நாடெங்கும் பொதுமக்கள் அவதி!

3 Min Read

ஆர்.எஸ்.எஸ். மோடி ஆட்சியில் வானுயர பறக்கும் விலை!
கடந்த 3 மாதத்திற்குள் ரூ.89 அதிகரிப்பு!
வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.29 உயர்வு

சேலம், ஜூன் 8  நாடு முழுவதும் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ.29 அதிகரித்துள்ளது. சென்னையில் ரூ.957.50, சேலத்தில் ரூ.975.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஊழியருக்கு ரூ.50 வரை கொடுக்க வேண்டும் என்ப தால், எரிவாயு உருளை விலை ஆயிரத்தை தாண்டியுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

முக்கிய நகரங்களில் எரிவாயு உருளை விலை
வீட்டு எரிவாயு உருளை வர்த்தக எரிவாயு உருளை
டில்லி  ரூ.942 ரூ.3,113.50
மும்பை ரூ.941.50 ரூ.3,067.50
கொல்கத்தா ரூ.968 ரூ.3,255.50
சென்னை ரூ.957.50 ரூ.3,283

பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் எரிவாயு உருளைகளின் விலையை நிர்ணயித்து வருகின்றன.

இதில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு, வணிக எரிவாயு உருளை களின் விலை மாதத்தின் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. ஈரான்- அமெரிக்கா இடையிலான போர் காரணமாக, கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு உருளை தட்டுப்பாடு நிலவி வருகிறது. மேலும், போர் தொடங்கியது முதல் எரிவாயு உருளை விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி, நடப்பு (ஜூன்) மாதத்தின் முதல் தேதியில், வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட எரிவாயு உருளை விலை ரூ.46 வரை அதிகரிக்கப்பட்டது.

சென்னையில் ரூ.3,283, டில்லியில் ரூ.3,113.50, கொல்கத்தாவில் ரூ.3,255.50, மும்பையில் ரூ.3,067, பெங்களூருவில் ரூ.3,198 ஆக அதிகரித்தது. அதே சமயம், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக எரிவாயு உருளையைப் பொறுத்தவரை கடந்த மார்ச் 7ஆம் தேதி ரூ.60 உயர்த்தப்பட்டது. தொடர்ந்து கடந்த மே மாதம் விலை உயர்த்தப்படாமல் நிலையாக இருந்தது. இந்நிலையில், வீட்டு உபயோக எரி வாயு உருளை விலை நேற்று (7.6.2026) ரூ.29 அதிகரித்தது.

அதன்படி டில்லியில் 14.2 கிலோ எரிவாயு உருளை விலை ரூ.913இல் இருந்து ரூ.942 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ரூ.928.50இல் இருந்து ரூ.957.50ஆகவும், சேலத்தில் 975.50 ஆகவும் உயர்ந்துள்ளது. டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.50 வரை கொடுக்க வேண்டி உள்ளது. இதனால் எரிவாயு உருளை விலை ஆயிரத்தை தாண்டி இருப்பது இல்லத்தரசிகளை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 3 மாதத்தில் வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ.89 வரை உயர்ந்துள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாத நிலையில், கச்சா எண்ணெய் விலை மேலும் உயர வாய்ப்பு இருக்கிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை விலை இன்னும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் கேள்வி

சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தாதது ஏன்? என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பணவீக்கம் குறித்துக் கூக்குரலிட்ட பா.ஜ.க. தலைவர்கள், இப்போது ஏன் சிலிண்டர்களுடன் தெருக்களில் இறங்கிப் போராடவில்லை ஏன் என கேள்வி எழுப்பியது.

கார்கேயின்
‘எக்ஸ்’ தள பதிவு!

இந்த நிலையில்,காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

உயர்ந்துவரும் சமையல் எரிவாயு உருளை விலை சாமானிய மக்களின் சமையலறைகளை பதம் பார்க்கும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் வீட்டு உபயோக எரிவாயு உருளைகளின் விலையை ஒன்றிய பா.ஜ.க. அரசு ரூ.89 உயர்த்தியுள்ளது.

மேற்கு ஆசிய மோதல் விவகாரத் துக்குப் பதிலளிக்கும் விதமாக, 41 நாடுகளில் எரிபொருள் ஆதாரங்களைப் பன்முகப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பெரிய வாக்குறுதியை அளித்தார். அதனால் என்ன ஆனது? இன்னும் கிராமப்புறங்களில் எல்பிஜி எரிவாயு பற்றாக்குறை நீடிக்கி றது? உஜ்வாலா திட்டத்தின் கீழ், 2025-2026 ஆம் ஆண்டில் 5.56 கோடி குடும்பங்களுக்கு ஒருமுறை கூட எரிவாயு உருளை நிரப்பப்படவில்லை. இவர்களில், 3.30 கோடி குடும்பங்கள் ஒரு எரிவாயு உருளை நிரப்பலைத் தேர்ந்தெடுக்கவில்லை.

கடந்த 12 ஆண்டுகளில்
மோடி அரசால் ரூ.530 உயர்வு!

இந்த நிலைமை மேற்கு ஆசிய நெருக்கடிக்கு முன்பே இருந்தது. இது மோடி அரசின் லாப வேட்டையினால் ஏற்பட்டது. அய்மு கூட்டணி ஆட்சியில், மோடியும், பா.ஜ.க. தலைவர்களும் பணவீக்கம் ஏற்பட்டதாகக் கூக்குரலிட்டு வந்தனர். கடந்த 12 ஆண்டுகளில் மோடி அரசு எரிவாயு உருளை விலையை ரூ.530 உயர்த்தியுள்ளது. தற்போது பா.ஜ.க. தலைவர்கள் சமையல் எரிவாயு உருளையுடன் ஏன் போராட்டத்தில் இறங்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *