சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கை அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும்! பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற குழு கடிதம்!

2 Min Read

புதுடில்லி, ஜூன் 9- சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்புக் கல்வி ஆண்டில் இருந்து மும்மொழி கொள்கை அமல்படுத்துவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் கடிதம் எழுதி உள்ளார்.

பெற்றோர் மனு

கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவரும், மூத்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினருமான திக்விஜய் சிங், பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நடப்பு கல்வி ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. உத்தரவிட்டுள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர் என்னிடம் மனுக்கள் அளித்துள்ளனர். அவற்றை இத்துடன் அனுப்பி வைத்துள்ளேன்.

அந்த மனுக்களை படித்து பார்த்தபோது, அவை நியாயமானவை, உடனடியாக கவனிக்க வேண்டியவை என்று உணர்ந்து கொண்டேன்.

ஆட்சிமன்றக்குழு ஒப்புதல்

போதிய ஆசிரியர்களோ, பாடப் புத்தகங்களோ, கால அவகாசமோ இல்லாமல், கல்வி ஆண்டின் நடுவிலேயே இக்கொள்கையை திடீரென அமல்படுத்துவது, பலத்த குழப்பத்தை ஏற்படுத்தும்.

என்.சி.இ.ஆர்.டி. மொழி பாடப் புத்தகங்களை வெளியிடும் வரை, தற்போதைய மொழிப் பாடங்களையே பின்பற்ற வேண்டும் என்று பாடத் திட்ட குழு பரிந்துரைத்துள்ளது. அந்த பரிந்துரைக்கு கடந்த டிசம்பர் மாதம், சி.பி.எஸ்.இ.யின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இருப்பினும், தனது ஆட்சி மன்றக்குழுவின் முடிவை மீறி, ஜூலை 1ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. என்.சி.இ.ஆர்.டி. இன்னும் மொழி பாடப் புத்தகங்களை வெளியிடவில்லை. எனவே, 6ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களை பயன்படுத்துமாறு சி.பி.எஸ்.இ. பரிந்துரைத் துள்ளது.

தென்மாநிலங்களுக்கு பாதிப்பு

இந்த நிலைமை, தென்மாநிலங்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஏற்புடையதல்ல. தென் மாநிலங்களில் ஹிந்தி பேசுவது இல்லை. வடகிழக்கு மக்களின் பழங்குடியின மொழிகள், சி.பி.எஸ்.இ. அங்கீகரித்த மொழிகள் பட்டியலில் இல்லை. சமஸ்கிருதத்தை பல பள்ளிகள் மூன்றாவது மொழியாக தேர்வு செய்துள்ளன. ஆனால், அதற்கு தகுதியான ஆசிரியர்களோ, பாடப் புத்தகங்களோ இல்லை.

எனவே, இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, சி.பி.எஸ்.இ. 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டிலேயே மும்மொழி கொள்கையை அமல்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும். அதற்கு தாங்கள் அவசரமாக, கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *