சென்னை, ஜூன் 6– சென்னையில் பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், நகரின் குறுகிய சாலைகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுடன் இணைக்கும் வகையில் சிறிய ரக மின்சாரப் பேருந்துகளை (மினி இ-பஸ்) விரைவில் அறிமுகப்படுத்த மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மாநகரப் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் கூறியதாவது:
இந்த சிறிய ரக மின்சார பேருந்துகள் ஒரு முறை முழுமையாக மின்னேற்றம் செய்தால் சுமார் 180 முதல் 250 கி.மீ. வரை இயக்கக்கூடிய திறன் கொண்டதாக இருக்கும். மேலும், அதிவேக மின்னூட்ட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதால் குறுகிய நேரத்திலேயே பேருந்தை மீண்டும் இயக்கத்துக்கு கொண்டுவர முடியும்.
தமிழ்நாடு அரசின் மின் வாகனக் கொள்கையின் படி, 2030-க்குள் போக்குவரத்து சேவையில் மின்சார வாகனங்களின் பங்கை அதிகரிக்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் செயல்படும். சிறிய ரக மின் பேருந்துகளுக்கான வழித்தடங்கள், சேவை நேரம் மற்றும் இயக்கத் தொடக்க தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றனர்.
