மனித குலத்தின் மிகத் தொடக்கக் காலத்தில், கல்வி என்பது மொழிகளைக் கற்பதாக அமைந்திருந்தது. அதன் பிறகு, வேட்டை, போர்க்கலை, கணிதம், அளவீடுகள், மருத்துவம், வானியல், தத்துவம், சமூக அறிவியல், இலக்கியம், அறிவியலின் பல்வேறு துறைகள், தொழில்நுட்பம், உளவியல் என்று வளர்ந்து, இன்று செயற்கை நுண்ணறிவு, தரவு மேலாண்மை என்று கல்வித் துறையும் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.
ஒருவர் தன் தாய்மொழியையும், தொடர்புக்கு மற்றொரு மொழியையும் கற்பது போதுமானது என்ற நிலை உலகெங்கும் உள்ளது. மொழியியலில் அதிகம் கற்க வேண்டும் என்று விரும்புவோரைத் தவிர, மற்றவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்க வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை. அதிலும் இன்றைய தகவல் தொழில்நுட்ப உலகில், கருத்துப் பகிர்வுக்காக என்று ஒருவர் மொழியைக் கற்க வேண்டிய அவசியம் இல்லாமல், பேசும்போதும், எழுதும் போதும் நிகழ்நேரத்திலேயே உதவ மொழிபெயர்ப்புத் தொழில்நுட்பம் மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. ஒரு மொழியை ரசிப்பதற்காகவும், அன்றாடம் பயன்படுத்துவதற்காகவும் அல்லாமல், வேறு எதற்கும் கற்க வேண்டிய அவசியம் இல்லை என்னும் அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஆனால், இன்னமும் இந்தியாவில் பள்ளிக் கல்வியில் எத்தனை மொழிகளைக் கற்பது என்பதும், என்னென்ன மொழிகளைக் கற்பது என்பதும் பிரச்சினையாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் தனித்தனிக் கல்வி முறைகள் உருவாக்கப்பட்டிருந்தாலும், ஒன்றிய அளவில் மாநிலம் கடந்து பணியாற்றுவோருக்காகக் கொண்டுவரப்பட்ட
சி.பி.எஸ்.இ எனப்படும் மத்தியப் பள்ளிக் கல்வித் துறைக்குக் கொடுக்கப்படும் அதீதமான விளம்பரமும், முக்கியத்துவமும் பல மாநிலப் பள்ளிக் கல்வித் துறைகளை மீறி, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தை நோக்கி, தனியார் பள்ளிகளை ஓடச் செய்கின்றன. இதனால், மாநில அரசுப் பள்ளிகள் தவிர, பிற தனியார் நிறுவனங்கள் சி.பி.எஸ்.இ பாடத் திட்டங்களை ஏற்க முன்வருகின்றன. இதன் மூலம் மறைமுகமாக பள்ளிக் கல்வித் துறை ஒன்றிய அரசின் கைகளுக்குச் செல்கிறது என்பது ஒரு புறம் என்றால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மொழித் திணிப்பிலும், பண்பாட்டுத் திணிப்பிலும் ஒன்றிய அரசு ஈடுபட்டு வருவது கண்கூடு. அதற்கு வசதியாகவே தேசியக் கல்விக் கொள்கை என்னும் நச்சுத் திட்டம் திணிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மொழிப் பாடங்கள் தொடர்பாக சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ள அறிவிப்புகள் அதன் உள் நோக்கத்தை வெளிப்படையாக உணர்த்துகின்றன. இதுவரை இரண்டு மொழிகளைப் படித்து வந்த மாணவர்கள், இனி 9-ஆம் வகுப்பில் இருந்து மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும் என்றும், அதில் இரண்டு, இந்திய மொழிகளாக இருக்க வேண்டுமென்றும் ஆணையிட்டது. திடீரென 14 வயதில் புதிய மொழியைக் கற்க வேண்டும் என்பது அப்பட்டமான திணிப்பு மட்டுமல்ல, அறிவுப்பூர்வமான நடவடிக்கையும் ஆகாது. பள்ளி இறுதித் தேர்வுகளின் மதிப்பெண் கணக்கிலும் இவை வராவிட்டாலும், பள்ளி அளவில் மதிப்பிடப்படும் என்று அறிவித்தார்கள். கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இந்த ஆண்டு மட்டும் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்கள்.
பள்ளிக் கல்வியில் மூன்றாம் மொழி என்பது அவசியமில்லாதது என்பதே கல்வியியலாளர்களின் கருத்தாகும். இது மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை பாதிக்கும் என்றும், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.
அடுத்ததாக, மூன்று மொழி என்பதிலும் இரண்டு இந்திய மொழிகள் என்று கட்டாயப்படுத்துகிறது சி.பி.எஸ்.இ! மூன்றில் ஒன்று தான் அயல் மொழியாக இருக்கலாம். இந்தியாவின் இரண்டு அலுவல் மொழிகளுள் ஒன்றான ஆங்கிலம் தான் உலகத் தொடர்புக்கான மொழி என்ற வகையில், அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், அதை ‘அயல்மொழி’ என்று கணக்கிடுகிறது ஒன்றிய அரசு. இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுள்ள இரண்டு அலுவல் மொழிகளுள் ஒன்றான ஆங்கிலம் எப்படி அயல்மொழியாகும்? அதைத் தவிர்க்க முடியுமா?
சரி, இரண்டு இந்திய மொழிகள் என்பதில் ஒன்றாக அவரவர் தாய்மொழி கட்டாயப்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்பதே பதில்! தங்களில் எதிர்கால வளர்ச்சிக்காக, மேற்படிப்புக்குப் பயன்படலாம் என்ற நோக்கில் பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ் என்று பயில்வோர் இனி அதைப் படிக்க முடியாது. வடநாட்டில் ஹிந்தி ஒரு மொழிப் பாடமாக நிச்சயம் அமர்ந்து கொள்ளும். இரண்டாவது இந்திய மொழி என்ற இடத்தை எது பிடிக்கும்? சந்தேகமே இல்லாமல், அது சமஸ்கிருதம்தான்! அதைத்தான் ஆர்.எஸ்.எஸ் விரும்புகிறது. அதன் விருப்பத்தைத் தனியார் பள்ளி முதலாளிகளும் தலைமேல் ஏற்றுச் செயல்படுத்த முன்வந்துள்ளார்கள். மாணவர்கள் விருப்பத்திற்கு இரண்டாம் மொழியைத் தேர்ந்தெடுக்கலாம் என்பது ஏட்டளவில் சொல்லப்பட்டாலும், அதற்கு ஆசிரியர்கள் உண்டா? அத்தனை ஆசிரியர்களை பணிக்கு அமர்த்த முடியுமா?
இந்தச் சூழலைப் பயன்படுத்தி, ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பு, ஹிந்தி – சமஸ்கிருத மொழித் திணிப்பின் வாயிலாக ஒன்றிய அரசால் முன்னெடுக்கப்படுகிறது. ஹிந்துத்துவாவை ஒழிக்காமல் இத்தகைய திணிப்புகளைத் தடுக்க முடியாது.
ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் இந்த மூர்க்கத்தனமான முயற்சிகளைத் தடுப்பது, இந்தியாவின் பன்மைத்துவத்தையும், மொழி உரிமையையும் காப்பதற்கு அவசியமாகும்.
