அமெரிக்காவில் கோவிட் காலத்தில் இருந்ததை விட தற்போது மோசமாகி இருக்கும் பசி பிரச்சினை ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

3 Min Read

வாசிங்டன், மே 30- அமெரிக்காவில் கரோனா காலத்தை விட தற்போது உணவுப்பற்றாக்குறை மற்றும் பசிப் பிரச்சினை மோசமடைந்து இருப்பதாக நியூயார்க் ஃபெடரல் வங்கி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்காவின் பல மாகாணங்களில் சுமார் 1200 குடும்பங்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், செலவுகளை சமாளிக்க நீங்கள் சேமிப்பு அல்லது அவசர கால கணக்குகளில் இருந்து பணம் எடுக்க வேண்டிய சூழல் உருவானதா? போதிய உணவு கிடைக்காமல் நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ சிரமப்படுகிறீர்களா? உணவு அல்லது மளிகைப் பொருட்களை வாங்குவதற்காக உணவு நன்கொடைகள் அல்லது அரசாங்க உதவியை பெற்றீர்களா? என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுப்பப்பட்டன.

இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ள அமெரிக்க மக்களின் பதில்கள் தற்போது அமெரிக்காவில் பசி ஒரு பரவலான மற்றும் முக்கியப் பிரச்சினையாக உள்ளதை காட்டுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு கரோனா ஊரடங்கு உச்சத்தில் இருந்த போது 4 சதவீத குடும்பங்கள் மட்டுமே எங்களுக்கு போதிய உணவுகள் கிடைக்கவில்லை அல்லது குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்று கூறியிருந்த நிலையில், தற்போதைய சூழலில் அந்த எண்ணிக்கை 10 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறி இருக்கிறது.

அதே போல 2020-ஆம் ஆண்டு கரோனா காலத்தில் 21.8% குடும்பங்கள் சேமிப்பைப் பயன்படுத்தியதாக கூறி இருந்ததாகவும், அது தற்போது 33 சதவீதமாக உயர்ந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக கோடிக்கணக்கான குடும்பங்கள் உணவுக்கே போராடும் நிலை உருவாகியுள்ளதாக நியூயார்க் ஃபெடரல் வங்கியின் ஆய்வு எச்சரித்து உள்ளது. குறிப்பாகக் குறைந்த கல்வி மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் சிறு குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களிடையே உணவுப் பாதுகாப்பின்மையில் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை நாங்கள் காண்கிறோம் என்று ஆய்வாளர்கள் கூறி இருக்கிறார்கள்.

அதிபர் டிரம்ப் உருவப்படத்துடன்
கூடிய டாலர் நோட்டு

வாசிங்டன், மே 30- அமெரிக்கா உருவானதன் 250 ஆவது ஆண்டு விழா வரும் ஜூலை மாதம் நடக்கிறது. இந்த விழாவையொட்டி டிரம்ப் உருவப்படத்துடன் புதிய 250 டாலர் நோட்டு அச்சடிப்பதற்கான முன்மாதிரிகளை தயாரிக்குமாறு கருவூலத்துறை ஊழியர்களுக்கு அமெரிக்க கருவூல துறை அதிகாரி பிராண்டன் பீச் உத்தரவிட்டுள்ளதாக ‘வாசிங்டன் போஸ்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்க பெடரல் சட்டத்தின்படி, இறந்தவர்களின் உருவப்படங்கள் மட்டுமே நாணய நோட்டுகளில் இடம்பெற முடியும். டிரம்பின் உருவப்படம் ஒரு நாணய நோட்டில் இடம்பெறுவதற்கு, அமெரிக்க நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட மசோதா நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கென்யாவில் பள்ளி மாணவிகள்
விடுதியில் பயங்கர தீ விபத்து:
16 பேர் உயிரிழப்பு: 79 பேர் காயம்

கில்கில், மே 30- கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான மத்திய கென்யாவின் கில்கில் பகுதியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் பயிலும் உடுமிஷி பெண்கள் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் 28.5.2026 அன்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அப்போது தூங்கி கொண்டிருந்த மாணவிகள் அச்சத்தில், அலறியடித்து கொண்டு சிதறி ஓடினர்.

மளமளவென பற்றிய தீ விடுதி முழுவதும் பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் நீண்டநேர போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து அணைத்தனர். இந்த விபத்தில் மாணவிகள் 16 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகி விட்டனர். படுகாயமடைந்த 79 மாணவிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *