சென்னை விமான நிலையத்தில் மந்தகதியில் விரிவாக்கப் பணிகள்!
சென்னை, மே 29- சென்னை விமான நிலையத்தில் ரூ.1207 கோடியில் தொடங்கப்பட்ட 2ம் கட்ட விரிவாக்கப்பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், புதிய முனையம், டெர்மினல் 3 ஆகியவை செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 2025இல் 3 கோடியை கடந்தது. பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து சென்னை விமான நிலையத்தை விரிவுபடுத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு எடுத்து, ஒன்றிய அரசின் அனுமதியை, கடந்த 2017ஆம் ஆண்டு கோரியது. ஒன்றிய அரசும் அதற்கான அனுமதியை அளித்ததோடு, சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் மூலம் நிதியும் ஒதுக்கியது. அதன்படி சென்னை விமான நிலையத்தை ரூ.2,467 கோடி மதிப்பீட்டில், 2.36 லட்சம் சதுர மீட்டரில், விரிவுபடுத்துவது என்றும், இப்பணிகளை 2 கட்டங்களாக, பேஸ் 1, பேஸ் 2 என்று கட்டி முடிக்க தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி முதல் பேஸ் 1.49 லட்சம் சதுர மீட்டரில், ரூ.1,260 கோடியிலும், பேஸ் 2, 86,135 சதுர மீட்டரில், 1,207 கோடியில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. இதை தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த, அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலைய கட்டடத்திற்கு, பிரதமர் மோடி கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டில்லியில் இருந்து, காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இதில் முதல்கட்ட பேஸ் பணிகள், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, புதிய ஒருங்கிணைந்த முனையத்தை தொடங்கி வைத்தார்.
இரண்டாம் கட்ட பணிகள் 2025ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து, 2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் செயல் பாட்டிற்கு வரும் என்று சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் நாயக் கூறியிருந்தார். இந்த இரண்டாம் கட்ட புதிய முனையத்தில் 8 நுழைவாயில்கள், 60 செக்கிங் கவுன்டர்கள், 10 எக்ஸ்ரே ஸ்கேனர்கள், 9 ரிமோட் போர்டிங் கேட்டுகள், 8 ஏரோபிரிட்ஜ்கள் உள்ளிட்ட வசதிகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டு, அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இந்த புதிய ஒருங்கிணைந்த முனையம் 2026ஆம் ஆண்டு மார்ச் இறுதிக்குள் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் சென்னை விமான நிலைய புதிய கட்டுமானப் பணி, மிகவும் தாமதமாக நடந்து வருகிறது. இதுவரையில் சுமார் 40% பணிகள் தான் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இந்த கட்டுமானப் பணிகளை ஒப்பந்தம் எடுத்த ஓரிரு கட்டுமான நிறுவனங்கள் கட்டுமானப் பொருட்களின் விலை ஏற்றங்கள் காரணமாக, தங்களால் ஏற்கெனவே எடுத்த ஒப்பந்த புள்ளிகளின்படி பணிகளை செய்து கொடுக்க முடியாது என்று விலகி உள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் புதிய கட்டுமான ஒப்பந்த நிறுவனங் களை ஏற்பாடு செய்து அந்தப் பணிகளை நடத்த நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டு இருப்ப தாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே இப்பணிகளை துரிதப்படுத்தி 2026ஆம் ஆண்டு இறுதிக்குள், கட்டுமான பணிகள் நிறைவடைந்து, 2027ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்படும் ‘டெர்மினல்’ 3 செயல்பாட்டிற்கு வந்து விட வேண்டும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.
இதை தொடர்ந்து, இந்திய விமான நிலைய ஆணையத்தின் மூத்த அதிகாரிகள் கொண்ட குழுவினர், கடந்த சில நாள் களுக்கு முன்பு டில்லியில் இருந்து சென்னை வந்து விமான நிலைய கட்டுமானப் பணிகளை முழுமையாக ஆய்வு மேற்கொண்டனர்.
அதோடு இந்த பணிகளில் மேலும் காலதாமதங்கள் ஏற்படாமல், விரைந்து முடிக்கும் படி அறிவுறுத்தினர். அதோடு சென்னை விமான நிலையத்தில் அதுகுறித்து முக்கியமான ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி, கட்டுமான பணிகளை நேரடியாக ஆய்வு செய்துள்ளனர்.
தாமதம் ஏன்?
விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘புதிதாக ஓர் இடத்தில் விமான நிலையம் அமைப்பது என்றால், அந்த கட்டுமானப் பணிகள் வேகமாக செய்து முடித்து விட முடியும். ஆனால் ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் ஒரு பன்னாட்டு விமான நிலையத்திற்குள் விரிவாக்க பணிகள் நடக்கும் போது, ஏற்கெனவே நடந்து கொண்டிருக்கும் விமான சேவை களுக்கும் பயணிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படாதவாறு, மிகவும் கவனமாக, பணிகளை செய்ய வேண்டியது இருக்கிறது.
இதேபோல் பல காரணங் களால், பணிகள் நிதானமாக நடக்கிறது. ஆனாலும் வருகின்ற 2026ஆம் ஆண்டு இறுதிக்குள், பணிகள் முழு மையாக நிறைவடைந்து, புதிய ஒருங்கிணைந்த சென்னை பன்னாட்டு விமான நிலையம், 2027ஆம் ஆண்டு தொடக் கத்திற்குள் செயல் பாட்டுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றனர்.
