அய்யாவினுடைய தொலைநோக்கு, துணிவு வேறு யாருக்கும் கிடையாது!
‘‘உண்மையை சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லையே, நான், பொய் ஏன் சொல்ல வேண்டும்; எப்படி முடியும்?’’
சென்னை, மே 31 அய்யாவினுடைய தொலைநோக்கு, துணிவு வேறு யாருக்கும் கிடையாது! ‘‘உண்மையை சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லையே, நான், பொய் ஏன் சொல்ல வேண்டும்; எப்படி முடியும்?’’ என்று தந்தை பெரியார் சொன்னதை எடுத்துக் காட்டி உரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டம்!
கடந்த 23.5.2026 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள அன்னை மணியம்மையார் அரங்கத்தில், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் நடைபெற்ற 200 ஆவது கூட்டத்தில், ‘‘தந்தை பெரியார் சிந்தனையின் கூர்மை’’ என்னும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
100 ஆண்டு காலத்திற்குப் பிறகு என்ன விளைவு என்று சிந்தித்த தலைவர் தந்தை பெரியார்!
ஆகவே பெரியார் அவர்களுடைய சிந்தனை கள் என்பது காலத்தை எதிர்நோக்கிய சிந்தனை. தனக்குப் பிறகு, ஒரு 50 ஆண்டு காலத்தைப்பற்றிச் சிந்திப்பவனே, நல்ல தலைவன் என்று ஓர் இலக்கணம் உண்டு. ஆனால், 50 ஆண்டு காலம் அல்ல; 100 ஆண்டு காலத்திற்குப் பிறகு என்ன விளைவு என்று சிந்தித்த தலைவர் நம்முடைய தலைவர். அதை நாம் அனுபவிக்கிறோம்.நாம் இன்றைக்குக் கண் முன் பார்க்கிறோம்.
தமிழர் தலைவர் ஆசிரியர், பாராட்டி பயனாடை அணிவிப்பு!

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு, மாநிலச் செயலாளர் பாவலர் செல்வ. மீனாட்சிசுந்தரம், திராவிடர் கழக தொழில்நுட்ப அணி மாநில ஒருங்கிணைப்பாளர் வி.சி.வில்வம், பகுத்தறிவு ஊடகப் பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் சுப.முருகானந்தம், புதுமை இலக்கியத்தனங்கள் நெறியாளர் புலவர் வெற்றியழகன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைத் தலைவர் கவிதா, திராவிடர் கழக மாநில மகளிர் அணி பொறுப்பாளர் தேன்மொழி, வை.கலையரசன் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார் (சென்னை, 23.5.2026).
இன்றைக்குப் பாத்தீர்கள் என்றால், மின்சாரப் பேருந்து வந்திருக்கிறது. 100 ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் எழுதுகிறார், ‘‘இனி எதிர்காலத்தில், மின்சாரத்தில் பேருந்துகள் ஓடும்; கார்கள் ஓடும்’’ என்று. அன்றைக்கு அதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. ஆனால், இன்றைக்கு அவையெல்லாம் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.
சில பேர் என்ன சொல்கிறார்கள், ஆன்மிகம் என்றும் மாறாதது என்கிறார்கள். பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் முழுவதும் ஒரு பக்கம் பழைமையைப் பேசிக்கொண்டு, நவீன காலத்திய அறிவியல் கண்டுபிடிப்புகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
‘இனிவரும் உலகம்!’
பிரதமர் பிரச்சாரத்திற்குப் போகிறார் என்றால், அவர் கட்டை வண்டியில் பயணித்துப் போவதில்லை. அல்லது பழைய காலம் மாதிரி புஷ்பக விமானத்தில் பறந்து கொண்டிருக்கிறார் என்றும் சொல்ல முடி யாது. அறிவியல் விளைவுகளைத்தான் பயணம் செய்வதற்குப் பயன்படுத்துகிறார். ஆகவேதான், பெரியார் அவர்களுடைய சிந்தனைகளைப்பற்றித் தெரிந்துகொள்ளவேண்டும் என்றால், ‘இனிவரும் உலகம்’ புத்தகத்தை எடுத்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய சிந்தனைகள் அவை? எவ்வளவு காலத்திற்கு முன்பு பலவற்றைச் சாதாரணமாக சொல்லியிருக்கிறார். இன்றைக்கு அதே மாதிரி, அந்தச் சிந்தனைகள், ஒவ்வொரு இடத்திலேயும் கூர்மையான சிந்தனைகளாக மேலே மேலே வளர்கின்றன.
