கோவை, ஜூன் 4 கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய திருப்பமாக, சாட்சிகள் குற்றவாளியை அடையாள அணிவகுப்பில் உறுதி செய்துள்ளனர். மேலும், கைதான இருவரையும் 3 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க போக்சோ நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
10 வயது சிறுமி கொலை
கடந்த 21-ஆம் தேதி சூலூர் பள்ளபாளையம் பகுதியில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமி திடீரென காணாமல் போனார். இதுகுறித்து கருமத்தம்பட்டி காவல்துறையினர் 5 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தபோது, அண்டை வீட்டைச் சேர்ந்த கார்த்தி (33) என்பவர் சிறுமியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து ஒட்டர்பாளையம் கண்ணம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த கார்த்தியை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில், சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் கண்ணம்பாளையம் குளம் அருகிலுள்ள தென்னைத் தோட்டத்தில் கொலை செய்த தாகவும் அவர் ஒப்புக் கொண்டார். இக்குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மோகன் (30) என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அடையாள அணிவகுப்பு
இவ்வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், சிறுமியை கார்த்தி கடத்திச் சென்றதை நேரில் பார்த்த இருவர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர். இதன்பேரில் கோவை மத்திய சிறையில் நீதிபதி முன்னிலையில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. அப்போது சாட்சிகள் இருவரும் குற்றவாளி கார்த்தியைச் சரியாக அடையாளம் காட்டினர். இந்த அடையாள அணிவகுப்பு காணொலியாக பதிவு செய்யப் பட்டு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதற்கிடையில், குற்றவாளி களான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகியோரிடம் கூடுதல் விசாரணை நடத்த 5 நாட்கள் காவலில் எடுக்கக்கோரி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று (3.6.2026) இந்த மனுவை விசாரித்த போக்சோ நீதிமன்ற நீதிபதி, இருவரையும் 3 நாட்கள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்புடன் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
