உ.பி. தலைநகர் லக்னோவில் எதிரொலிக்கும் தந்தை பெரியாரின் சிந்தனைகள்!

6 Min Read

கட்டுரை

த்தரப்பிரதேசம் தலைநகர் லக்னோவில் மே
31-ஆம் தேதி மாலை, அர்ஜக் சங்கத்தின் (மனித நேய சங்கம்) 59-ஆவது நிறுவன நாள் வெற்றிகரமாக நடைபெற்றது.

இவ்விழாவிற்கு, திராவிடர் கழகத்தின் சார்பில் பிரதிநிதியை அனுப்ப அர்ஜக் சங்கத்தின் நிர்வாகிகள் வேண்டுகோள் விடுத்த நிலையில், திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, கழகத்தின் வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

2026 மே 31 அன்று நடைபெற்ற  சங்கத்தின் 59ஆவது நிறுவன நாள் விழா, சமூகநீதி, பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் சமத்துவத்தை முன்னிறுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமைந்தது.

“இந்தியப் பண்பாட்டின் சுமைதாங்கி – அர்ஜக் சங்கம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வு, கருத்தியல் ரீதியிலும் பண்பாட்டு ரீதியிலும் மிகுந்த வெற்றியைப் பெற்று, மாமனிதர் (மகாமனா) இராம்ஸ்வரூப் வர்மா அவர்களின் சிந்தனைகளின் இன்றைய தேவையையும் பொருத்தத்தையும் மீண்டும் வலியுறுத்தியது.

இந்நிகழ்விற்கு அர்ஜக் சங்கத்தின் தேசியத் தலைவர்  சிவ்குமார் பாரதி   தலைமை தாங்கினார். சமூக மாற்றத் திற்கான போராட்டமும் சமத்துவத்திற்கான உறுதியும் மேலும் வலுப்பெற வேண்டிய அவசியத்தை அவர் தனது தொடக்க உரையில் வலியுறுத்தினார்.

பெரியாரும், இராம்ஸ்வரூப் வர்மாவும் – ஒரே இலட்சியத்தின் இரு விளக்குகள்

திராவிடர் கழக வெளியுறவு செயலாளர்  கோ கருணாநிதி, (அகில இந்திய ஓபிசி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர்) சிறப்புரை நிகழ்த்தினார்.

தந்தை பெரியார் ஈ.வெ.ராமசாமி அவர்களின் நூற்றாண்டு கால சுயமரியாதை இயக்கப் பயணத்தை நினைவு கூர்ந்த அவர், தென்னிந்தியாவில் பெரியார் ஆற்றிய சமூகப் புரட்சிக்கும், வடஇந்தியாவில் மகாமனா இராம்ஸ்வரூப் வர்மா மற்றும் அர்ஜக் சங்கம் ஆற்றிய சமூக விழிப்புணர்வு பணிக்கும் இடையிலான ஆழமான ஒற்றுமையை எடுத்துரைத்தார்.

ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூகநீதி, மனித சமத்துவம் மற்றும் சுயமரியாதை ஆகிய உயரிய இலட்சியங்களுக்காக போராடிய இந்த இரு மாபெரும் சிந்தனையாளர்களின் வழியில், எதிர்காலத்தில் தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கமாம் திராவிடர் கழகமும் அர்ஜக் சங்கமும் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.

அர்ஜக் பண்பாடு இளைஞர்களையும் பெண்களையும் சென்றடைய வேண்டும்

காசியாபாத்தைச் சேர்ந்த பன்னாட்டு புகழ்பெற்ற கலைஞர் டாக்டர் லால் ரத்னாகர், அர்ஜக் பண்பாட்டின் சிந்தனைகளை இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பரப்புவதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.

சமூக மாற்றத்திற்கான மிக வலிமையான கருவி பண்பாடே எனக் குறிப்பிட்ட அவர், தனது சொந்த மாவட்டமான ஜான்பூரில் விரைவில் அர்ஜக் சங்கத்தின் கருத்தியல் மாநாட்டை நடத்தப் போவதாக அறிவித்தார்.