அது மட்டுமல்ல, ஏன் நீங்கள் இப்படிப் பேச வேண்டும்? ஏன் இந்தக் கொள்கைகளை ஏற்க வேண்டும்? ஏன் மதத்தைப்பற்றி பேசுறீங்க? இப்படியும் கேட்கிறார்கள்!
ஒரு சிறைச்சாலைக்குள்ளே போனவன், விடுதலை யாக வேண்டும் என்று சொன்னால், முறைப்படி விடுதலை பெற வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? எந்த வாசல் வழியாக உள்ளே போனானோ, அந்த வாசல் வழியாகத்தான் வெளியே வரவேண்டும். அப்போதுதான் அதற்குப் பெயர் விடுதலை என்று அர்த்தம். அப்படியில்லாமல், அவன் சுவர் ஏறி குதித்து வெளியில் சென்றால், அவன் தேடப்படும் குற்ற வாளியாக ஆக்கப்படுவானே தவிர, ஒருபோதும் விடு தலையாகிச் சென்றான் என்று சொல்ல முடியாது.
அறிவு அறிவுக்காக அல்ல; மனித சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும்!
இந்தச் சிந்தனைகளையெல்லாம் பார்த்தீர்கள் என்றால், அந்த உவமையில் இருந்து, எல்லா வகை யிலும் தனித்தன்மையோடு சிந்திக்கக் கூடியவர். அப்படி பல விஷயங்களை அய்யா அவர்கள் சிந்தித்து, கருத்துகளைக் கொட்டிக் கொண்டே இருக்கிறார். ஆகவே, நாளும், பெரியாருடைய சிந்த னைகளுடைய கூர்மை – அவருடைய அறிவைக் காட்டுவதற்கு அல்ல; அய்யா பெரியார் சொன்னார், ‘‘அறிவு அறிவுக்காக அல்ல; மனித சமுதாயத்துக்குப் பயன்பட வேண்டும். அது படிப்பாக இருந்தாலும், பதவியாக இருந்தாலும், அறிவாக இருந்தாலும், மனித சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும். ஒட்டுமொத்த மனித சமுதாயத்துக்குப் பயன்படாத அறிவு, யாருக்காக?
நான் பெரிய அறிவாளி என்று சொல்லிக் கொண்டு, ஓர் அறைக்குள் இருந்தால், அவன் அறிவினால் என்ன லாபம்? மனித குலத்துக்கு அது எவ்வளவு மிக முக்கி யம்; தத்துவங்கள் இருக்கிறது. அதனால் என்ன பயன் என்று பார்க்கவேண்டாமா?
அய்சக் நியூட்டன், தத்துவத்தைக் கண்டுபிடித்தார்; அந்தத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டுதான், மற்றவை இயங்குகின்றன. தாமஸ் ஆல்வா எடிசன், மின்சாரத்தைக் கண்டுபிடித்தார் என்றால், அந்த வெறும் மின்சாரம் அவருக்கு மட்டும் பயன்பட்டுக் கொண்டி ருந்தால், அது பயனில்லை. மிகப்பெரிய அளவுக்கு இன்றைக்கு உலகம் முழுவதும் மின்சார விளக்குகள் இருக்கின்றன. அது உலகத்திற்குப் பயன்படுகிறது. பயன்பாடு கருதித்தான், மனிதர்கள் அதை மதிக்க வேண்டும்.
அய்யாவினுடைய தொலைநோக்கு, துணிவு வேறு யாருக்கும் கிடையாது!
