
டாக்டர் மா.சேகர் தலைமை குடிமுறை குழந்தைகள் நல மருத்துவர் மற்றும் மருத்துவ அதிகாரி, முன்னாள் ராணுவத்தினர் மருத்துவமனை (ஓய்வு), திருநெல்வேலி
குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில் கடினமான மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடிய ஒரு பாதிப்பு. தன்னை அறியாமலேயே இரவு நேரங்களில் தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்தலாகும். இது அய்ந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளில் வெகு சிலருக்கு ஏற்படும் பிரச்சினை ஆகும். இதனை ஆங்கிலத்தில் நாக்டர்னல் என்யூரசிஸ் (Nocturnal Enuresis) என்பர்.
இது இரண்டு வகைப்படும். அவை ‘பிரைமரி’ மற்றும் ‘செகன்டரி என்யூரசிஸ்’ என்பன. ‘பிரைமரி என்யூரசிஸ்’ குழந்தைப் பருவத்திலிருந்தே தொடர்வதாகும். ‘செகன்டரி என்யூரிசிஸ்’ என்பது குறிப்பிட்ட காலம் வரை (குறைந்தது 6 மாதம் வரை) சிறுநீர் கழிப்பதை கட்டுக்குள் வைத்திருந்த குழந்தைகள் பின்னர் இரவு நேரங்களில் தூக்கத்தில் தன்னை அறியாமல் சிறுநீர் கழிப்பதாகும். இவர்களுக்கு பகல் பொழுதில் சிறுநீர் கழிப்பதிலோ, அடக்கிக் கொள்வதிலோ எந்தவித சிரமமும் இருக்காது.
காரணத்தை கண்டறிவது எப்படி?
இக்குழந்தைகளுடன் நட்புடன் உரையாடி விவரங்களை விசாரித்தால் அவர்களுக்குத் தீவிர மலச்சிக்கலோ அல்லது மன அழுத்தம் இருப்பதையோ தெரிந்து கொள்ளலாம். மேலும், சில சிறப்பான மருத்துவ பரிசோதனைகள் (ஸ்கேன், சிறுநீர் பரிசோதனை) மூலம் வேறு காரணங்கள் இருந்தாலும் அறிந்து கொள்ளலாம். தாய் அல்லது தந்தைக்கு சிறுவயதில் இப்பிரச்சினை இருந்திருந்தாலும் அது குழந்தைகளுக்கு வரக்கூடும்.
காரணங்கள்
இரவு நேரத்தில் அதிகமாக சிறுநீர் உருவாகும். இது ஏ.டி.எச். (ADH) என்ற ஹார்மோன் குறைவாகச் சுரப்பதால் இரவு நேரங்களில் சிறுநீர் அதிகமாக வெளியேறும்.
மத்திய நரம்பு மண்டலத்தின் விழிப்புணர்வு தாமதம். சிறுநீர்ப் பை நிரம்பியவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உடலின் சமிக்ஞைக்கு மத்திய நரம்பு மண்டலம் தாமதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிலை.
இரவில் உருவாகும் அதிக அளவிலான சிறுநீரை சிறுநீர்ப் பையால் தாங்கி சேமித்து வைத்திருக்க முடியாத நிலை.
மரபணு ரீதியான காரணங்கள் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் குழந்தைகளுக்கும் இந்த நிலை வரலாம். இது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலை அல்ல என்றாலும், இது குழந்தைகளுக்கு மன உளைச்சல், தன்னம்பிக்கைக் குறைவு, வெட்கம் போன்ற சங்கடமான உணர்வுகளை ஏற்படுத்தக் கூடும்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஒரு உடல் ரீதியான பிரச்சினையாக இருந்தாலும், அதை அனுபவிக்கும் எவருக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும். சங்கடமாகவோ, வெட்கமாகவோ உணரலாம்.
மற்றவர்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஈரமான ஆடைகளையோ, படுக்கை விரிப்புகளையோ மறைக்க முயற்சி செய்யலாம். இரவில் நண்பர்களுடன் தங்குவதைக் கூட தவிர்க்கலாம்.
சமாளிக்கும் வழிமுறைகள் மற்றும் தீர்வுகள்
பெற்றோருக்கு இந்தப் பிரச்சினை குறித்து சரியான விளக்கமும், நம்பிக்கையூட்டலும் வழங்க வேண்டும்.

படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்காக குழந்தையை திட்டவோ, தண்டிக்கவோ கூடாது அல்லது மற்றவர்களிடம் குழந்தையைப் பற்றி விவாதிக்கக் கூடாது.
பள்ளி செல்லும் குழந்தைகள் வெளியில் தங்குவதையோ அல்லது நன்றாக குணம் கிடைக்கும் வரை கேம்ப் செல்வதையோ ஊக்குவிக்க வேண்டாம். குழந்தைகளின் பழக்க வழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாம்.
தினசரி அருந்தும் திரவ உணவுகளில் (நீர் ஆகாரம்: தண்ணீர், பால், பழச்சாறு போன்றவை), 80 சதவீத அளவை மாலை 5 மணிக்குள் குடிக்கச் செய்ய வேண்டும்.
குழந்தைகள் தூங்கச் செல்வதற்கு முன் கட்டாயமாக கழிவறைக்கு அழைத்துச் சென்று சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
மலச்சிக்கலைத் தவிர்க்க நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்ளச் செய்ய வேண்டும்.
படுக்கை நனைத்தல் எச்சரிக்கைக் கருவி (Enuresis Alarm – என்யூரசிஸ் அலாரம்). இக்கருவியின் இரு பாகங்கள் குழந்தையின் உள்ளாடை மற்றும் விரிப்பிலோ அல்லது கழுத்துப் பிடரியிலோ பொருத்தப்படும். பின் சிறுநீரின் முதல் துளிகள் பட்டவுடன் அந்த உணர்வை உணர்ந்து எச்சரிக்கை ஒலி அல்லது அதிர்வுகள் எழுப்பி குழந்தையை விழித்தெழச் செய்து கழிவறைக்குச் செல்ல உதவுகிறது.
இக்கருவியை மருத்துவர்கள் பரிந்துரைத்த பின் காலை வேளைகளில் பொருத்தி பயிற்சியளித்து பின் இரவு நேரங்களில் உபயோகிக்க அறிவுறுத்துங்கள்.
மேற்கண்ட முறைகளுக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்றால், தங்கள் குடும்ப மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவரின் பரிந்துரைக்கேற்ப உங்கள் குழந்தைக்கு நீரிழிவு அல்லது இரவு நேர வலிப்பு நோய் இருக்கிறதா? என்று பரிசோதனை செய்து DESMOPRESSIN என்ற மூக்கில் தெளிக்கும் மருந்து அல்லது மருந்தோ பெற்றுப் பயன் பெறலாம்.
பொதுவாக இந்த மருத்துவப் பிரச்சினை உள்ள பெரும்பாலானவர்கள் 3 மாதங்களில் குணமடைவார்கள். ஒன்று முதல் 2 சதவிகிதத்தினருக்கு 15 வயது வரை இந்தப் பிரச்சினை தொடரலாம்.
