நுரையீரல் புற்றுநோய் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு மருத்துவர்களின் அறிவுரைகள்:
நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக இருந்தாலும், புகைப்பிடிக்காதவர்கள் அல்லது முன்பு புகைப்பிடித்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். மற்றவர்கள் புகைப்பிடிக்கும்போது வெளிப்படும் புகையைச் சுவாசித்தாலும், ரேடான் (radon) வாயு, ஆஸ்பெஸ்டாஸ் சிலிகான் கனிமம், காற்று மாசுபாடு, நச்சுத்தன்மை வாய்ந்த பணிச்சூழல் ஆகியவற்றாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம். மரபணு காரணிகள், காசநோய், வைரஸ் தொற்றுகள் போன்ற முந்தைய நுரையீரல் பாதிப்புகளின் விளைவுகளாலும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படலாம்.
மருத்துவத் துறையின் முன்னேற்றங்களால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டாலும் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆரம்ப நிலையிலேயே நுரையீரல் புற்றுநோய் கண்டறியப்பட்டால், அறுவைச் சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை (radiation) அல்லது கீமோதெரபி (chemotherapy) மூலம் குணப்படுத்த முடியும்.
மேலும், இலக்கு சார்ந்த சிகிச்சைகள் (targeted therapies) மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலச் சிகிச்சை (immunotherapy) போன்ற நவீன மருத்துவ சிகிச்சைகள், புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்தாலும் ஆயுள் காலத்தை நீட்டிக்கின்றன.
புகைப்பிடிப்பதை நிறுத்துவதால் பயனில்லை என்பது தவறான தகவல். நீங்கள் புகைப்பிடிப்பதை நிறுத்திய உடனேயே உங்களுடைய நுரையீரல் குணமடையத் தொடங்குகிறது. புகைப்பிடிப்பதை நிறுத்திய சில ஆண்டுகளிலேயே நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதாவது தொடர்ந்து புகைப்பிடிப்பதால் ஏற்படும் அபாயத்துடன் ஒப்பிடுகையில் புகைப்பிடிப்பதை நிறுத்துவது புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கும். நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து பாதியாகக் குறைகிறது. தொடர்ந்து காலம் செல்ல இந்த அபாயம் தொடர்ந்து குறைந்துகொண்டே செல்கிறது.
வயது அதிகரிக்கும்போது ஆபத்து அதிகரிப்பதும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு அதிகம் கண்டறியப்படுவதும் உண்மைதான். எனினும் நுரையீரல் புற்றுநோய் எந்த வயதினரையும் பாதிக்கலாம். குறிப்பாக மரபணு மாற்றங்களால் ஏற்படும் சில வகையான நுரையீரல் புற்றுநோய்கள், இளம் வயதினருக்கும், புகைப் பிடிக்காதவர்களுக்கும்கூட கண்டறியப்படுகின்றன. அதனால் புகைப்பிடித்தவர்கள், புகைப்பிடிக்காதவர்கள் மட்டுமின்றி எந்த வயதினரும் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
மாசு அதிகமுள்ள நகரத்தில் வாழ்வது, தினமும் ஒரு பாக்கெட் சிகரெட் புகைப்பதற்குச் சமமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. காற்று மாசு அதிகமுள்ள பகுதிகளில் குறிப்பாக நகரங்களில் வாழ்வது ஆபத்தானதுதான். ஆனால் புகைப்பிடித்தலுடன் ஒப்பிடும்போது காற்று மாசால் ஏற்படும் பாதிப்பு குறைவுதான். அறிகுறிகள் தெரியும்வரை நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிய முடியாது, அறிகுறிகளுக்குப் பிறகு புற்றுநோய் மோசமடைகிறது. குறைந்த அளவு கதிர்வீச்சு கொண்ட சிடி ஸ்கேன் மூலம் ஆண்டுக்கு ஒருமுறை பரிசோதனைகள் செய்ய வேண்டும். அதன் மூலமாகவே நோயின் பாதிப்பைக் கண்டறிய முடியும். அதாவது அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னதாகவே நுரையீரல் புற்றுநோயின் பாதிப்புகள் தெரியும்.
நீண்ட காலமாக புகைப்பிடிக்கும் 50 முதல் 80 வயதுக்குள்பட்டவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஆபத்து அதிகம் உள்ளதால் அவர்கள் அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னதாக ஆரம்பக் கட்டத்திலேயே நுரையீரல் புற்றுநோயைக் கண்டறிந்தால் சிகிச்சையின் மூலமாக குணப்படுத்த முடியும்.
