சென்னை, மே 25 அய்ஏஎஸ், அய்பிஎஸ் மற்றும் அய்ஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நேற்று (24.5.2026) நடந்தது. இந்தியா முழுவதும் நடைபெற்ற தேர்வில் 5.49 லட்சம் பேர் எழுதினர். 2026ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 933 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி யுபிஎஸ்சி அறிவித்தது. பிப்ரவரி 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
நாடு முழுவதும் 8 லட்சத்து 19 ஆயிரத்து 372 பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் 83 நகரங்களில் நேற்று (24.5.2026) நடந்தது. 5.49 லட்சம் பேர் எழுதியதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்காக சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் வேலூர் ஆகிய 5 நகரங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
சென்னையை பொறுத்தவரையில், 82 மய்யங்களில் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 23 ஆயிரத்து 120 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களில் 16 ஆயிரத்து 778 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். நேற்று (24.5.2026) காலை மற்றும் பிற்பகல் என இருவேளைகளிலும் முதல்நிலை தேர்வு நடந்தது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொது பாடத் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறிவுத் தேர்வும் நடந்தது. வினாக்கள் அனைத்தும் அப்ஜெக்டிவ் வடிவில் இருந்தது.
தேர்வு எழுத காலை 7 மணி முதலே தேர்வு கூடங்களுக்கு மாணவ-மாணவிகள் வரத் தொடங்கினர். அவர்கள் கடும் சோதனைக்கு பிறகே தேர்வு கூடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சங்கர் அய்.ஏ.எஸ்.அகாடமி நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வுக்கான ரிசல்ட் 2 வாரங்களில் வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அடுத்த கட்டமாக மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெறும். மெயின் தேர்வு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி தொடங்குகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மெயின் தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். பின்னர் நேர்முக ேதர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேர்ச்சி பெறுவோருக்கு பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்றார்.
எபோலா வைரஸ் அச்சுறுத்தல் திருச்சி அரசு மருத்துவமனையில்
சிறப்பு சிகிச்சை பிரிவு அமைப்பு!

திருச்சி, மே 25 ஆப்பிரிக்க நாடுகளான காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகியவற்றில் வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் நோய் பன்னாட்டு அளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் இந்தியாவில் பரவாமல் தடுக்கும் வகையில், ஒன்றிய மற்றும் மாநில சுகாதாரத் துறையின் உத்தரவின்படி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
சிறப்புச் சிகிச்சை பிரிவு
இதன் ஒரு பகுதியாக, திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் எபோலா வைரஸ் பாதிப்புக்கான சிறப்புச் சிகிச்சை வார்டு தற்பொழுது தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் உத்தரவின்படி, அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பயணிகளிடம் பின்வரும் அறிகுறிகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவர்கள் உடனடியாகக் கண்காணிக்கப்படுவார்கள்:
காய்ச்சல், கடுமையான தலைவலி மற்றும் சோர்வு, தசைவலி மற்றும் தொண்டை வலி வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமில்லாத இரத்தப்போக்கு போன்ற எபோலா அறிகுறி உள்ள நபர்களை உடனடியாக அரசு மருத்துவமனையின் சிறப்பு வார்டில் 21 நாட்கள் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்பு கரோனா பரவலின் போது தனிமைப்படுத்தல் வார்டாகப் பயன்படுத்தப்பட்ட, திருச்சி அரசு மருத்துவமனையின் பின்புறம் உள்ள தனி பிரிவுக் கட்டடம் தற்போது எபோலா சிகிச்சைக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 5 படுக்கைகள் வீதம் மொத்தம் 10 படுக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வார்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் செயல்படும் தீவிர கண்காணிப்பு பிரிவாக மாற்றப்பட்டு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட் டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
