு செய்தி ஊடகங்களில் வருகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல. கடந்த ஆட்சிக்கு முன்னதாக, மாதந்தோறும் மின் கட்டணத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென்று திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. நிர்வாகக் கோளாறுகளைச் சரி செய்து, மின்வெட்டுப் பிரச்சினைகளைச் சரி செய்து, மின் கணக்கெடுப்புக்கு மாதம் தோறும் ஆட்களை அனுப்புவது மேலும் சிக்கலான, செலவு மிக்க நடைமுறையாக அமையும் என்பதால், அதனைத் தவிர்க்கவே ஸ்மார்ட் மீட்டர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அது தான் மக்களின் மின் கட்டணத்தைக் குறைக்கும் வாய்ப்பாகும். நெடுங்கால நோக்கில் கொண்டுவரப்பட்ட அத் திட்டத்தை மின்சார வாரியத்தின் கடனைக் காரணம் காட்டி, ஒத்திவைப்பது மக்களின் செலவை மேலும் அதிகப்படுத்தும். ஆட்சிகள் மாறலாம்; அரசு என்பது தொடர்ந்து வருவது. ஒவ்வொருவரும் இப்படி முந்தைய அரசுகள் கொண்டுவந்த திட்டங்களை, ஒப்பந்தங்களை ரத்து செய்தால் அதன் விளைவுகளை மக்கள் நீண்டகாலம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதற்கு மக்களும் பதில் அளிக்காமல் இருக்க மாட்டார்கள். ஆட்சியின் பியூஸ் கேரியர் மக்கள் கையில் இருக்கிறது!
