புதுடில்லி, மே22 சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுக்கான மதிப்பீடு மற்றும் மறுமதிப்பீடு செயல்முறைகளை அவசரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் (எம்பி) ஜான் பிரிட்டாஸ் கடிதம் எழுதியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், அது குறித்து ஜான் பிரிட்டாஸ் தனது கடிதத்தில் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்பி குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு. கடந்த 2025ஆம் ஆண்டில் 88.39 சதவீதமாக இருந்த ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு (2026) 85.20 சதவீதமாகக் குறைந்துள்ளது.
மறுபரிசிலனை
தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, மாணவர்கள, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான அதிர்ச்சியும் பரவலான பதற்றமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இயற்பியல் (Physics) மற்றும் கணிதம் (Mathematics) ஆகிய பாடங்களின் வினாத்தாள்கள் மிகவும் கடினமாக இருந்ததாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட திரையில் மதிப்பெண் வழங்கும் முறை (On-screen marking system) மற்றும் கடுமையான மதிப்பீட்டு நடைமுறைகளே தேர்ச்சி விகித வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் எனப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“மாணவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, தற்போதைய சிபிஎஸ்இ மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடு செயல்முறைகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும்” இவ்வாறு அந்த கடிதத்தில் ஜான் பிரிட்டாஸ் எம்பி வலியுறுத்தியுள்ளார்.
