சென்னை, மே 6- தமிழ்நாட்டில்தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 இடங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதற்கிடையே சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது கத்திரி வெயில் தொடங்கியுள்ளது. இதையடுத்து, பெரும்பாலான இடங்களில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. அதனால் கரூர், ஈரோடு, வேலூர் பகுதிகளில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. பிற இடங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், வளி மண்டலத்தில் சுமார் 1.5 கிமீ உயரத்தில் தெற்கு மத்திய பிரதேசத்தின் மய்யப் பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரையில் வதர்பா, மரத்வாடா, உள் கருநாடகா மற்றும் தமிழ்நாடு வழியாகவும், தமிழ்நாடு வழியாகவும் ஒரு வளி மண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலை கொண்டுள்ளது.
அதனால் திண்டுக்கல், கரூர், திருச்சி, நாமக்கல், ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக இன்றும், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் பலத்த காற்றும் கூடிய கனமழை பெய்யும். இதேநிலை 10ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை இயல்பைவிட 2-3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்படும். சென்னையில் 102 டிகிரி வெயில் நிலவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
கோடை விடுமுறை எதிரொலி
தமிழ்நாடு முழுவதும் 1,700-க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
சென்னை, மே 6- தமிழ்நாட்டில் கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காகச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
மே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் சென்னையின் முக்கியப் பேருந்து முனையங்களில் இருந்து இயக்கப்பட உள்ள பேருந்துகளின் விவரம் பின்வருமாறு:
கிளாம்பாக்கம் (KCBT): மே 8ஆம் தேதி 685 பேருந்துகளும், மே 9ஆம் தேதி 735 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.
கோயம்பேடு (CMBT): மே 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மொத்தம் 120 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மாதவரம்: மே 8, 9 ஆகிய தேதிகளில் 25 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
பிற நகரங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள்:
சென்னை மட்டுமின்றி, பிற முக்கிய நகரங்களான பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
வார இறுதி நாட்களில் சொந்த ஊர் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், பயணிகள் நெரிசலைத் தவிர்க்கத் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, இணையம் மூலம் முன்பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
