புதுடில்லி, மே 29- மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டத்தைக் கட்டாய மாக்கும் கொள்கைக்கு எதிரான மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. எனினும், இத்திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இந்தக் கட்டாய மும்மொழி திட்டத்திற்கு எதிராக யாஷிகா பண்டாரி ஜெயின் உள்ளிட்டோா் தாக்கல் செய்த மனு, தலைமை நீதிபதி சூா்யகாந்த், நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் நேற்று முன்தினம் (27.5.2026) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா்கள் முகுல் ரோத்தகி மற்றும் கபில் சிபல் ஆகியோா் ஆஜராகினா். வாதங்களை நோ்கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து 2 வாரங்களுக்குள் விரிவான பதிலளிக்குமாறு மத்திய அரசு, சிபிஎஸ்இ மற்றும் என்சிஇஆர்டி (NCERT) ஆகியவற்றுக்கு தாக்கீது அனுப்ப உத்தரவிட்டனா். மேலும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க மறுத்த நீதிபதிகள், அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தனா்.
“மொழி என்பது விருப்பத் தேர்வு சார்ந்த விஷயம். அதை யார் மீதும் திணிக்க முடியாது. இதில் கூட்டாட்சி மற்றும் அரசமைப்புச் சட்டப் பிரச்சினைகள் அடங்கி யுள்ளன” என்று கபில் சிபல் மனுதார்ர் தரப்பில் வாதிட்டார்.
சிபிஎஸ்இ-யின் புதிய மும்மொழி கொள்கை என்ன?
தேசிய கல்விக் கொள்கை-2020 (NEP) மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல் திட்டம்-2023 ஆகியவற்றின் அடிப்படையில் சிபிஎஸ்இ அண்மையில் ஒரு சுற்றறிக்கை வெளியிட்டது.
அதன் முக்கிய அம்சங்கள்
9-ஆம் வகுப்பு: ஜூலை 1 முதல் மும்மொழி பாடத் திட்டம் கட்டாயமாக்கப்படும். மாணவர்கள் படிக்கும் 3 மொழிகளில், 2 மொழிகள் கட்டாயம் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். 3ஆவது மொழியாக வெளிநாட்டு மொழியைத் தேர்வு செய்யலாம்.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விலக்கு: மாணவர்களின் சுமையைக் குறைக்க, 10-ஆம் வகுப்பில் 3ஆவது மொழிக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட மாட்டாது.
பள்ளி அளவிலான மதிப்பீடு: 3ஆவது மொழிக்கான தேர்வுகள் மற்றும் மதிப்பீடுகள் முற்றிலும் பள்ளி அளவிலேயே (அக மதிப்பீடு) நடத்தப்படும். இதன் மதிப்பெண்கள் சிபிஎஸ்இ சான்றிதழில் இடம்பெறும். 3ஆவது மொழியைக் காரணம் காட்டி, எந்தவொரு மாண வரும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவது தடுக்கப்பட மாட்டாது.
இவற்றுக்கான மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அக மதிப்பீட்டு அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ அந்தச் சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
