‘திராவிடர் எழுச்சி நாள்’ விழாவில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் சிறப்புரை (பெரியகுளம், 6.6.2026)
அண்ணாமலையின் புதிய கட்சி என்பது மற்றொரு வடிவத்தில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான்; லேபிள் வேறு – அதே சரக்கு!
ஒரு நாளிலே மாற்றம் வரும் என்று மக்களிடையே சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்;
சட்டம் – ஒழுங்கு என்பதற்கு காலஅவகாசம் கேட்கக் கூடாது; மோசமடைவது தடுக்கப்படவேண்டும்
சென்னை, ஜூன் 7 அண்ணாமலையின் புதிய கட்சி என்பது மற்றொரு வடிவத்தில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான்; லேபிள் வேறு – அதே சரக்கு! ஒரு நாளிலே மாற்றம் வரும் என்று மக்களிடையே சொல்லி ஆட்சிக்கு வந்தார்கள்; சட்டம் – ஒழுங்கு என்பதற்கு கால அவகாசம் கேட்கக் கூடாது; மோசமடைவது தடுக்கப்படவேண்டும் என்று செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
முத்தமிழறிஞர் கலைஞரின் 103 ஆம் ஆண்டு பிறந்த நாளை ‘திராவிடர் எழுச்சி’ நாளாகக் கொண்டாடுவதென தாய்க்கழகமான திராவிடர் கழகம் முடிவெடுத்து, தமிழ்நாடு மட்டுமல்ல, கருநாடகா, மராட்டியம் போன்ற மாநிலங்களிலும் 103 கூட்டங்களை நடத்துவதென முடிவு செய்தது. அதன்படி, நேற்று (6.6.2026) பெரியகுளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய 103 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவினையொட்டி, திராவிடர் எழுச்சி நாளாக அப்பிறந்த நாளைக் கொண்டாடவேண்டும் என்று தாய்க்கழகமான திராவிடர் கழகம் முடிவெடுத்து, தமிழ்நாடு முழுவதும் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டைத் தாண்டி, கருநாடக மாநிலம், மராட்டிய மாநிலம் போன்ற பகுதிகளிலும்கூட திராவிடர் கழகத்தின் சார்பில், தோழமைக் கட்சிகளும், மற்றவர்களும் இணைந்து மிகச் சிறப்பாக நடத்தக்கூடிய ஒரு வாய்ப்பில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, பெரியகுளம் மாநகரத்திற்கு வரவேண்டும்; அங்கே கலைஞர் அவர்களுடைய பிறந்த நாளை, சிறப்பான எழுச்சி நாளாகக் கொண்டாடவேண்டும் என்பதற்காக மக்களையெல்லாம் சந்திக்கக்கூடிய ஓர் அரிய வாய்ப்பினை கழகத் தோழர்கள் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்கள்; அவர்களுக்கு நன்றி!
பிறந்த நாள் கூட்டத்தில், மற்ற பல முக்கிய செய்தி களைப் பேசவிருக்கிறேன். அதற்கிடையே செய்தி யாளர்களையும், ஊடகவியலாளர்களையும் சந்திப்பில் மிக்க மகிழ்ச்சி.
அண்ணாமலை ஒரு ‘புதிய அவதாரம்’ எடுத்திருக்கிறார்!
செய்தியாளர்: அண்ணாமலை புதிய கட்சி தொடங்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறாரே?

தமிழர் தலைவர்: பழைய கட்சி, (பா.ஜ.க.) அவருக்குப் புளித்துப் போய்விடவில்லை. பழைய கட்சி என்றால், அவர் ஏற்கெனவே இருந்த கட்சி- பா.ஜ.க.விலிருந்து அவர் வெளியே வருகிறேன் என்று சொல்வது, அந்தக் கட்சியின் கொள்கைப் பிடிக்கவில்லை என்பதற்காக அல்ல. அதை மாற்று உருவத்தில், மக்களை ஏமாற்ற புது ஏற்பாடு!
அந்தக் கொள்கைக்கு மறு உருவமாக, ஒரு ‘‘மாயமானாக’’, ஆர்.எஸ்.எஸ்.சால் அவர் அனுப்பப்பட்டு, தமிழ்நாட்டை என்ன செய்தாலும், தங்களால் பிடிக்க முடியவில்லை; காலூன்ற முடியவில்லை என்பதற்காக, அண்ணாமலை இப்படி ஒரு ‘புதிய அவதாரம்’ எடுத்திருக்கிறார்.
அவர், அவ்வப்பொழுது திடீரென்று சாட்டையால் அடித்துக் கொள்வார்; திடீரென்று விவசாயத்தைப் பார்க்கிறேன் என்று சொல்வார்; திடீரென்று அரசியலை விட்டு ஒதுங்கிக் கொள்கிறேன் என்பார். இப்படி பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறார். ஆனால், எந்த நிலைப்பாட்டிலும் அவர் உறுதியாக இருந்த தேயில்லை.
ஆனால், இப்போது அவர் எடுத்திருக்கும் ‘புதிய அவதாரம்’ என்பது, பி.ஜே.பி. என்ன செய்தாலும், ஆர்.எஸ்.எஸ். மூன்று லட்சம் உறுப்பினர்களை நாங்கள் அனுப்பி, இங்கே தேர்தலை நடத்தினோம், இந்த விளைவு ஏற்பட்டுவிட்டதே என்று நினைத்தினுடைய விளைவாகத்தான், டில்லியே அவரை அழைத்து, ஆர்.எஸ்.எஸ். ஆசீர்வாதம் வழங்கி (இதே அண்ணாமலையே சொல்லியிருக்கிறார், உள்துறை அமைச்சரிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டுதான் இதைச் செய்கிறேன் என்று) அனுப்பியிருக்கிறது.
உள்துறை அமைச்சரால் அனுப்பப்பட்ட ஒரு ‘மாயமான்’
எனவே, உள்துறை அமைச்சரால் (டில்லியில்) அனுப்பப்பட்ட ஒரு ‘மாயமான்’. ஆனால், இதுவரையில் அவருடைய கொள்கை என்னவென்று சொல்லவில்லை.
தனது கட்சிக்கு என்ன பெயர் என்று சொல்லவில்லை.
இருந்தாலும், பொறுத்திருந்து பார்க்க வேண்டிய அவசியமில்லை. தெளிவாகவே சொல்லலாம். இது மற்றொரு வடிவத்தில் இருக்கின்ற ஆர்.எஸ்.எஸ். கட்சி.
பி.ஜே.பி.க்கு இங்கு செல்வாக்குக் குறைந்துவிட்டது என்பதற்காக, அதே சரக்கு – புதிய லேபிளை ஒட்டலாம் என்று நினைக்கிறார்.
சரக்குப் பழைய சரக்குதான்; அதிலும் புளித்துப் போன சரக்கு. தமிழ்நாட்டில் அவற்றை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
அது எவ்வளவு வேகமாக வருகிறதோ, அவ்வளவு வேகமாகவே போய்விடும்; பொறுத்திருந்து பாருங்கள்.
ஊடகங்களினுடைய தயவினால், இரண்டு மணிநேரத்தில், 12 லட்சம் பேர் சேர்ந்தார்கள் என்று கதை சொல்லுகின்றனர்.
யார் சேர்ந்தார்கள்?
அவர் ஏற்கெனவே அமைத்திருந்த பா.ஜ.க.வில் இருந்த ஒரு கோஷ்டி, பஜனை கோஷ்டி போன்று வந்தி ருக்கிறதே தவிர, அவரால் வேறு எந்த மாற்றத்தையும் உண்டாக்க முடியாது. அவரை நம்பி, அவருக்குப் பின்னால் போவதற்கு இளைஞர்கள் தயாராக இல்லை.
அவருக்குக் கொள்கை முக்கியமல்ல; ஆனால், தனது பெருமை, கட்சி முக்கியம். அதனால், பெரிய பெரிய வார்த்தைகளையெல்லாம் சொல்வார். பயிற்சிகளைக் கொடுக்கிறோம் என்பார்.
சிறந்த மூளைகள் எல்லாம் இப்போது ஏராளமாகத் தேவைப்படுகிறது என்று சொல்கிறார். அதன் மூலமாக இருந்த மூளைகள் எல்லாம் சரியாக இல்லை என்பதை மறைமுகமாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி!
பொதுவானவர்களே அதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்!
செய்தியாளர்: ஏற்கெனவே இருந்த தி.மு.க. அரசு சட்டம்- ஒழுங்கை சரியாகக் கையாளவில்லை. நாங்கள் அதை சரிப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று த.வெ.க. முதலமைச்சர் ஜோசப் விஜய் சொல்லியிருக்கிறாரே?
தமிழர் தலைவர்: சட்டம்- ஒழுங்கு என்பது அவகாசம் வாங்கி நடத்துவதில்லை. வேறு திட்டங்களைக் கொண்டுவருவதற்கு, அவகாசம் கேட்கலாம். ஆனால், தி.மு.க. ஆட்சியை மாற்றியதற்குக் காரணமே, சட்டம் ஒழுங்குதான் என்று சொன்னார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது சொன்னவர், இன்றைய முதலமைச்சராக இருக்கிறார்; ஆனால், இன்றைக்கு நாள்தோறும் அதைவிட அதிகமாகக் குற்றங்கள் கொடுமையாக நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லும்போது, சட்டம் – ஒழுங்கு சரியில்லை என்பதை, அவரை ஆதரித்தவர்களே அதிருப்தி அடைந்து சொல்லக்கூடிய நிலையும் பொதுவாக இருக்கிறது.
விமர்சனக் கட்சிகளை விட்டுவிடுங்கள்; பொது வானவர்களே அதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆகவே, முதலமைச்சர் அவர்கள், அதில் கவனம் செலுத்தவேண்டும் என்பது மட்டுமல்ல, அதைக் காரணம் காட்டி, “உங்கள் ஆட்சியில் என்ன நடந்தது?” என்று இப்போதும் சொல்லக்கூடாது.
சட்டம் – ஒழுங்கு சிறப்பாக செயல்படுவதற்கு அவர் முன்வர வேண்டும். ஒரு நாளிலே மாற்றம் வரும் என்று மக்களிடையே சொன்னார். ஆனால், சட்டம் – ஒழுங்கு என்பது நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது.
மக்கள் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்!
மற்ற விஷயங்களில், அவகாசம் கேட்கலாம். சட்டம் – ஒழுங்கு என்பது உயிர்கள் காக்கப்படவேண்டியதாகும். அதற்கு அவகாசம் கேட்கவேண்டிய அவசியம் இல்லை. மக்கள் அதைப் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்.
எந்த மக்கள், அவர்களைத் தேர்ந்தெடுத்தார்களோ, அந்த மக்கள்தான் இப்போது அதிருப்தியோடு அவர்களை நோக்கிக் கேள்வி கேட்கிறார்கள்.
அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரே ஒரு செய்தி, முன்பு நீங்கள் கேள்வி கேட்கக்கூடிய இடத்தில் இருந்தீர்கள். இப்போது, மக்கள் அளித்த பொறுப்பினால், பதில் சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறீர்கள். இன்னமும், நீங்கள் கேள்வி கேட்கின்ற இடத்தில் இருப்பது போன்ற ‘மாயப்’ பேச்சுகள் எடுபடாது.
பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. எதற்காக உங்களுக்கு வாக்களித்தார்களோ, அந்த மக்களைத் திருப்தி செய்யக்கூடிய அளவிற்கு, ஆக்கப்பூர்வமான செய்திகள், விளக்கங்கள் இருக்கவேண்டும். இதில் வீம்புப் பேச்சுகள் இருக்கக்கூடாது.
தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குத்தான் எதிர்க்கட்சி!
எதிர்க்கட்சி என்று சொன்னால், அண்ணா அவர்கள் சொன்னதைப்போல, ‘லாலி பாடுவதற்கு அல்ல’ – தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்குத்தான் எதிர்க்கட்சி என்று.
எனவே, எதிர்க்கட்சி, அதனுடைய வேலையைச் செய்யும். ஆளுங்கட்சி, அதனுடைய வேலையைக் கவனமாகச் செய்யவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
எனவே, முதலமைச்சர் அவர்கள் இதனை மனதிலே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
நீங்கள், பதில் சொல்லுகின்ற இடத்தில் இருக்கி றீர்களே தவிர, கேள்வி கேட்கின்ற பழைய இடத்தில் இல்லை என்பதை மறந்துவிடக் கூடாது.
கலைஞரின் உண்மை விசுவாசிகளுக்கு எப்போதும் தடுமாற்றம் இருக்காது!
செய்தியாளர்: கலைஞருடைய விசுவாசிகள் த.வெ.க.விற்கு வரவேண்டும் என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அழைப்புக் கொடுத்திருக்கிறாரே?
தமிழர் தலைவர்: கலைஞர் விசுவாசிகளுக்கு எப்போதும் தடுமாற்றம் இருக்காது, தெளிவாக இருப்பார்கள். அப்படி யாராவது தடுமாறினால், அவர்கள் கலைஞரின் உண்மையான விசுவாசி அல்ல என்றுதான் அதற்குப் பொருள்.
– இவ்வாறு செய்தியாளர்களிடையே திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.