ஆகவேதான், பெரியார் அவர்களுடைய சிந்தனை யுடைய கூர்மை என்பது, அறிவு அறிவுக்காக அல்ல; அறிவு செயலுக்காக. அந்தச் செயல் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்று சொன்னால், முழுக்க முழுக்க மனித குலத்தினுடைய அவமானத்தைத் துடைப்பதற்கு; மனித குலத்தை வாழ வைப்பதற்கு; எல்லை, மனித குலம் என்பதுதான் மிக முக்கியம் என்று சொல்லக்கூடியது. அந்த உணர்வுகளுக்கு, அந்த முடிவுக்குத்தான் அவர் வந்திருக்கிறார்கள். இது ஒரு துளிதான். இது இனிமேதான் மிக முக்கியமான பல செய்திகள் வருகின்றன. ஆகவேதான், அய்யா அவர்களுடைய தொலைநோக்கு, துணிவு வேறு யாருக்கும் கிடையாது. அது யதார்த்தமானதாகும்.
Pragmatics என்று ஆங்கிலத்தில் ஒரு சொல் இருக்கிறது. அதாவது நடைமுறைக்கு ஒத்த விஷயம். எதையும் பெரியார் அவர்கள் இவ்வளவு பெரிய தத்து வத்தை மிக எளிமையாகச் சொல்வார். தத்துவப் பேராசிரியர்கள் என்றால் என்ன அர்த்தம்? அவர்கள் சொல்வது புரியக்கூடாது. ஆனால், பெரியார் அவர்கள், எளிமையான விஷயத்தை எடுத்து, மக்கள் மத்தி யில் சொல்லும்போது, அதற்கு இடை இடையே அய்யா விளக்கம் சொல்வார். அந்த விளக்கத்தைக் கேட்கும்பொழுது, மக்கள் எல்லோரும் சிரிப்பார்கள். சிரித்து, சிந்திக்க வைக்கக்கூடிய அளவுக்கு இருக்கும்.
அறிவு நாணயம் என்பதற்கு
அதுதான் அடையாளம்!
‘‘ஏம்பா, அவன் இந்த வேலையைச் செய்ய முடியுமா? யாரிடம், எதைக் கேட்க வேண்டும் என்று தெரிய வேண்டாமா? கல்யாணம் ஆகாதவனிடம், பொண்ணு பார்க்கச் சொன்னால், அவன் என்ன செய்வான்? உனக்குப் பெண் பார்ப்பானா, தனக்குப் பார்ப்பானா?’’ இத்தகைய உவமைகள், சிந்தனைகள் அவை அத்தனையும் லேசாக இருக்கும். ஆனால், அவை கொண்டு போய்ச் சேர்க்கிற இடம் இருக்கிறது பாருங்கள், மிக பயனுள்ள இடமாக இருக்கும். அறிவு நாணயம் என்பதற்கு அதுதான் அடையாளம்.
தன்னால் இயலவில்லை என்றால், இயலவில்லை என்று சொல்லவேண்டும் என்பார். முடியும் என்றால் மட்டும் முடியும் என்று சொல்லவேண்டும். ஆனால், ஒன்றை எடுத்துக்கொண்டால், அதை முடித்தே தீருவார். அதில் சந்தேகமே வேண்டாம். நீதிமன்றங்களாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றங்களாக இருந்தாலும் சரி, அதேபோல வீதிமன்றங்களாக இருந்தாலும் சரி, எந்த மன்றத்திேலயும் அவருடைய கருத்துகள் அறிவு நாணயத்தோடு இருந்தன.
உண்மையை சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லையே, நான் பொய் ஏன் சொல்ல வேண்டும், எப்படி முடியும்?
