சென்னை, மே 25 த.வெ.க. ஆட்சிக்கு வந்த இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில், நாளுக்கு நாள் புதுப்புது பிரச்சினைகள் வெடித்து வருகின்றன. ஒரு புறம் தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கேள்விக்குறியாகி கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அதி கரித்து வருகின்றன.
மறுபுறம் த.வெ.க. அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்களால் மக்கள் முகம் சுளித்து வருகின்றனர். இந்நிலையில், கோயில்களில் த.வெ.க.வினர் ஆய்வு நடத்தி ஒளிப்படம் அனுப்புமாறு அற நிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அறிவுறுத்தியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
கோயில்களில் ‘பிரசாதம்’ வழங்கப்படுவது குறித்து தவெகவினர் ஆய்வு நடத்தி ஒளிப்படம் அனுப்புமாறு தனது கட்சியினருக்கு அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே, ஆய்வு என்ற பெயரில் த.வெ.க.வினர் பல்வேறு பகுதிகளில் அத்துமீறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், புதிதாக முளைத்துள்ள இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
