புதுடில்லி, மே 24- எபோலா என்பது மிகவும் ஆபத்தான, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான வைரஸ் தொற்றுநோயாகும். இது மனிதர்கள், மனிதக்குரங்கு போன்ற பாலூட்டிகளைப் பாதிக்கும் ஒரு கடுமையான குருதிப் போக்கு காய்ச்சல் வகையைச் சேர்ந்தது.
1976ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்க நாடுகள்தான் பரவலின் முக்கிய இடமாக உள்ளன. இதுவரை சுமார் 15,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்கப் பேரிடர் (2014-–2016) தான் எபோலா வரலாற்றிலேயே மிகக் கொடிய, பெரிய பரவல் ஆகும்.
கட்டுப்பாடு
இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் மீண்டும் எபோலா வைரஸ் தொடங்கி யுள்ளது. உலக சுகாதார அமைப்பின் வகைப்பாட்டின் அடிப்படையில், காங்கோ ஜனநாயகக் குடியரசு, உகாண்டா, தெற்கு சூடான் ஆகிய நாடுகளில் எபோலா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
அவசரநிலைஅறிவிப்பு
இதனால் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் பயணிகளுக்கு எபோலா எச்சரிக்கைக்கான அவசர நிலையை அறிவித்துள்ளது ஒன்றிய அரசு.
இதுதொடர்பாக ஒன்றிய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “எபோலா வைரஸ் பாதிப்புள்ள நாடுகளிலிருந்து வரும் அல்லது அந்த நாடுகள் வழியாகப் பயணிக்கும் பயணிகள் எபோலா அறிகுறிகள் அல்லது பாதிப்புள்ளவர்களுடன் தொடர்பில் இருந்த வரலாற்றைக் கொண்ட பயணிகள், குடியுரிமைத் துறை அனுமதிக்கு முன்பாகவே விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தகவல்கள் தெரிவிக்க வேண்டும். அறிகுறிகள் இருந்தால் தனிமைப்படுத்த வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.
டில்லி
இதனை தொடர்ந்து டில்லி பன்னாட்டு விமான நிலையத்தில், “பயணிகள் தங்களுக்குக் காய்ச்சல், உடல் சோர்வு, தலை வலி, தசை வலி, வாந்தி, வயிற்றுப் போக்கு, தொண்டை வலி, குருதிப் போக்கு போன்ற அறிகுறிகள் ஏதேனும் தென்படுகிறதா என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்தியா வந்திறங்கிய 21 நாட்களுக்குள் பயணிகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும், பயண வரலாற்றை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும்.” என தாக்கீது ஒட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் பாதிப்பு இல்லை
எபோலா தடுப்புத் தயார்நிலை, அதன் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, ஒன்றிய சுகாதாரத் துறைச் செயலாளர் புண்ய சலிலா சிறீவஸ்தவா தலைமையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சுகாதாரச் செயலாளர்களுடனான உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் 2 நாட்களுக்கு முன் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பின் இந்தியாவில் இது வரை யாருக்கும் எபோலா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இருப்பினும், எபோலா பாதிப்பை உலக சுகாதார அமைப்பு ‘பன்னாட்டுக் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலை’யாக அறிவித்ததையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு தழுவிய கண்காணிப்பு, தயார் நிலை நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
