கொல்கத்தா, ஜூன் 2 மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக அரசாங்கம், ரயில்வே அதிகாரிகளுடன் இணைந்து மே 30, 31 அன்று ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற போர்வையில் டம் டம், உத்தர்பாரா ரயில் நிலையங்களில் புல்டோசர் மூலம் 100-க்கும் மேற்பட்ட கடைகளும், ஏராளமான சிறிய தள்ளுவண்டிக் கடைகளும் இடித்துத் தள்ளப்பட்டன.
மேலும் கடைகளை அகற்ற முற்பட்ட பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள், சிஅய்டியு தொழிலாளர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக மே 30 அன்று இரவு முழுவதும் உறுதியுடன் நின்றதோடு, இடிப்பு பணிகளை தற்காலிகமாக நிறுத்தும்படி அதிகாரிகளை கட்டாயப்படுத்தினர்.
எனினும், கூடுதல் பாதுகாப்புப் படையை கொண்டு வந்தும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தும், இடிப்புப் பணிகளைத் தொடர்ந்தனர். இந்த மனிதாபிமானமற்ற நடவடிக்கையைக் கண்டித்து சிபிஎம், சிஅய்டியு முன்னிலையில் ஞாயிறன்று மாநிலம் தழுவிய அளவில் கண்டனப் போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன.
