சென்னை, ஜூன் 2- பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவையாற்றி வரும் தகுதியான தொண்டு நிறுவனங்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசின் விருது பெற ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிப்பதாவது:
தமிழ்நாடு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண்கள் முன்னேற்றத்துக்காக சிறந்த சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகருக்கு நிகழாண்டு சுதந்திர தின நாளில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யால் விருதுகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், விருது பெற விரும்பும் சமூக சேவகர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருபவராகவும், பெண்களுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, பெண்கள் முன்னேற்றத்துக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருபவராகவும் இருக்க வேண்டும்.
சமூக சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற தொண்டு நிறுவனமாகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறப்பாக சேவையாற்றும் தொண்டு நிறுவனமாகவும் இருக்க வேண்டும்.
இந்த விருதைப் பெறுவதற்கு சென்னை மாவட்டத்தில் பெண்களின் முன்னேற்றத்துக்காக சிறந்த முறையில் சேவையாற்றி வரும் தகுதியான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூக சேவகர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜூன் 19-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார நிலையத்தில்
விவசாயிக்கு தூய்மைப் பணியாளர் சிகிச்சை அளித்த காணொலிக் காட்சி வெளியானதால் பரபரப்பு!
திருப்பத்தூர், ஜூன் 2- திருப்பத்தூர் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் இல்லாததால் காயமடைந்த விவசாயிக்கு தூய்மை பணியாளர் சிகிச்சை அளித்த காணொலி வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரை அடுத்த குனிச்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு குனிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நாள்தோறும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் அதே பகுதியை 65 வயது மதிக்கத்தக்க விவசாயி ஒருவர் நேற்று முன்தினம் (31.5.2026) விவசாய நிலத்திற்கு சென்றார்.
அங்கு பணியில் ஈடுபட்டபோது அவருக்கு நெற்றியில் சிறிய அளவில் காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த விவசாயி குனிச்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது பணியில் மருத்துவர் இல்லாததால் அங்கிருந்த தூய்மை பணியாளர் ஒருவர் விவசாயியின் காயங்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனை அங்கிருந்த ஒருவர் காணொலி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