கட்டுரை

கட்டுரை

கட்டுரை

கட்டுரை

கட்டுரை

அம்பேத்கர் – பெரியார் சிந்தனைகளை வடஇந்தியாவில் பரப்பிய அர்ஜக் சங்கம்

பன்னாட்டு எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் அம்பேத்கரிய சிந்தனையாளர்   வித்யாபூஷண் ராவத்  தனது உரையில், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகியோரின் விடுதலைச் சிந்தனைகளை வடஇந்தியாவில் பரப்புவதில் அர்ஜக் சங்கமும் மகாமனா இராம்ஸ்வரூப் வர்மாவும் அளப்பரிய பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார்.

பல பகுஜன் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் இத்தகைய வரலாற்றுப் பங்களிப்புகளை மறந்து விட்ட சூழலிலும், அர்ஜக் பண்பாடு இன்னும் உயிர்ப்புடன் தொடர்வது அதன் மக்கள் சார்ந்த அடித்தளத்தின் காரணமாகும் என்றார்.

அர்ஜக் சங்கம் எப்போதும் உழைக்கும் மக்களின், தொழிலாளர் வர்க்கத்தின், ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப் பாகத் தொடர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

பெண்களின் பங்கேற்பே
சமூக மாற்றத்தின் அஸ்திவாரம்

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ரீதா சவுதரி, அர்ஜக் பண்பாடு மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்துப் பேசினார்.

பெண்களுக்கு சம உரிமை, சம வாய்ப்பு மற்றும் சமூக மரியாதையை வலியுறுத்தி வரும் அர்ஜக் சங்கத்தின் பணியை அவர் பாராட்டினார்.

பெண்களின் முழுமையான பங்கேற்பும் தலைமையும் இல்லாமல் எந்த சமூக இயக்கமும் தனது முழு வெற்றியை அடைய முடியாது என்பதை வலியுறுத்திய அவர், பெண்களின் பங்களிப்பை மேலும் விரிவுபடுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

உண்மையான இந்தியப் பண்பாடு எது?

தலைமையுரையாற்றிய சிவ்குமார் பாரதி, “இந்தியப் பண்பாட்டின் சுமைதாங்கி – அர்ஜக் சங்கம்” என்ற கருத்தை விரிவாக விளக்கினார்.

இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தபோது சிலரிடமிருந்து எதிர்ப்புகள் எழுந்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்று இந்தியப் பண்பாடு எனக் கூறப்படுவது உண்மையில் ஆதிக்க பார்ப்பனிய பண்பாட்டின் பிரதிபலிப்பே தவிர, மக்களின் பண்பாடு அல்ல என்றார்.

சமத்துவம், சகோதரத்துவம், உழைப்பின் கண்ணியம், பகுத்தறிவு மற்றும் சமூகநீதி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அர்ஜக் பண்பாடே உண்மையான இந்தியப் பண்பாடு என்று அவர் வலியுறுத்தினார்.

மகாமனா இராம்ஸ்வரூப் வர்மாவுக்கு கலைமிகு நினைவுகூரல்

ஜான்சியைச் சேர்ந்த நாடகக் கலைஞர் மாதாபிரசாத் ஷாக்யா, “கிராந்திகர்மா – இராம்ஸ்வரூப் வர்மா” என்ற தனிநபர் நாடகத்தை அரங்கேற்றி, மகாமனாவின் போராட்ட வாழ்க்கையையும் சமூகப் பங்களிப்புகளையும் உயிரோட்டத்துடன் வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை ஆழமாக நெகிழச் செய்ததோடு, அவர்களின் சிந்தனைகளையும் தூண்டியது.

ஆய்வுலகின் பார்வையில் இராம்ஸ்வரூப் வர்மா

லக்னோ பல்கலைக்கழக ஆய்வாளர் அலோக் யாதவ், “இராம்ஸ்வரூப் வர்மா: வாழ்க்கையும் இலக்கியமும்” என்ற தனது ஆய்வின் முக்கிய அம்சங்களை விளக்கினார்.

