புதுடில்லி, மே 25- பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஒன்றிய பாஜக அரசு மக்களின் வருவாயை தவணை முறையில் கொள்ளையடித்து வருவதாகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
ஒன்றிய அரசின் பேராசை
“பெட்ரோல், டீசல் மீது தினமும் 1,000 கோடி ரூபாய் ஒன்றிய வரியாக விதித்த பிறகும் பாஜகவின் பேராசை இன்னும் தீரவில்லை. பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்த போது, அந்தப் பலனை மக்களுக்கு வழங்காமல் ஒன்றிய அரசு ஈவு இரக்கமின்றி கொள்ளையடித்தது.”
தேர்தல் பணியில் மும்முரமாக இருந்த பாஜக தலைமை, தேர்தல் முடிந்த பிறகு தியாகம் செய்யுமாறு மக்களுக்கு போதனை செய்கிறது.
தற்போது கடந்த 8 நாட்களில் மட்டும் 3ஆவது முறையாக பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி விட்டார்கள். இதன் மூலம் மக்களின் வருவாயை தவணை முறையில் அவர்கள் கொள்ளை யடிக்கிறார்கள்.
மேற்கு ஆசியாவில் போர் மூண்ட போது, பிரதமர் மோடி ‘எல்லாம் சரியாக இருக்கிறது’ என்ற மாயையை மக்களுக்கு ஊட்டினார். ஆனால், இதே காலகட்டத்தில் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பிற நாடுகள் தங்களது கலால் வரியைக் குறைத்து மக்களுக்கு உண்மையான நிவாரணத்தை அளித்தன.
பிரதமருக்கு கேள்வி
தவணை முறையில் நடைபெறும் இந்தக் கூட்டுக்கொள்ளையில் யாருக்கெல்லாம் பங்கு கிடைக்கிறது? ஏன் நீங்கள் இவ்வளவு சமரசத்திற்கு ஆளாகி விட்டீர்கள் என்பதற்குப் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குப் பதிலளிக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தில் நாட்டின் உண்மையான நெருக்கடி என்பது பாஜகவின் தலைமைத்துவம் தான் என்பதை மக்கள் இப்போது தெளிவாக உணர்ந்து விட்டனர்.ம— இவ்வாறு காங்கிரஸ் தலைவர் கார்கே தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