ஒருமுறை சொன்னார், நான் உங்களுக்குச் சொல்கி றேன், திராவிடர் கழகம் உண்மையைப் பேசக்கூடிய இயக்கம். அதற்கு உதாரணம் என்னவென்றால், இந்த மனித குலத்தினுடைய கடைசியில், மரண வாக்குமூலம் என்ற ஒன்று உண்டு. மரண வாக்கு மூலம் (Dying declaration என்று சட்டத்தில் சொல்லுவோம்) என்று சொல்லும்போது, அதற்கு எப்பொழுதும் சட்டத்தில் ஒரு வலிமை உண்டு. பெரியார் அவர்கள் சட்டம் படித்தவர் அல்ல. ஆனால், அந்தச் சட்டத்தை எவ்வளவு அழகாகச் சொல்கிறார் பாருங்கள். மரண வாக்குமூலத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளும். அதனுடைய அடிப்படை தத்துவம் என்றால், அய்யா சொல்கிறார், ‘‘சாகப் போகிற மனிதன், பொய் சொல்ல மாட்டான். அவன் சாகப் போகிற கட்டம்; ஆகவே, அவனுக்குப் பொய்ச் சொல்லத் தெரியாது. அதுபோல, மரண வாக்கு மூலம் போன்றதுதான் என்னுடைய வாக்கு மூலம். நான் பொய்ச் சொல்கிறேன் என்று சிலர் சொல்கிறான். உண்மையை சொல்வதற்கே எனக்கு நேரம் இல்லையே, நான் பொய் ஏன் சொல்ல வேண்டும், எப்படி முடியும்?’’ என்றார்.
‘‘நான் ஒரு சுய சிந்தனையாளன்’’
– தந்தை பெரியார்!
ஆகவே, ஆழமாகப் பதியக்கூடியது, பெரியாருடைய சிந்தனைகள். அவ்வளவும் அவருடைய சுய சிந்தனை கள். ‘‘நான் ஒரு சுய சிந்தனையாளன்’’ என்றார்.
நாங்கள் சட்டக் கல்லூரியில் படிக்கின்ற மாண வர்களாக இருந்தபோது, பி.எல். படிப்பை முடித்து வெளியே வருவதற்குள்ளாக, பெரியாரை எப்படியும் அழைத்து வந்து கூட்டம் நடத்த வேண்டும் என்று, கூட்டத்தில் பங்கேற்க, பெரியார் அவர்களை, நண்பர்கள் எல்லோரும் அழைத்தோம். ‘‘தமிழும், தமிழ் இலக்கியங்களும்’’ என்ற ஒரு தலைப்பு கொடுத்தோம். அந்த உரை பிறகு புத்தகமாகவும் வந்திருக்கிறது.
சட்ட கல்லூரி தமிழ் மாணவர் அமைப்பைச் சேர்ந்த வர்தான் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவார். கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வாங்க வேண்டும். Director of Legal Studies– என்ற ஒரு பதவி இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதிகள் அதில் இயக்குநராக இருப்பார்கள். பிரின்சிபலுக்கு மேலே அந்தப் பதவி.
ஏ.எஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ்.
அங்கே, நீதிமன்ற அவமதிப்புக்காக, பெரியாரை தண்டித்த வழக்கில் நீதிபதியாக இருந்த ஒருவர்
ஏ.எஸ்.பி. அய்யர் அய்.சி.எஸ். அவர் மலையாள பிராமணர். மிகவும் நகைச்சுவையாகப் பேசுவார். ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவார், வகுப்புகள் எடுப்பார். பெரியார் பங்கேற்கும் கூட்டத்திற்காக அவரிடம் அனுமதி வாங்கச் சென்றபோது, ‘‘ஓ! பெரியார் வரப்போறாரா? சரி, எப்போ?’’ என்று கேட்டுவிட்டு, ‘‘அனுமதிக்காக வந்திருக்கீங்களா? யார் உங்கள் மாணவர் தலைவர்?’’ என்று கேட்டார்.
‘‘சார், இவர்தான் தலைமை தாங்கப் போகிறார்’’ என்று சொன்னோம்.
உடனே அவர், ‘‘கூட்டத்திற்கு நான் வருகிறேன், என்னை தலைமையாகப் போடுங்கள்; பெரியாரை நான் பாராட்டவேண்டும்’’ என்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட எங்கள் எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இவர், கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பாரா? என்று சந்தேகத்துடன் சென்றோம். இவர் என்னடா என்றால், ‘‘அவர், நானே தலைமை தாங்கு கிறேன்’’ என்று சொல்கிறாரே என்று!
பெரியார், வேறு ஏதாவது பேசுவாரோ என்று நினைத்துக்கொண்டு, இவரே வருகிறாரா? என்பதும் தெரியவில்லை. மகிழ்ச்சியாக நாங்கள் அதற்கு ஒப்புக்கொண்டோம். நான், நம்முடைய கழகத்தின் பொருளாளராக இருந்த கோ.சாமிதுரை மற்றும் இன்னும் சில நண்பர்கள்.
அந்தக் கூட்டத்தில் பெரியார் , உரையாற்றுவதற்கு முன்னதாக உரையாற்றிய ஏ.எஸ்.பி.அய்யர், மிக அற்புத மாக உரையாற்றினார். ஆங்கிலம், தமிழ் இரண்டும் கலந்து உரையாற்றினார்.
‘இது என் கருத்து’ என்று சொல்லி, மேற்கோள் காட்டாத பேசக்கூடிய ஒருவர் பெரியார்தான்’’
அப்போது அவர், ஒரு பெரிய அதிசயமான ஒருவராக பெரியாரை நான் பார்க்கிறேன். ஏனென்றால், பெர்ட்ரண்ட் ரசல்பற்றி ஒரு புத்தகம் படித்தேன். பெர்ட்ரண்ட் ரசல் உலக அறிவாளி, நோபல் பரிசு பெற்றவர். அவர், இந்தியாவைப்பற்றி எழுதி இருக்கிறார். அவருடைய புத்தகத்தில், ஒரு குறிப்பு வருகிறது. அதில், இந்தியாவில் என்ன பழக்கம் என்றால், பேச்சாளர்களாக இருந்தாலும், எழுத்தாளர்களாக இருந்தாலும், பிரபலமானவர்கள் என்று சொல்லக்கூடியவராக இருந்தாலும், அவர்கள் எல்லாம், ‘‘இன்னார் சொல்லி இருக்கிறார், அவர் சொல்லி இருக்கிறார், இவர் சொல்லி இருக்கிறார்’ என்று அடுத்தவர்களை மேற்கோள் காட்டித்தான் எழுதுகிற பழக்கம், பேசுகிற பழக்கம். அப்படி மேற்கோள் காட்டாதவர்களை அங்கு கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நான் பார்த்தேன், பேச்சில், அது எந்தப் பேச்சாக இருந்தாலும், ‘இது என் கருத்து’ என்று சொல்லி, மேற்கோள் காட்டாத பேசக்கூடிய ஒருவர் பெரியார்தான்’’ என்று.
மிக அற்புதமான, அருமையான ஒரு நல்ல கணிப்பு, நல்ல மதிப்பீடு அது.
ஆகவே, தந்தை பெரியார் அவர்களுடைய சிந்தனைக் கூர்மை, அறிவு கூர்மை தெளிவானது, துணிவானது, மற்றவர்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு இருந்தாலும், பக்குவம் பெற, முதிர்ச்சி பெற, அதைப் புரிந்து கொள்வோம்.
இது ஒரு தொடக்கம்! இது தொடரும்!!
200 கூட்டங்களாக சிறப்பாக இதனை தொடர்ந்து நடத்திய பொறுப்பாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர், பகுத்தறிவாளர் கழகப் புரவலர் என்ற முறையில் உங்களையெல்லாம் வெகுவாக பாராட்டி, அனைவருக்கும் சிறப்பு செய்ய வேண்டும். 300 ஆவது கூட்டத்திற்கும் நான் தலைமை தாங்குவேன் என்று நினைக்கிறேன்! அக்கூட்டத்திற்கு என்னை கட்டாயம் அழையுங்கள்! நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