மகாமனாவின் அறிவுசார் பாரம்பரியம், இலக்கியச் செல்வாக்கு மற்றும் சமூகப் பார்வை குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

சிறப்பான ஒருங்கிணைப்பும் குழு உழைப்பும்

நிகழ்ச்சியை டாக்டர் அனூப் பட்டேல் மற்றும் டாக்டர் திலீப் கௌதம் ஆகியோர் திறம்பட தொகுத்து வழங்கினர்.

இந்த மாபெரும் நிகழ்வின் வெற்றிக்குப் பின்னால் ஒருங்கிணைப்புக் குழுவின் அர்ப்பணிப்பான உழைப்பு இருந்தது.

ஊடக ஒருங்கிணைப்பில் மனோஜ் பாஸ்வான், நிகழ்ச்சி ஏற்பாடுகள் மற்றும் நிர்வாகப் பொறுப்புகளில் முரளி மனோஹர், ராஜ்குமார், அமித் பட்டேல், ராம்பால் வர்மா, அசுதோஷ் யாதவ், ஷ்யாமு சவுதரி மற்றும் கரண்ட் அஜெண்டா குழுவின் அனைத்து தோழர்களும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்
டாக்டர் அனூப் படேலின் கருத்து:

அர்ஜக் சங்கத்தின் 59ஆவது நிறுவன நாள் விழா, ஒரு சாதாரண ஆண்டு விழா அல்ல.

அது சமூகநீதி, பகுத்தறிவு, மனிதநேயம் மற்றும் சமத்துவத்தின் மீதான நமது உறுதியை மீண்டும் உறுதிப்படுத்திய வரலாற்று நிகழ்வாகும்.

மகாமனா இராம்ஸ்வரூப் வர்மா அவர்கள் ஏற்றி வைத்த சமூக மாற்றத்தின் தீபம் இன்னும் அணையவில்லை; அது தலைமுறைகளைத் தொடர்ந்து வழி நடத்திக் கொண்டிருக்கிறது.

இத்தகைய கருத்தியல் மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் லக்னோவிலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ஒற்றுமையுடனும் உறுதியுடனும் நாம் அனைவரும் இணைந்து இந்தப் பணியை முன்னெடுத்து செல்ல வேண்டும்.

இந்த வெற்றிகரமான நிகழ்வில் பங்கேற்ற, ஒத்துழைத்த, உழைத்த அனைத்து தோழர்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும்! என குறிப்பிட்டார்.

நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற அர்ஜக் சங்கத்தின் 59ஆவது நிறுவன நாள் விழாவில் உரையாற்றிய அனைத்து பேச்சாளர்களும் தந்தை பெரியாரின் சமூக நீதி, சுயமரியாதை மற்றும் பகுத்தறிவுச் சிந்தனைகளை உயர்வாகப் போற்றிப் பேசினர்.

அதேவேளை, இராம்ஸ்வரூப் வர்மா அவர்களின் மனிதநேய, சமத்துவ மற்றும் ஜாதி ஒழிப்புக் கொள்கைகள் தந்தை பெரியாரின் சிந்தனைகளோடு ஆழமான ஒற்றுமையைக் கொண்டிருப்பதை வலியுறுத்தி, அதற்கான தங்களது மகிழ்ச்சியையும் பெருமையையும் வெளிப்படுத்தினர்.

வடஇந்தியாவில் அர்ஜக் சங்கமும், தென்னிந்தியாவில் திராவிடர் கழகமும் முன்னெடுத்துள்ள சமூக மாற்ற பயணங்கள் ஒரே இலட்சியத்தை நோக்கியவை என்பதால், எதிர்காலத்தில் இந்த இரு இயக்கங்களும் மேலும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம் மற்றும் பகுத்தறிவின் கொடியை உயர்த்திப் பிடிக்க வேண்டும் என ஒருமித்த குரலில் வலியுறுத்தியது இந்நிகழ்வின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக அமைந்தது.

தகவல் தொகுப்பு: கோ.கருணாநிதி

கட்டுரை

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *