புதுடில்லி, மே 23 நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ‘நீட்’ தேர்வு கேள்வித்தாள் கசிந்த விவகாரத்தில், இயற்பியல் வினாத்தாளை கசிய விட்டதாக புனேவைச் சேர்ந்த பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தார் என்பவரை சிபிஅய் (CBI) அதிகாரிகள் நேற்று (22.5.2026) கைது செய்தனர்.
‘நீட்’ கேள்வித்தாள் கசிவு
கடந்த மே 3ஆம் தேதி நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இத்தேர்வின் கேள்வித்தாள் முன்னரே கசிந்தது அம்பலமானதை அடுத்து, தேர்வு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாலய முறைகேடு தொடர்பாக சிபிஅய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கேள்வித்தாள் கசிவு வழக்கில் நாடு தழுவிய அளவில் சிபிஅய் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை டில்லி, ஜெய்ப்பூர், குருகிராம், நாசிக், புனே, லத்தூர் மற்றும் அஹல்யநகர் ஆகிய பல்வேறு இடங்களைச் சேர்ந்த 11 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேராசிரியை கைது
தற்போது புனேயில் உள்ள ‘சேத் ஹிராலால் சரஃப் பிரஷாலா’ பள்ளியில் பணியாற்றி வரும் மனிஷா சஞ்சய் ஹவல்தார், நீட் இயற்பியல் வினாத்தாளைக் குறிப்பிட்ட சில தேர்வர்களுக்குக் கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்வழக்கில் ஏற்ெகனவே கைது செய்யப்பட்ட புனேயைச் சேர்ந்த தாவரவியல் பேராசிரியர் மனிஷா மந்தாரேவுக்கு, இந்த இயற்பியல் கேள்வித்தாளை பேராசிரியை மனிஷா சஞ்சய் ஹவல்தார் பகிர்ந்து கொண்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான ஆதாரங்கள் திரட்டப்பட்டதைத் தொடர்ந்து, சிபிஅய் அதிகாரிகள் நேற்று அவரை முறைப்படி கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் சிபிஅய் அதிகாரிகள் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
